கேமராக் கோணத்தைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் உள்ளன. குறிப்பாக அந்தக் கதையின் தன்மை, அதன் தேவை ஆகியவற்றைப் பொறுத்தே கேமராக் கோணம் அமைக்கப்படவேண்டும். இரண்டு முக்கிய தேவையை கேமராக் கோணம் அமைத்தலில் நாம் பூர்த்தி செய்யவேண்டும். அந்தக் காட்சியைப் பார்வையாளன் பார்க்க சரியான 'பார்வைக் கோணம்(View Point) மற்றும் எவ்வளவு 'பரப்பளவை' (Area Covered) அந்த ஷாட் காட்டப்போகிறது என்பது. ஒவ்வொரு தடவையும் கேமரா இடம் மாறும்போதும் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தேடவேண்டும்.
இதிலிருந்து நாம் முடிவுக்கு வரவேண்டியது, 'கேமராக் கோணம்' என்பது ஒரு காட்சியை பார்வையாளன் சரியான இடத்திலிருந்து(best viewpoint) பார்க்க அனுமதிப்பதும், எந்த அளவு பரப்பளவைப்(How much area) பார்க்கிறான் என்பதையும் தீர்மானிப்பதும் எனக் கொள்ளலாம்.
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'கேமராக் கோணம்' கதையில் பார்வையாளனை ஈடுபாடு கொள்ளவைக்கிறது, அதுவே கவனக்குறைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'கேமராக் கோணம்' பார்வையாளனை கதையிலிருந்து அன்னியப்படுத்துகிறது, ஏனெனில் திரையில் நடக்கும் செயலை அவன் சரியாகப் பார்க்க முடியாத போது, என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியாதால் கதையோட்டதில் ஆர்வம் குறைந்து அவனை எரிச்சல் அடையச்செய்கிறது. ஆகவே ஒரு ஷாட்டை வடிவமைக்கும்போது சரியான 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுப்பது முக்கியமாகிறது.
சில திரைக்கதைகள் அதற்குத் தேவையான கேமராக் கோணத்தைத் தீர்மானித்தாலும், இயக்குனர் படம் எடுக்கும் போது தமக்குத் தேவையான கோணத்தைத் தீர்மானித்துக்கொள்ள முடியும். ஒளிப்பதிவாளர் கதை மற்றும் இயக்குனரின் ஆலோசனையுடன் 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுக்கிறார். பெரும்பான்மையான இயக்குனர்கள் அதை ஒளிப்பதிவாளரின் பொறுப்பில் விட்டு விடுவது உண்டு. சில இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க தளத்திற்குச் செல்லுவதிற்கு முன்பாகவே, ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் ஆலோசனையுடன் 'story board' வரைந்து கொண்டு தங்களின் கேமராக் கோணத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
Low Angle |
Top Angle |
ஒரு பார்வையாளனை எதைவேண்டுமானாலும்(anything) எங்கிருந்து(anywhere) வேண்டுமானாலும் எந்தக் கோணத்திலும்(any angle) உடனுக்குடன்(instantly) பார்க்கவைக்க முடியும். ஒளிப்பதிவாளர் மற்றும் 'எடிட்டர்'(Editor) துணைகொண்டு திரைப்படத்தில் இதை சாத்தியப்படுத்த முடியும். இதுவே திரைப்படத்தின் மிகப் பெரிய பலம். ஆகவேதான் சரியான 'கேமராக் கோணத்தைத்' தேர்ந்தெடுப்பது அதிமுக்கியமாகிறது.
அதற்கு முன்பாக நாம் முக்கியமான மூன்று விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.
சீன் : Scene
ஒரு சீன் என்பது அந்தக் காட்சி நடக்கும் இடம் அல்லது தளத்தைக் குறிப்பது. ஒரு காட்சி என்பது ஒரு சீனாகவோ(Scene) அல்லது பல சீனாகவோ பிரிக்கப்பட்டிருக்கும். அதே போல் ஒரு சீன் என்பது ஒரு ஷாட்டாகவோ(shot) அல்லது பல ஷாட்டாகவோ காட்சியின் தொடர்ச்சியைப் பொறுத்துப் பிரிக்கப்பட்டிருக்கும்.
ஷாட்: shot
ஒரு ஷாட் என்பது கேமராவைக் கொண்டு எந்த வித இடை நிறுத்தமும் இல்லாமல் தொடர்ச்சியான பார்வைக்கு படம் பிடிக்கப்படும் ஒரு காட்சி துண்டு. (a continuous view filmed by one camera without interruption)
அதாவது ஒரு காட்சியைப் படம் பிடிக்க கேமராவைத் துவக்கியதிலிருந்து நிறுத்தும் வரைக்கும் இடைப்பட்ட காட்சித் துண்டை ஒரு ஷாட் என்கிறோம்.
ஒவ்வொரு ஷாட்டும் ஒரு டேக் (take) என்கிறோம். அதே செயலை எந்த வித மாறுதலும் இல்லாமல், தொழில்நுட்பத் தவறினாலோ அல்லது சிறப்பாக இருப்பதிற்காகவோ மீண்டும் எடுத்தால் அதற்கு Re-take என்று பெயர்.
