புகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter'(ஃபிலாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.
திரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை(amount of light) அளக்க பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்'(Exposure) தருகிறோம். இப்போதைய நவின மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.
லைட் மீட்டரின் அடிப்படை:
நாம் படம்பிடிக்க(பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன்(Film Speed -ISO), 'ஒரு வினாடிக்கு எத்தனை ஃபிரேம்கள்'(fps) மற்றும் 'ஷாட்டர் ஆங்கள்'(Shutter Angle) ஆகியவைகளோடு தொடர்பு உடையது. இந்த மூன்றின் அடிப்படையில் 'எக்ஸ்போஷர்' தரப்படுகிறது.
புகைப்படமோ அல்லது ஒளிப்பதிவோ இரண்டுமே 'ஒரு Subject-இன் மீது விழுந்த ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பை பதிவு செய்வதின் மூலம்தான் நிகழ்கிறது. அதேப்போல் எந்த பொருளும் தன் மேல் விழும் ஒளியை இரண்டு விதமாக கையால்கின்றன, உள்வாங்கிக் கொள்வது மற்றும் பிரதிபலிப்பது. இந்த இரண்டு ஆதார செயல்பாடுகளும் பொருளுக்கு பொருள் மாறுபடுகிறது. மரம் அல்லது மனித உடல் போன்றவை பிரதிபலிப்பதிற்கும் கண்ணாடி, இரும்பு போன்ற பொருட்கள் பிரதிபலிப்பதிற்கு வித்தியாசம் இருக்கும் இல்லையா?. அதேப்போல் ஒவ்வொரு வண்ணத்தைப்பொருத்தும் அதன் பிரதிபலிப்பு மாறுபடும்.
இப்படி பிரதிபலிக்கும் ஒளியானது அந்தப்பொருளின் வடிவத்தை தாங்கி கொண்டிருக்கும், இந்த பிரதிபலிப்பை பதிவு செய்வதின் மூலம்தான் நாம் புகைப்படம் எடுக்க முடிகிறது. புகைப்படத்தை நாம் நிழல்படம் என்றும் சொல்லுகிறோம் அல்லவா, உண்மையில் அது நிழலை படம் பிடிப்பது அல்ல, இப்படி பிரதிபலிக்கப்பட்ட பிரதி என்பதை குறிக்கதான் நாம் அதை நிழல் படம் என்கிறோம்.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் இரண்டு வகை மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
இரண்டு வகை லைட் மீட்டர்கள்: Incident and Reflected
இன்சிடண்ட் மீட்டர்: Incident Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தும் போது, மீட்டரை 'subject'-இன் இடத்தில் வைத்து 'Subject'-இன் மீது விழும் ஒளியை அளக்க முடியும். அதாவது 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அது.
செயல்படும் முறை: முகப்பில் இருக்கும் கூம்பின் மீது விழும் ஒளியை மின்சாரமாக மாற்றுவதின் மூலம் அந்த ஒளியை அளக்கிறது. இதனால் தன் மேல் விழும் ஒளியின் அளவை(amount of light) அது தருகிறது.
அனலாக் மீட்டர் |
அனலாக் மீட்டர்:
a. ISO அல்லது Film Speed அமைக்கும் இடம்.
b. ஒளியை அளக்கும் கூம்பு.
c. கருவியை இயக்கும் பொத்தான். இதை அழுத்தும் போது ஒளி அளக்கப்படுகிறது.
d. அளவைக் காட்டும் முள்.
e. அளவுகள் 'foot-candle scale'-இல் காட்டப்படுகிறது.
f/g. காட்டும் அளவை அமைக்கும் பகுதி.
h. Shutter speed scale
i. Aperture scale
டிஜிட்டல் மீட்டர்:
டிஜிட்டல் மீட்டர் |
ரிப்லக்டட் மீட்டர்:Reflected Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தி நம் 'Subject'-லிருந்து பிரதிபலிக்கும்(Reflected) ஒளியின் அளவை அளக்க முடியும். அதாவது கேமரா இருக்கும் இடத்தில் மீட்டரை வைத்து 'Subject'-லிருந்து பிரதிபலித்த ஒளியை அளப்பது.
ரிப்லக்டட் மீட்டர் or Spot Meter |
செயல்படும் முறை: நாம் படம்பிடிக்கும் பொருள் நோக்கி இந்த மீட்டரை திருப்பி, (அதில் பார்ப்பதிற்கான கருவிகள் இருக்கும்) ஒளியின் அளவை எடுக்கும் போது அது பார்க்கும் பொருளின் ஒளியை அது அளவிடுகிறது. அதாவது அந்த பொருளில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியின் அளவு அது. ஒரு குறிப்பிட்ட இடத்தின்(spot) ஒளியை அளப்பதால் இதை 'Spot Meter' என்கிறோம்.
