Tuesday, 19 March 2013

லென்ஸ் (Lens):





லென்ஸ் (Lens):
பொருளிலிருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியானது தெளிவாகவும் துல்லியமாகவும் 'ஃபிளிம் கேட்'(film Gate)-டின் வழியாக படச்சுருள் இருக்கும் இடத்தில் சரியாக விழச்செய்ய 'லென்ஸ்'(Lens) பயன்படுகிறது.


நார்மல் லென்ஸ் (Normal Lens): 50mm
சாதாரணமாக மனிதக் கண்களால் பார்க்கப்படும் பார்வைக் கோணமும் 50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணமும் கிட்டதட்ட ஒத்துப்போவதால் இது நார்மல் லென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.


வைடு ஆங்கிள் லென்ஸ் (Wide Angle Lens):
50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணத்தைவிட அதிகப்படியான கோணத்தில் பார்க்கப் பயன்படும் லென்ஸ்கள் 
வைடு ஆங்கிள் லென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
(உ.தா) 42mm, 35mm, 24mm,18mm,14mm,...9.8mm ..etc


டெலி போட்டோ லென்ஸ்(Tele Photo Lens):
50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணத்தைவிட குறைந்த அளவு கோணத்தில் பார்க்க உபயோகிக்கப்படும் லென்ஸ்கள் 
'டெலி போட்டோ லென்ஸ்' என்று அழைக்கப்படும். இவ்வகை லென்ஸ்களில் பிம்பமானது அதன் அதார உருவ அளவுகளிலிருந்து பெரிதாக்கப்பட்டிருக்கும்
(உ.தா) 75mm, 85mm, 100mm, 135mm...etc.


ஜூம் லென்ஸ் (Zoom Lens):
வைடு ஆங்கிள் லென்ஸ், நார்மல் லென்ஸ் மற்றும் டெலி போட்டோ  லென்ஸ்களின் கோணங்களை ஒரே லென்ஸில் மாற்றியமைக்கப்படும் அமைப்பைக் கொண்டது 'ஜூம் லென்ஸ்' என்று அழைக்கப்படும். 
(உ.தா) 25mm - 250mm


அனமார்பிக் லென்ஸ்(Anamorphic Lenses):
அனமார்பிக் லென்ஸ்சுகள் 'ஸ்கோப் லென்ஸ்'(Scope Lense) என அறியப்படுகின்றன. பதிவுசெய்யப்படும் காட்சியானது 50% அகலவாக்கில் குறுக்கப்பட்டு (Squeezes horizontally) பதிவுசெய்யப்படுகிறது. அதனால் 50% அதிக பரப்பளவுக்காட்சியை அகலவாக்கில் பதிவுசெய்ய முடிகிறது.பின்பு திரையரங்கில் ஒளிபரப்பும் போது குறுக்கப்பட்ட காட்சியானது பழைய நிலைக்கு நீட்டப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.




ஃபோக்கல் லெந்த் (Focal Length):
லென்ஸின் மையத்திற்கும்(Nodal Point) படச்சுருள் தளத்திற்கும்(Film Plane) இடைப்பட்ட தூரம் ஃபோக்கல் லெந்த் (Focal Length)என்று அழைக்கப்படுகிறது. லென்ஸ்கள் 'ஃபோகல் லெந்த்' என்று அழைக்கப்படும் இந்த அளவுகளினாலே வகைப்படுத்தப்படுகிறது.


ஒளியின் அளவு மற்றும் உள்வாங்கும் அளவைப் கட்டுப்படுத்தும் அமைப்பு (EXPOSURE-APARTURE):
ஒரு காட்சியைத் தெளிவாக, சரியாகப் பதிவுசெய்ய படச்சுருளின் மீது விழும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.


ஒளியானது படச்சுருளின் மீது படிய, லென்ஸ் அமைப்பை ஊடுருவி வரவேண்டியதாகிறது. லென்ஸில் அதனுள் ஊடுருவும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்பு உண்டு. அந்த அமைப்பை 'அப்பார்ச்சர்'(Aparture) என்கிறோம்.


'அப்பார்ச்சர்' என்பது, நம் கண்களில் உள்ள 'பாப்பாவை'ப் போன்றது. அதாவது ஒளி அதிகமாயிருக்கும் போது சுருங்கியும், குறைவாயிருக்கும் போது விரிந்தும், நம் கண்களுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் அமைப்பைப் போன்றது.


