எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்..! என்பது போல, எத்தனைக்கோடி அழுகு வைத்தாய் என்றுச் சொல்லலாம். நம்மைச் சுற்றி இருக்கும் அழகை நாம் பார்க்க துவங்கினால் அதன் எல்லை விரிந்துக்கொண்டேப் போகிறது. அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தின் அழகை பார்க்கும் முயற்சிப்பதின் வெளிப்பாடாகவே இந்த பதிவுகள். முந்தைய பதிவான 'மாலை வெயில் சிதறிக்கிடந்தது' அப்படி ஒரு முயற்சியே..
எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பார்களே.. அதுதான்..
ஒரு புகைப்படக்காரனாக, ஒளிப்பதிவாளனாக நான் பார்ப்பவை அனைத்தும் ஒளிச்சார்ந்தே இருக்கிறது. எதுவும் பிம்பம் சார்ந்தே மனதில் பதிகிறது. அப்படி நம் பகல் வெளிகளிலும் இரவுகளிலும் பரவிக்கிடக்கும் ஒளிகளை பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதன் பயிற்சியாகவே இந்த முயற்சிகள். நம்முடைய திரைப்படங்களில் பகல், இரவு என்றுதான் பதிவுசெய்யப்படுகிறது. எழுதப்படும் போதே அப்படித்தான் குறிக்கிறார்கள். ஆனால் நம்முடைய பகல் என்பது எத்தனை மாறுபட்ட ஒளிகளைக் கொண்டிருக்கிறது. சூரியன் உதிப்பதற்கு முன் துவங்கி மறையும் வரை எத்தனைவித பகல் நம்மிடையே இருக்கிறது.
சிலப்படங்களில் சூரிய உதயத்தையும், மறைவையும் பதிவுச்செய்திருக்கிறார்கள். அதுவும் வானத்தைதான். அந்த நேர பூமியை அல்ல. பிரபல ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை' படத்தில் 'பொன்மேனி உருகுதே' பாடல் முழுக்க முழுக்க அந்திப்பொழுதில் எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு அவர் பல நாட்கள் எடுத்துக்கொண்டார் என அறியமுடிகிறது.
மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒருமுறைச் சொன்னார். "ஒவ்வொரு நொடியும் ஒளி மாறிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இப்போது பார்ப்பது போன நொடியில் பார்த்த அதே ஒளியை அல்ல" என்று. உண்மைதான். அந்த வார்த்தை முழுக்க உண்மையைச் சார்ந்ததுதான்.
நான் ஒளிப்பதிவாளனாக பணிபுரிந்த 'புகைப்படம்' மற்றும் 'மாத்தியோசி' படங்களில் அப்படி ஒளிகளை பதிவுசெய்ய முயற்சி செய்துள்ளேன். 'புகைப்படத்தில்' கொடைக்கானலின் மாலை நேரங்களை எந்தவித செயற்கை ஒளிகளைப் பயன்படுத்தாமல் பதிவுசெய்ய முயன்றிருக்கிறேன்.
'ஒரு குடையில் பயணம்' மற்றும் 'வான் நிலவுதான்' பாடலிலும் அத்தகைய காட்சிகள் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
'மாத்தியோசியில்' சென்னையின் இரவை எந்தவித செயற்கையான ஒளியமைப்புகளும் இல்லாமல் பதிவுசெய்ய முயன்றிருக்கிறேன். அதை நீங்கள் 'தொம்தொம் தொம்தொம்' என்று தொடங்கும் படலிலும் அதைத்தொடர்ந்து வரும் துரத்தல் காட்சியிலும் பார்க்கலாம். அந்தக் காட்சிகள் தி-நகரில் மேம்பாலத்தில் எடுத்தது. எந்த விளக்கையும் பயன்படுத்தவில்லை. அப்படியே அங்கே அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்கின் ஒளியில் எடுக்கப்பட்டது. 'Negative Developing' போது '2 stop - Push Processing' செய்யப்பட்டது.
மாலைநேரங்களில் பகல் முடிந்து இரவு வருவதிற்கு முன்பாக ஒரு ஒளி இருக்குமே அந்த ஒளியை 'Twilight' என்கிறோம். தமிழில் அந்திப்பொழுது என அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அது மிக மென்மையான ஒளி. நீலம் அதிகமாக இருக்கும். நாம் பெரும்பாலும் அந்த ஒளியை பார்க்கிறோம். அதை ஒளிப்பதிவில், புகைப்படத்தில் கொண்டுவர பெரும்பாலும் எல்லா ஒளிப்பதிவாளர்களும் முயற்சிப்போம். ஆனால் அந்த ஒளி ஐந்து நிமிடம் கூட இருக்காது, அதற்குள் இருட்டிவிடும். அதனால் அதைப் பதிவுசெய்யவேண்டும் என்றால் தயாராக இருந்து அந்த ஐந்து நிமிடத்திற்குள் படம் எடுத்துவிட வேண்டும்.
எனக்கு 'Twilight'-இல் படமெடுப்பது ரொம்ப பிடிக்கும். அப்படி சமிபத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அப்போது Twilight-இல் நான் எடுத்த சில படங்கள் இங்கே.
1 |
2 |
3 |
4 |
1+2+3+4=சொதப்பலான ஒரு பெனோரமிக் முயற்சி(டிரைப்பேட் இல்லை) |
'Photoshop'-ஐப் பயன்படுத்தி சீரமைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நீல நிறம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. வண்ணமையமாக இருப்பதிற்காக.
இது பகலும் அல்ல இரவும் அல்ல....