vishwaroopam in barco auro- 11.1 3d audio.
லோகநாயகர் கமலஹாசர் விசுவரூபம் என்ற
திரைக்காவியத்தை செதுக்கி எடுத்து வருகிறார், தமிழ் சினிமாவை உலக
சினிமாவாக ஆக்க அவர் ரொம்ப முயற்சிக்கிறார் என லோக நாயகரின் விசுவாசிகள்
வழக்கம் போல முரசொலிக்கிறார்கள்.
ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த "IIFA film festival" இல்
சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சினிமாவாக்கும்
திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒலி அமையமைப்பினை 11.1 டிராக்கில்
அமைக்க அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகின. அப்படியானால்
சிங்கப்பூரில் ஒலியில்லாமல் படம் திரையிடப்பட்டதா? இல்லை மீண்டும் புதிதாக
ஒலிச்சேர்க்கை செய்வாரா என ஒரு சந்தேகம்.
11.1 டிராக் ஒலியமைப்பு என்கிறார்களே அது என்ன என இணையத்தில் துழாவியதில் கிடைத்தவைகளை இங்கே பகிர்கிறேன்.
Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் தற்சமயம் barco Auro11.1 3d sound என்ற
திரையரங்க ஒலி அமைப்புக்கு வடிவமைத்துள்ளது. இம்முறையில் ஒலியமைக்கப்பட்ட
முதல் ஹாலிவுட் படம் ஜார்ஜ் லுகாஸ் தயாரிப்பில் வெளிவந்த "ரெட் டெயில்ஸ்" என்ற இரண்டாம் உலகப்போர் அடிப்படையிலான படமாகும் ,இப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.
வழக்கமான
திரையரங்க ஒலியமைப்பில் டிடிஎஸ் -5.1 , டால்பி டிஜிட்டல் புரோலாஜிக் -7.1
என இரண்டு அமைப்புகளே பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றன.
இரண்டும்
தனித்தனி போட்டி நிறுவனம் ஆனால் ஒரே படத்தில் இரண்டு அமைப்பிலும்
ஒலிச்சேர்க்கை செய்து இருப்பார்கள், இதன் மூலம், திரையரங்கில் இருக்கும்
ஒலியமைப்புக்கேற்ப ஒலிக்கப்படும்.
(திரைப்பட சுருளில் உள்ள ஒலிக்குறிப்புகள், இதில் குறைவான அளவில் பயன்ப்படும் சோனி SDDS ஒலியும் உள்ளது)
மேலும்
இவ்வொலியமைப்பின் ஒலிக்குறிப்புகள் மட்டும் இல்லாமல் வழக்கமான ஸ்டீரியோ
மற்றும் மோனோ ஒலியும் திரைப்பட சுருளில் இருக்கும், ஏன் எனில் சமயங்களில்
டால்பி,டிடிஎஸ் ஒலியமைப்புகள் செயல்படாமல் போனால் இவை அவசரத்துக்கு உதவும்.
பழைய திரையரங்குகளில் திரையிடவும் உதவும்.
5.1
அல்லது 7.1 என குறிப்பது 5 (அ) 7 சேனல்கள் ஒலிக்கும் ஒரு சேனல்
சப்-ஊஃபருக்கும். எனவே 5.1 என்றால் 6 சேனலில் ஒலியும் 7.1 என்றால் 8
சேனலில் ஒலியும் வரும். இவற்றில் 5.1 இல் ஒலிப்பெருக்கிகள் முன்பக்கம்
,வலப்பக்கம், இடப்பக்கம், பின்பக்கம் என்ற அமைப்பில் அனைத்து
ஒலிப்பெருக்கியும் கிடைமட்ட தளத்தில் இருக்கும்.
எனவே
திரையில் தோன்றும் காட்சியில் ஒலியின் உயர வித்தியாசம் அறிய முடியாது என
டால்பி 7.1 இல் இரண்டு ஒலிப்பெருக்கிகளை கூறை உயரத்தில் பொருத்தி
செங்குத்து அச்சிலும் ஒலியை உருவாக்கி முப்பரிமான ஒலி என்றார்கள்.
இதன்
அடுத்தக்கட்டமாக உயரத்தில் அமைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கையை
அதிகரித்து வேறுப்பட்ட உயரத்தில் ஒலிப்பெருக்கிகளை அமைத்து ,மேலும் ஒலி
செல்லும் சேனல்களின் எண்ணிக்கையை 11.1 என 12 சேனல்களில் கொடுப்பது தான்
barco Auro11.1 3d sound அமைப்பாகும்.
இவ்வமைப்பில்
கூறையில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானம்
பறப்பது போன்ற காட்சிகளில் ,"தத்ரூபமான ஒலி சூழல்" திரையரங்கில் உருவாகும்,
எனவே தான் "ரெட் டெயில்ஸ்" என்ற படத்தில் பயன்ப்படுத்தினார்கள், அப்படம்
இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட விமானப்படைப்பிரிவின் சாகசத்தினை
விவரிக்கும் படம். ரெட் டெயில் என்பது அமெரிக்க விமானப்படையில் ஒரு
பிரிவின் சங்கேதப்பெயர் ஆகும்.