இந்த 'அப்பார்ச்சர்'-யில் உள்ள தகடுகள் ஒரு வட்டவடிவத் துளையை உருவாக்குகின்றன. இந்தத் தகடுகளை நகர்த்தி இந்தத் துளையின் அளவைப் பெரிதாக்கவோ,சிரிதாக்கவோ செய்யலாம். இதன் மூலம் லென்ஸின் உட்செல்லும் ஒளியின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் தகடுகளை நகர்த்த ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒத்துப்போகும் ஏறுவரிசையில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.  அதாவது f 1, 1.2, 2, 2.8, 4, 5.6, 8, ....etc என்ற வரிசையில் குறிக்கப்பட்டிருக்கும். 'f' என்பது 'அப்பார்ச்சர்' என்பதைக் குறிக்கும். 


இவற்றின் முறையே ஒன்றிலிருந்து மற்றொரு எண் என்பது, அதன் முந்தைய எண் அனுமதிக்கும் ஒளி அளவைப் போன்று ஒரு மடங்கு அதிக ஒளியை உட்செல்ல அனுமதிக்கும். அதாவது எண் 'f2.8'-யில் செல்லும் ஒளியின் அளவைவிட 'f4'-யில் செல்லும் ஒளியின் அளவு ஒரு மடங்கு அதிகம். இந்த அளவை 'எக்ஸ்போசர்'(Exposure) என்கிறோம்.


'எக்ஸ்போசர்' என்பது படச்சுருளின் மீது விழும் ஒளியின் அளவையும் விழும் நேரத்தையும்(காலம்) பொருத்தது.


'எக்ஸ்போசர்' = ஒளியின் அளவு x நேரம்


E = I x T


I = Intensity of Light ( ஒளியின் அளவு)


T = Time (காலம்)


ஒளியின் அளவு என்பது f-யின் மதிப்பைக் குறிக்கும், காலம் என்பது கேமராவில் படச்சுருள் ஒடும் வேகத்தைப் குறிக்கிறது.


கேமராவின் வேகம் (Camera Speed):
கேமராவின் வேகம் என்பது ஒரு நொடியில் பதிவு செய்யும் பிம்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.


இயல்பான வேகத்தில் நகர்கின்ற பிம்பங்களைப் பார்க்க ஒரு நொடிக்கு 24 பிம்பங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு காரணம் நம் கண்களில் காட்சி நிலைப்புத் தன்மை (Persistance of Vision) மற்றும் Optical Imagenation - உம்.


காட்சியின் நிலைப்புத்தன்மை (Persistance of Vision) என்பது பார்க்கப்படும் பொருள் நகர்த்தப்பட்ட பின்பும் அதன் பிம்பமானது கண்ணின் விழித்திரையில் 1/16 நொடி வரை நிலைத்திருக்கும். இதையே கண்ணின் காட்சி நிலைப்புத் தன்மை என்கிறோம்.


கண்ணின் விழித்திரையிலிருந்து ஒரு பிம்பம் நீங்குவதற்கு முன்பாகவே அடுத்த பிம்பமும் விழுகிறது. இந்த இரண்டு பிம்பங்களையும் தொடர்ச்சியாக இணைத்துப் பார்க்கும் கற்பனை நம் மூளைக்கு உண்டு.  இதனால் நிலையான பிம்பங்களை நகரும் காட்சிகளாக நாம் உணருகிறோம்.


இயல்பான வேகத்தில் நகரும் காட்சிகளைக் காண ஒரு நொடிக்குள் 24 பிம்பங்கள் நம் விழித்திரையில் விழ வேண்டும்.  எனவே தான் கேமராவின் வேகமானது ஒரு நொடிக்கு 24 பிம்பங்கள் பதிவு செய்யும்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு நொடிக்கு 24 பிம்பங்களுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ பதிவு செய்தால், இயல்பாக இயங்கும் வேகத்திற்கு மாறுபட்டிருக்கும். உதாரணமாக ஒருவர் நடப்பதை 24 பிம்பங்களுக்கு அதிகமாகப் பதிவு செய்தால் அவர் மெதுவாக நடப்பது போன்றும், குறைவாகப் பதிவு செய்தால் அவர் வேகமாக நடப்பது போன்றும் தெரியும். எனவே தான் கேமராவின் அடிப்படை வேகமானது ஒரு நொடிக்கு 24 பிம்பங்களைப் பதிவு செய்யும்படி அமைக்க வேண்டியதாகிறது.


எனவே ஒரு பிம்பம் பதிவாகத் தேவையான கால அளவு 1/24 நொடி (ஒரு நொடியில் 24-இல் ஒரு பங்கு)
ஆனால் இதில் பாதிக் கால அளவு படச்சுருள் நகர்வதற்குத் தேவைப்படுகிறது. எனவே உண்மையில் ஒரு பிம்பம் பதிவாவதற்கு..1/48 நொடி (ஒரு நொடியில் 48-இல் ஒரு பங்கு) மட்டுமே கிடைக்கிறது.


1/24 நொடி x 1/2 = 1/48 நொடி


எனவே படச்சுருளின் மீது விழும் ஒளியின் கால அளவானது 1/48 நொடி.


அதாவது T = 1/48