கேமராவின் கோணத்தையோ, லென்சையோ அல்லது காட்சியின் தொடர்ச்சியையோ மாற்றி எடுத்தால் அது Re-take ஆகாது. அது ஒரு புது ஷாட் (New shot) என அழைக்கப்படும்.
சீக்வன்ஸ்: sequence
சீக்வன்ஸ் என்பது ஒரு முழுமையடைந்த தொடர்ச்சியான சீன்களின் தொகுப்பு அல்லது தொடர்ச்சியான ஷாட்களின் தொகுப்பு (series of scenes, or shots , complete in itself) எனலாம்.
ஒரு சீக்வன்ஸ் என்பது ஒரே இடத்திலே முடியலாம். அல்லது அந்தக் காட்சிக்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு இடங்களிலும் இருக்கலாம். அதாவது ஒரு நடிகன் வீட்டின் முன்புறத்திலிருந்து வீட்டிற்குள் சென்று சமையல் அறையில் இருக்கும் மனைவிடம் பேசுவது வரை இருக்கிறது என்றால் இந்தக் காட்சி வெவ்வேறு இடத்தில் நிகழ்கிறது என்றாலும் இது ஒரு சீக்வன்ஸ் என அழைக்கப்படும்.
அதேபோல் ஒரு சீக்வன்ஸ் எடிட்டிங்கின் போது நேரடியாக 'cut shot'-ஆக எடிட் செய்திருக்கலாம். அல்லது fade or dissolve உபயோகித்து எடிட் செய்திருக்கலாம்.
....................................................
பொதுவாக சீன்(scene) மற்றும் ஷாட்(shots)-வார்த்தையை மாற்றி உபயோகிக்கும் போது குழப்பம் வருகிறது. பொதுவாக ஒரு சீன் என்பது பல ஷாட்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. சீனுக்கு ஒரு எண்ணும் அதில் வரும் ஷாட்டுக்கு ஒரு எண்ணும் கொடுத்து அடையாளப்படுத்துகிறார்கள். அதாவது ஐந்தாவது சீன், இரண்டாவது ஷாட், முதலாவது take என்றால்..5/2/1 என அடையாளப்படுத்துவார்கள்.
சில திரைக்கதையில் ஒரு ஷாட்டே ஒரு சீனாக இருக்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அந்த ஒரு ஷாட் சீனுக்கு a,b,c,d.. என்று எழுத்தால்(letters) அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கே ஒரு ஷாட்டே ஒரு சீனாக இருக்கிறது. ஒரு சீன் என்பது ஒரே ஒரு ஷாட்டாவும் இருக்கிறது. இந்த இடங்களில் வரும் குழப்பத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் சீன், ஷாட் வார்த்தையை சரியாகப் பயன்படுத்தலாம்.
ஒரு ஷாட்டையோ அல்லது ஷாட்டின் துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியையோ ஒரு கட்(cut) என்கிறோம். சில சமயங்களில் ஒரு ஷாட்டிலிருந்து சில பகுதியைத் துண்டித்து மற்றொரு ஷாட்டாகப் பயன்படுத்துவார்கள். அதாவது ஒரு நடிகனின் சிரிக்கும் பகுதியை அவனின் பேச்சோடு இணைந்திருந்ததலிருந்து பிரித்தெடுத்து மற்ற நடிகனின் செயலுக்கு அப்புறம் பயன்படுத்துவார்கள்.
அடுத்து கேமராக் கோணங்களின் வகைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அது அடுத்த கட்டுரையில்..
TYPES OF CAMERA ANGLES
OBJECTIVE - புறநிலைக் கோணங்கள்
SUBJECTIVE - அகநிலைக் கோணங்கள்
POINT-OF-VIEW - பார்வை இலக்குக் கோணங்கள்
அதற்கு முன்பாக இந்தக் கட்டுரையில் நாம் என்ன தெரிந்துக்கொண்டோம் என்பதின் ஒரு சுருக்கம்:
1. கேமராக் கோணம் என்பது என்ன.
2. கேமராக் கோணம் ஏன் சரியாக அமைக்க வேண்டும்.
3. என்ன வகையான 'ஷாட்' என்பது.
4. சீன், ஷாட், சீக்கியுவன்சஸ் என்பது என்ன.
5. take, re-take, cut என்றால் என்ன.
6. சீன், ஷாட், take ஆகியவையை எப்படி அடையாளப்படுத்த வேண்டும்.
....................................................................................
இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:
1. பத்தாவது சீன், நான்காவது ஷாட், எட்டாவது take என்பதை எண்ணில் எப்படிக் குறிப்பீர்கள்?
2. உயரே பறக்கும் விமானத்தைக் கீழே இருந்துப் படம் எடுக்கப் பயன்படும் கோணத்திற்கு என்ன பெயர்?
3. வானத்தில் உயரே பறக்கும் பறவையின் பார்வையில் இருந்து பார்க்கும் கோணத்திற்கு என்ன பெயர்?( இந்தக் கேள்விக்கு பதிலை இந்தக் கட்டுரையில் காணமுடியாது..நெட்டில் தேடுங்கள்)