18% கிரே அடிப்படை: The 18% Neutral Gray Standard
லைட் மீட்டர்கள் தன் மீது விழும் ஒளியின் அளவை நிலையான விதத்தில் அளக்க உருவாக்கப்பட்டவை. அவை படம் பிடிக்கப்படும் பொருள்களில் இருக்கும் வித்தியாசத்தை உணரக்கூடியவைகள் அல்ல. நமக்குத் தெரியும், படம் பிடிக்கும் பொருள் எந்த நிறத்தில் இருக்கிறது, நபர் என்றால் அவர் கருப்பா சிவப்பு என்பது. ஆனால் மீட்டர்கள் அப்படி அல்ல, அதற்கு பச்சை பலுனுக்கும், சிவப்பு பலுனுக்கும் வித்தியாசம் தெரியாது. வெள்ளை புனைக்கும் கருப்பு பூனைக்கும் இருக்கும் வித்தியாசமோ, வெண்பனியோ அல்லது மஞ்சள் வண்ண ஆட்டோவோ அதற்கு எல்லாம் ஒன்றுதான்.
இன்சிடண்ட் மீட்டர் தன் மீது விழுந்த ஒளியின் அளவைத்தான் சொல்லும், சுற்றி இருக்கும் பொருள்களின் பிரதிபலிப்பு தன்மையை கருத்தில் கொள்ளாது.
ரிப்லக்டட் மீட்டர் தான் பார்க்கும் பொருளின் வண்ணம் மற்றும் அதன் பிரதிபலிப்பு தன்மைச் சார்ந்து ஒளியின் அளவைக்காட்டும்.
இந்த இரண்டு அளவுகளும் இருக்கும் பிரச்சனையை சமாளிக்க 18% கிரே என்னும் விதியை பயன்படுத்துகிறார்கள். அதாவது இந்த இரண்டு மீட்டர்களுமே தாங்கள் அளக்கும் பொருகள் எல்லாம் 18% பிரதிபலிப்பு தன்மைக்கொண்டது அல்லது 18% கிரே (average 18% reflectance, or neutral gray) தன்மைக் கொண்டதாக எடுத்துக்கொள்ளும்(assume) படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒரு நிலையான அளவை பெறமுடிகிறது.
18% neutral gray முறை மீட்டர்களை ஒரு சராசரியான பொருளை சராசரியான ஒளியில் அளப்பதிற்கு பயன்படுகிறது. ரிப்லக்டட் மீட்டர் பயன்படுத்தும் போது 18% கிரேக் கார்டு பயன்படுத்துவது இதனால் தான்.
இன்சிடண்ட் மீட்டர் மற்றும் ரிப்லக்டட் மீட்டர் இரண்டும் இணைந்த நவின டிஜிட்டல் மீட்டர் |
சமன்பாடுகள்: இந்த அளவுகளைக்கொண்டு எக்ஸ்போஷர் கொடுப்பதிற்கு சில சமன்பாடுகள் பயன்படுகின்றன. இன்றைய நவின மீட்டர்கள 21; தங்களுக்குள் சிறிய அளவில் கணினி தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் அவை தானாகவே சமன்பாடுகளை செய்து நமக்கு தேவையான எக்ஸ்போஷர்களைத் தருகிறது.
(இங்கே அந்த சமன்பாடுகளை விளக்க எனக்கு விருப்பம்தான், ஆனால் அவற்றை விளக்க துவங்கினால் இந்த கட்டுரையை படிப்பதை நீங்கள் இதோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்பதினால் அதை தவிர்க்கிறேன். அதுவும் இல்லாமல் நான் என்ன உங்களுக்கு பாடமா நடத்துகிறேன். எனக்கு தெரிந்ததை அல்லது தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருப்பதை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் அவ்வளவுதானே!.)
இந்த இரண்டு மீட்டர்களிலும் இருக்கும் நன்மை தீமை என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் சொல்லுகிறேன்.
நான் மீட்டரிங்(Metering) செய்கிறேன் - பொம்மலாட்டம் படத்தின் போது:வலதுபுறம் 'நானா பட்டேகர்' இடதுபுறம் இயக்குனர் பாரதிராஜா |
நான் மீட்டரிங்(Metering) செய்கிறேன் - பொம்மலாட்டம் படத்தின் போது |