அப்படம்
வெளியான காலத்தில் மொத்தமே நான்கு திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு
அமெரிக்காவில் இருந்தது.எனவே அவ்வொலியமைப்பின் சிறப்பினை பலரும் உணர
வாய்ப்பேயில்லை. தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் 125 திரையரங்கில் தான்
11.1 ஒலியமைப்பு வசதியுள்ளது.
ஆரோ11.1 ஒலியமைப்பின் விளக்கப்படம்
சுட்டி:
இந்தியாவில்
இது வரையில் ஒரு திரையரங்கிலும் அவ்வசதியில்லை. பின் எதற்கு லோகநாயகர்
11.1 இல் ஒலியமைப்பு செய்யபோவதாக சொல்கிறார் எனப்பார்க்கிறீர்களா எல்லாம்
ஒரு "மார்க்கெட்டிங்" உத்திதான்.மேலும் இதில் சின்னதாக ஒரு சூட்சமமும்
இருக்கு,அது என்னவெனில் 11.1 இல் ஒலியமைப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கும்
ஒலியமைப்பினை 11.1 ஆக கன்வெர்ஷன் செய்யும் வசதியை பயன்ப்படுத்திக்கொள்வது
தான்.
திரைப்பட ஒலியமைப்பில் சில முதல்கள்:
ஹாலிவுட்டில்,
முதல் டால்பி டிஜிட்டல் திரைப்படம்-பேட்மன் ரிடர்ன்ஸ்.
முதல் டிடிஎஸ் திரைப்படம்- ஜுராசிக் பார்க்-1
தமிழில்.
முதல் டால்பி- குருதிப்புனல்.
முதல் டிடிஎஸ்- கருப்பு ரோஜா.
ஆரோ
11.1 ஒலியமைப்பு கருவி என்பது ஒரு கணினி போன்றது தான், இதில் ஒலியை ஒலிக்க
செய்ய ஒரு கோடெக், ஒரு பிராசசர், அப்மிக்ஸ் பிராசசர் என மூன்று பகுதிகள்
இருக்கிறது.
இந்த
டிடிஎஸ்5.1,டால்பி 7.1,ஆரோ11.1 என்பதெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியை
கம்பிரஷன் செய்யும் முறையே அதாவது எம்பி-3,வேவ்,மிடி போன்ற கம்பிரஷன்
ஃபார்மெட்கள்.
இசையமைப்பாளர்கள்
ஒலியமைப்பு,இசையமைப்பு செய்து பதிவு செய்யும் போது 16 டிராக், 32 டிராக்
எல்லாம் பயன்ப்படுத்துவதுண்டு, எனவே ஒலிகோப்பின் அளவு பல ஜிகா பைட்டுகள்
இருக்கும்,அதனை திரையரங்கில் அப்படியே ஒலிக்க செய்ய இயலாது என்பதால்
ஒலிக்கோப்பின் அளவை அழுத்தி சுருக்கவே டிடிஎஸ்,டால்பி,ஆரோ என விதவிதமான
கம்பிரஷன் முறைகளை பயன்ப்படுத்துகிறார்கள்.
எம்முறையில்
அதிக சேதம் இன்றி துல்லியமாக செய்ய முடியுமோ அதனை தேர்வு செய்வார்கள்,
சேனல்களின் எண்ணிக்கை கூடும் போது இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருக்கும்.
டிடிஎஸ்
மிக்சிங்க் என்பது 32/16 டிராக்கில் இருக்கும் ஒலிப்பதி செய்யப்பட்ட ஒலியை
6 டிராக்கில் தேவைக்கு ஏற்ப மாற்றி சுருக்குவது,அது போலவே டால்பி 7.1
மற்றும் ,ஆரோ 11.1 ஆகும்.
எந்த முறையில் ஒலிக்கலவை செய்த ஒலியையும் ஆரோ 11.1 அமைப்பில் தியேட்டரிலே11.1
ஆக ஒலிக்க செய்யும், ஆனால் 11.1 இல் ஒலிக்கலவை செய்த துல்லியம்
இருக்காது.ஏற்கனவே சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிலையில் டிடிஎஸ்,டால்பி என
ஒலிக்கலவை செய்து இருப்பார் லோகநாயகர், இப்போது அதனை அப்படியே ஆரோ11.1
ஃபார்மெட் ஆக மாற்ற மட்டுமே செய்வார் என நினைக்கிறேன், இது செலவில்லாத எளிய
வழி ,ஆனால் முழுக்க ஆரோ 11.1 இல் ஒலிக்கலவை செய்தது போன்ற தோற்றத்தினை
உருவாக்கிவிடுவார், எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.மேலும் 11.1
டிராக்கில் செய்த வித்தியாசத்தினையும் யாரும் உணர முடியாது, ஏன் எனில்
அப்படியான ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகள் இந்தியாவில் , குறிப்பாக
தமிழகத்தில் இல்லை.
