OBJECTIVE - புறநிலைக் கோணங்கள்
SUBJECTIVE - அகநிலைக் கோணங்கள்
POINT-OF-VIEW - பார்வை இலக்குக் கோணங்கள்
மேற்குறிப்பிட்ட மூன்று வகையாகக் கேமராக்கோணங்களைப் பிரித்திருக்கிறார்கள்.
OBJECTIVE கோணங்கள்: பக்கவாட்டிலிருந்து படம் எடுக்கப்பட்டிருக்கும். அதாவது திரையில் நடிக்கும் நடிகனின் பக்கத்தில் ஒருவர் கேமராவிற்கு தெரியாமல் நின்றுக்கொண்டுபார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி கேமராக்கோணம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் பார்வையாளன் நடிகர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து பார்ப்பதுப்போல(candid camera treatment) பார்வையாளனின் பார்வையாக(audience point of view) படமாக்கப்படும். காட்சியில் பங்குபெறும் எந்த நடிகரின் பார்வையாகவும் அது இருக்காது. சொல்லப்போனால் நடிகர்கள் கேமரா ஒன்று இருப்பதையே உணரமாட்டார்கள். நடிகர்கள் எந்தக் காரணம் கொண்டும் கேமராவையோ அல்லது 'லென்சையோ' பார்க்கக் கூடாது, அப்படிப் பார்த்தால் அந்த ஷாட் re-take எடுக்கப்படவேண்டும். OBJECTIVE கோணம் என்பது வெளியே இருந்துப் பார்க்கப்படும் ஒரு பொது கோணமாக இருக்கும். திரைப்படத்தின் பெரும்பகுதி OBJECTIVE கோணத்தில்தான் எடுக்கப்படுகின்றன.
என்ன பார்க்கிறார்? |
இவங்களைத்தான் பார்க்கிறார் |
கேமரா பார்வையாளனின் இடத்தில் வைக்கப்பட்டு அவன் பார்வையாக..
1. ஒரு மியூசியத்தைச் சுற்றிக்காட்டலாம், அதாவது அவனே நடந்துச்சென்று பார்ப்பதுப்போல.
2. ஒரு தொழிற்சாலையில் கேமரா மெதுவாக நகர்த்துவதின் மூலம் அவனுக்கு கருவிகளின் செயல்பாடுகளை காட்டலாம்.
3. SUBJECTIVE கேமராக்கோணத்திற்கு சரியான உதாரணம், கேளிக்கைப் பூங்காக்களில்(வி.ஜி.பி, கிஷ்கிந்தா மாதிரி) வளைந்து வளைந்துச்செல்லும் பாதைகளில் செல்லும் தொடர்வண்டியில்(roller coaster) அமர்ந்துசென்றால் எப்படி இருக்கும். அந்த அனுபத்தை பார்வையாளன் உணர அவனிடத்தில் கேமராவை வைத்து படமாக்குவார்கள். அப்படி படமாக்கப்பட்ட படத்தை பெரிய திரையில் பார்வையாளன் பார்க்கும் போது தானே அந்த வண்டியில் உட்கார்ந்துசெல்லுவதாக உணர்வான்.
இந்த வகையில் விமானத்தில் விமானி இடத்தில் பார்வையாளனை உட்காரவைக்கமுடியும். காரின் ஓட்டுனர் இடத்தில் பார்வையாளனை உட்கார வைத்து வளைந்துசெல்லும் மலைப்பாதைகளை உணர வைக்க முடியும்.
4. வேகமாக கேமராவை கீழே விழவைப்பதின் மூலம் உயரத்திலிருந்து விழும் மனிதனின் மனநிலையை பார்வையாளனுக்கு உணரவைக்க முடியும், இந்த வகையில் மேலெழும்பும் பந்து(ball), தரை இறங்கும் விமானம் அல்லது குதிரையோட்டும் குதிரையோட்டியென எந்த இடத்தில் வேண்டுமானாலும் கேமராவை வைத்து பார்வையாளனின் பார்வையாக உணர வைக்க முடியும்.