மேலும்
இந்த barco Auro11.1 3d sound ஒலியமைப்பே பழமையான ஒன்றாகிவிட்டது ,இனிமேல்
உலக அளவில் , இம்முறையை பெருமளவு பயன்ப்படுத்த மாட்டார்கள் என
நினைக்கிறேன் காரணம் ஒலியமைப்பு பொறியியலில் ஜாம்பவான் ஆன டால்பி நிறுவனம்
ஒரே தாவலாக 128 சேனல் கொண்ட டால்பி அட்மோஸ் 3டி சர்ரவுண்ட் என்ற
ஒலியமைப்பினை உருவாக்கி போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டது.
டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் பிக்சார் தயாரிப்பில், டிஸ்னி விநியோகத்தில்
பிரேவ் என்றப்படம் இம்மாதம் வெளியாகியுள்ளது.
டால்பி
அட்மோஸ் ஒலியமைப்பு அமெரிக்காவில் 14 திரையரங்கிலும் , ஸ்பெயினில்
பார்சிலோனவில் ஒன்றும், லண்டனில் ஒன்றும் என இது வரை மொத்தம் 16
அரங்குகளில் மட்டுமே அவ்வசதியுள்ளது.
டால்பி அட்மோஸ் ஒலியமைப்புள்ள அரங்கம்.
டால்பி
நிறுவனம் உலகெங்கும் பரவலாக நிறுவ முனைப்பு காட்டிவருகிறது ஏற்கனவே பல
திரையரங்குகளில் டால்பி 7.1 உள்ளதால் ,அவர்கள் அனைவரும் அதிக திறனுள்ள
டால்பி அட்மோஸ் நிறுவவே முயல்வார்கள்.இவ்வமைப்பில் 128 சேனல்/டிராக்கில்
ஒரு காட்சியில் உள்ள 128 வகையான ஒலிக்கூறுகளை தனித்தனி டிராக்கில் தேவைக்கு
ஏற்ப ஒலிப்பெருக்கிகளுக்கு வழங்க முடியும்.இதனால் காட்சியின் வீச்சு
இன்னும் அதிகம் ஆகும்.இதில் மொத்தம் 64 ஒலிப்பெருக்கிகள் கிடைமட்டத்திலும்,
கூறையிலும், பல உயர அளவில் அமைக்கப்பட்டு முழுமையான முப்பரிமாண ஒலியை
தரும். எனவே இனி டிடிஎஸ், barco Auro11.1 3d sound போன்றவர்கள் அவர்கள்
ஒலியமைப்பினை மேம்ப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.
கொசுறு:
விஷ்வரூபம்
கதை சுருக்கம் என இணையத்தில் போட்டிருக்கிறார்கள், அதில் லோகநாயகர்
,அமெரிக்காவில் கதக் நடனப்பள்ளி நடத்திவருபவர்,அவரை அணு விஞ்ஞானத்தில்
ஆய்வு செய்யும் "மாணவியான "ஆன்ட்ரியா காதலித்து மணமுடிக்கிறார். பின்னர்
அவரது ஆய்வு படிப்பு முடிந்ததும் விவாகரத்து செய்ய விரும்பும் ஆன்ட்ரியா,
ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் போலியான குற்றச்சாட்டு
மற்றும் ஆதாரங்களை லோகநாயகரின் மீது சுமத்துகிறார், அதன் பின்னர் லோகநாயகர்
உண்மையில் யார் என காட்ட விஷ்வரூபம் எடுக்கிறாராம்.
மேலும்
பல புகைப்படங்களில் கையில் வித விதமான துப்பாக்கிகளுடன் "போஸ்"
கொடுக்கிறார். எனக்கென்னமோ "mr&mrs smith"ஐ உல்டா அடிச்சிருப்பாங்களோனு
தோன்றுது. படம் வந்தா "போஸ் மார்ட்டம்' செய்ய ஒரு கூட்டமே இருக்கு ,உண்மை
தெரியாமலா போயிடப்போகுது :-))
இந்தப்படத்தில
நடிக்கிற எந்த நடிகையரையும் பார்க்க சகிக்கலை, அடிமாட்டு சம்பளத்துக்கு
புடிச்சு போட்டு இருப்பாங்க போல, தீபீகா இப்படத்தில் நடிக்க மறுத்ததாக
உலாவும் செய்திக்கும் , இங்கே படம் போட்டதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,
சும்மா ஒரு அழகியல் நோக்கிலேயே தீபு படம் போட்டு இருக்கேன் :-))
---------
பின் குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி, டால்பி,டிடிஎஸ், பார்கோ,பிபிசி, விக்கி,கூகிள்,IMDB இணைய தளங்கள்,நன்றி!