மேற்கூறிய உதாரணங்களில், பொதுப்பார்வையாக யாரோ ஒருவரின் பார்வையாக இல்லாமல் தானே பார்ப்பதாக உணர்கிறான். காட்சியில் தானே பங்கு பெறுவதாக நினைக்கிறான். OBJECTIVE கேமரா கோணம் ஷாட்டுகளின் இடையே இந்த வகை SUBJECTIVE கோணங்கள் வரும் போது அது பார்வையாளனின் உணர்ச்சியை அதிகரித்து கதையோடு அவனது இருத்தலை அதிகரிக்கிறது.
நடிகனின் இடத்தில் கேமராவை வைத்து படமாக்கப்படும் கோணத்தின் மூலம்..
கேமரா லென்ஸை நேராக பார்க்கிறார். அதாவது நடிகனை |
பார்வையாளனின் பார்வையாக அல்லது நடிகனின் பார்வையாக படம் பிடிக்கப்படும் கோணங்கள் இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. அது நடிகனின் பார்வையாக காட்டும் காட்சிக்கு முன்பாக அந்த நடிகனின் ஒரு குளோசப் ஷாட் அவன் திரைக்கு வெளியே பார்ப்பதாக காட்டப்படவேண்டும், ஆனால் பார்வையாளனின் பார்வையாக காட்டப்படும் காட்சியை நேரடியாக OBJECTIVE கோணத்திலிருந்து cut செய்து SUBJECTIVE காட்சிக்கு வரலாம். இதை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்.
இதே முறையில் விமானியின் பார்வையாக,கார் ஓட்டியின் பார்வையாக அல்லது பூங்காவில் அமைதியாக அமர்ந்திருக்கும் மனிதனின் பார்வையென எந்தக் காட்சியிலும் நடிகர்களின் பார்வையாக பார்வையாளனை பார்க்க வைக்க முடியும்.
கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இயக்கத்திலிருக்கும் கேமராவின் கோணம்(thrilling moving camera ride) என்பது எப்போதும் 'SUBJECTIVE கேமராக்கோணம்' ஆகும். அதுவே நிலையாக இருக்கும் கேமராவின் கோணம்(static shots) என்பது அந்தக் காட்சி 'எடிட்' செய்யப்பட்டிருக்கும் முறையைப் பொருத்து அந்த ஷாட் 'SUBJECTIVE கோணமா' அல்லது 'OBJECTIVE கோணமா' என்பதை முடிவுச்செய்யமுடியும். அதாவது பூங்காவில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நடிகனின் குளோசப் ஷாட் போட்டுவிட்டு கேமராக் கோணத்தில் ஷாட் போட்டால் அது அந்த நடிகனின் பார்வையாக கருத முடியும், அதனால் அது 'SUBJECTIVE கோணமாக' கொள்ளலாம். அதுவே அந்தக் குளோசப் ஷாட் இல்லாமல் நேரடியாக கேமராக் கோணத்தில் ஷாட் போட்டால் அது 'OBJECTIVE கோண ஷாட்டாக' கொள்ளவேண்டும்.
இப்படி 'SUBJECTIVE கேமராக்' கோணத்தில் படமெடுப்பதில் சில கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள் இருக்கின்றன. இப்படி படம் எடுக்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பிரச்சனைகள்:
1. ஒரு நடிகனின் பார்வையாக காட்சி படமாக்கும் போது அந்தக் காட்சியில் பங்குபெறும் சக நடிகன் அந்த நடிகனைப் பார்க்க நேரடியாக லென்சைப் பார்க்க வேண்டும். அதில் அந்த சக நடிகன் சட்டென்று திரையில் தோன்றி கேமராவைப் பார்க்கும் போது பார்வையாளன் அதிர்ச்சி அடைகிறான், இதனால் அவன் கவனம் சிதைக்கப்படுகிறது. அதனால் இந்த மாதிரியான காட்சிகளில் மிகுந்த கவனமாக ஷாட் பிரிக்க வேண்டும். ஒரு OBJECTIVE ஷாட்டில் சக நடிகனை காட்டிவிடுவதின் மூலம் அந்த அதிர்ச்சியைத் தவிர்க்கலாம்.
2. சட்டென்று 'OBJECTIVE' ஷாட்டிலிருந்து 'அகநிலைச்' ஷாட்டுக்கு cut செய்து சக நடிகனை லென்சைப் பார்க்க வைக்க கூடாது. இது பார்வையாளனை குழப்பும்.
3. முழுக்க முழுக்க 'SUBJECTIVE' கேமராக் கோணத்தில் படமாக்கினால் அதில் சில கஷ்டங்கள் உள்ளன. அதாவது எந்த நடிகனின் பார்வையாக காட்சி படமாக்கப்படுகிறதோ அந்த நடிகனை பார்வையாளன் அதன் பின் பார்க்கவே முடியாது. ஒன்று அந்த நடிகனை காட்சியில் இடம் பெற்றிருக்கும் கண்ணாடிகளில் பிரதிபலிப்பாக பார்க்கலாம் அல்லது மற்ற சக நடிகர்கள் அவனைப் பார்ப்பதாக கேமராவைப் பார்ப்பதின் மூலம் அந்த நடிகனின் இருத்தலை உணரலாம். இப்படி பார்வையாளன் நடிகனைப் பார்ப்பதின் மூலம் அவனால் அந்தக் காட்சியை முழுமையாக உள்வாங்கி அந்தக் காட்சியோடு ஒன்றிப்போக முடியாது. இதனால் இந்த மாதிரியான படம்பிடித்தலில் கவனமாக இருக்கவேண்டும்.
இப்படி சில பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகளை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. மேலும் இந்த 'SUBJECTIVE கேமராக் கோணத்தை' 'flash back' யுக்திக்கு எப்படி பயன்படுத்துவது, 'Interview' மற்றும் 'Documentary Film'-க்கு எப்படி பயன்படுத்துவதென இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அதையெல்லாம் விரிவாக இங்கே பார்த்தால் உங்களுக்கு இதுவரை புரிந்ததும் புரியாமல் போய்விடும். அதனால் இந்தக் கட்டுரை அறிமுகத்திற்காகவே எழுதப்படுவதினால் மீதியை அப்புறம் வேறு கட்டுரையில் விவரிக்கிறேன்.
POINT-OF-VIEW - பார்வை இலக்குக் கோணங்கள்:
POINT-OF-VIEW அல்லது அதன் சுருக்கம் p.o.v ஷாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வகைக் கேமராக் கோணம் ஒரு குறிப்பிட்ட நடிகனின் பார்வையாக பதிவுசெய்கிறது. p.o.v என்பது ஒரு 'OBJECTIVE', ஆனாலும் இது 'OBJECTIVE' கோணத்திற்கும் 'அகநிலைக்' கோணத்திற்கு இடையே இருப்பதினால் இது தனிவகை கோணமாக கருதப்படுகிறது.
அருகில் நின்று.. |
இப்படி படமாக்கும் போது அந்த நடிகனை திரைக்கு வெளியே நிறுத்தி சக நடிகன் அவனைப்பார்த்து பேச வைக்க, சக நடிகன் கேமராவிற்கு அருகில் பார்க்க வேண்டும், நேரடியாக லென்ஸ்யை அல்ல. (looks slightly to the side of the camera - not into the lens).
கேமராவிற்கு பக்கத்தில் பார்க்கிறார். |
ஒரு நடிகனின் திரைக்கு வெளியே பார்க்கும் ஷாட்டுக்கு அப்புறம் காட்டப்படும் p.o.v ஷாட்டுகள் அந்த நடிகனின் பார்வையாக கொள்ளப்படும். அவன் சக நடிகர்களைப் பார்க்கலாம் அல்லது தன் சுற்றுப்புறத்தைப் பார்க்கலாம். அப்படி படமாக்கப்படும் ஷாட்டுகளில் சக நடிகர்கள் அந்த நடிகனைப் பார்க்க லென்சைப் பார்க்க கூடாது, கேமராவிற்கு அருகில் பார்க்க வேண்டும்.
செய்யக்கூடாதவைகள்:
இப்படி p.o.v ஷாட்ஸை பயன்படுத்தும்போது. ஒரு நடிகனின் திரைக்குவெளியே பார்க்கும் ஷாட்டைக் காட்டி விட்டு அவன் பார்ப்பதாக வரும் p.o.v ஷாட்டை 'pan' செய்து அவனையே காட்டக்கூடாது. ஏனெனில் ஒருவன் தன்னைத்தானே அவன் பார்வையாக பார்த்துக்கொள்ள முடியாது.
அதேபோல் ஒரு நடிகனை திரைக்குவெளியே எதையோ பார்த்துவிட்டு, உதாரணத்திற்கு ஒரு சுவர்கடிகாரத்தை பார்க்கும் ஷாட்டிற்கு பிறகு, அந்த நடிகன் அந்தச் சுவர் இருக்கும் பக்கமே வெளியேறுவதாகக் காட்டக்கூடாது. எப்போதும் அதற்கு மாறுபட்ட திசையில்தான் வெளியேற வேண்டும்.
என்ன வகையான கோணங்கள் என்பதைப் பார்த்தோம். அடுத்தது, கேமராக்கோணத்தைத் தீர்மானிப்பது எவை என்பதைக் காணலாம். அதற்கு மிகமுக்கிய மூன்று அம்சங்கள் இருக்கின்றன. அவை
SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.
இதை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அதற்கு முன்பாக நாம் இந்தக் கட்டுரையில் என்ன தெரிந்துக்கொண்டோம் என்பதின் சுருக்கம்:
1. OBJECTIVE கோணம்: பொதுவான கேமராக்கோணம். திரையில் இல்லாத மூன்றாவது நபரின் பார்வையாக.
2. SUBJECTIVE கோணம்: நேரடியாக சம்மந்தப்படுத்துவது. நடிகரின் பார்வையாகவோ அல்லது பார்வையாளனின் பார்வையாகவோ இருப்பது.
3. p.o.v ஷாட்ஸ்: பார்வையாளனை சம்மந்தப்படுத்துவது இல்லை, ஆனால் நடிகனின் அருகிலிருந்தும், அவன் பார்வையாகவும் பார்ப்பது.
முந்தையக் கட்டுரையில் கேட்கப்பட்டக் கேள்விக்கான பதில்கள்:
1. பத்தாவது சீன், நான்காவது ஷாட், எட்டாவது take என்பதை எண்ணில் எப்படி குறிப்பீர்கள்?
பதில்: 10/4/8
2. உயரே பறக்கும் விமானத்தை கீழே இருந்துப் படம் எடுக்க பயன்படும் கோணத்திற்கு என்ன பெயர்?
பதில்: Low Angle
3. வானத்தில் உயரே பறக்கும் பறவையின் பார்வையிலிருந்துப் பார்க்கும் கோணத்திற்கு என்ன பெயர்?
பதில்: Bird's Eye View
Arial View என்பது பொதுவான பெயர், அதாவது வானத்திலிருந்து பார்க்கும் முறைக்கான பெயர். அது விமானத்திலிருந்தும் இருக்கலாம், செயற்கைகோளிலிருந்தும் இருக்கலாம்.
அதேப்போல் ஒரு புழுவின் பார்வையில் ஷாட் வைத்தால், அதாவது தரையோடு தரையாக அதற்கு 'Worm View' என்றும் 'Fish Eye View' என்று ஒன்று உண்டு, அது 180 டிகிரிக்கு மேலாக பார்க்கும் கோணத்தைக் குறிப்பது.
Fish Eye. |
இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:
1. கேமராக்கோணம் அமைத்தலில் பூர்த்தி செய்ய வேண்டிய இரண்டு தேவைகள் என்ன?
2. ஒரு நிலையான கேமராக் ஷாட்டை 'அகநிலைக் கோணமா' அல்லது 'புறநிலைக் கோணமா' என்பதை எப்படி முடிவுசெய்வது?