Friday, 24 October 2014

கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?


கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கென தனியே ஒரு அடையாளம் மட்டுமல்ல பெரும் வணிக மதிப்பும் உண்டு ,மற்ற நடிகர்களின் படம் ஓடினால் அமோக வசூல் வீழ்ந்தால் அடியோடு நாசம் என இருக்கும் போது சூப்பர் ஸ்டாரின் சுமாரான அல்லது ஓடாத படங்களின் வசூல் கூட அதே சமயத்தில் வெற்றியடந்ததாக சொல்லப்படும் படங்களின் வசூலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக  பாபா படம் சரியாக ஓடவில்லை ,தோல்வி என்றார்கள் ஆனால் அதே காலக்கட்டத்தில் வந்து வெற்றி என்று சொன்னப்படங்களின் வசூலை விட பாபா வசூல் மிக அதிகம் என்பதே உண்மை.

லோக நாயகன் என்று சொல்லிக்கொள்பவரின் படமெல்லாம் ஓடினால் போட்டக்காசு தான் கிடைக்கும் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளரின் கோவணமும் உருவப்படும் என்பதான வியாபார வல்லமைக்கொண்ட படங்கள்.அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ஹிட் ஆனால் அதன் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என அனைவருக்கும் அமோக வசூல் மட்டுமல்லாமல் அடுத்து அவர்கள் யாருடைய படத்திலாவது நஷ்டமடைந்தாலும் தாங்க கூடிய அளவு செழிப்படைவார்கள்.அதே சமயத்தில் சுமாராகவோ, அல்லது தோல்வி(வெகு சிலவே) என சொல்லப்படும் படங்களின் வசூல் கூட மிகப்பெரியதாகவே இருக்கும், எனவே நஷ்டம் என்பது எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது அல்லது வட்டியின் விகிதத்தை பொறுத்தே நட்டம் ஆனதாக சொல்ல முடியுமே தவிர போட்ட முதலில் எல்லாம் போய்விடாது முழுதுமோ அல்லது  ஒரு ஆரோக்கியமான தொகையோ மீள கிடைத்துவிடும்.

இதனாலேயே தயாரிப்பாளார்,விநியோகஸ்தரின் ஆபத்பாந்தவனாக சூப்பர் ஸ்டார் இன்றும் திகழ்கிறார்.

இத்தனைக்காலமும் சூப்பர் ஸ்டாரின் வணிக பெருமதிப்பை அனைவரும் நன்றாகவே பயன்ப்படுத்திக்கொண்டார்கள், புதிதாக திரை துறைக்குள் நுழைந்துள்ள  அவரின் வாரிசும் இதை எல்லாம் அவதனித்து அவரின் ஸ்டார் வேல்யுவை பயன்ப்படுத்தி பலன் அடைந்தால்  என்ன என நினைக்க துவங்கிவிட்டார்கள் ,அதில் தவறில்லை ஆனால் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லையே, அவரின் உடல் நிலை நன்றாக இருந்த போதே சிவாஜி படக்காலத்திலேயே  சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்ன புண்ணியம்  அப்படம்  டிரைலருக்கு மேல போகவில்லை. எதாவது தெரிஞ்சா தானே பயன்படுத்தி அனிமேஷன் படமாக எடுக்க :-))

சுல்தான் தி வாரியர்  எடுக்க முடியாமல் ஏன் வாரியது , அனிமேஷன் படங்களின் முதல் தலைமுறை காலமல்ல இப்போது இருப்பது, எல்லா வசதியும் இருக்கு எடுக்க தெரியாமல் சொதப்பியதால் நேரமும், பணம் மட்டுமே விரயம் ஆனதால்  மீண்டும் சூப்பர் ஸ்டார் வேல்யுவை பணமாக்க ராணாவுக்கு பூஜைப்போட்டார்கள் ஆனால் அவரவர் மனம் போல நடக்கும் என்பதாக எதிர்பாராத விதமாக சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்ல நேரிட்டது. இப்போது தான் மீண்டு வந்துள்ளார் ஆனால் உடனே மீண்டும் ஒரு படம் சூப்பர் ஸ்டாரை வைத்து என்று துவங்கிவிட்டார் வாரிசு , அவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அனிமேஷன் படமே எப்படி எனத்தெரியாமல் சொதப்பியவர்கள் இப்போது "பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்" என்ற புதிய நுட்பத்தை வைத்து படம் எடுக்க போகிறேன் என குதித்து இருக்கிறார்கள்,( அதனாலே இப்பதிவும் நான் போட வேண்டியதாகிவிட்டது)

இப்போது அனைவருக்கும் நியாயமாக சில கேள்விகள் எழுகின்றன,

# சிவாஜி -தி பாஸ் படக்காலத்தில் துவக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் -3டி அனிமேஷன் படம் ஏன் முடிக்கப்படவே இல்லை.

# சிவாஜிக்கு பிறகு சில காலம் சும்மா இருந்தார் , பின் எந்திரன் துவங்கி பின்னர் தடைப்பட்டு ஓய்வில் இருந்தார் அப்போது கூட சுல்தான் முடிக்கப்படவே இல்லை, ஏன்?

#பின்னர் அவசரமாக ராணா படம் துவக்கப்பட்டு பூஜை அன்றே உடல் நலன் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் இப்போது தான் , புணர்ஜென்மம் அடைந்து சூப்பர் ஸ்டார் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய படமாக கோச்சடையானை அறிவித்துள்ளார்கள் கூடவே வந்துள்ள இந்தியாவின் முதல் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர் படம் என்ற அறிவிப்பு தான் ஒரு சந்தேகத்தை தூவியுள்ளது.

அது என்னவெனில் உண்மையில் கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்பதே?

ஏன் எனில் பெர்ஃபார்மான்ஸ் கேப்சர்  தொழில் நுட்பம் அப்படியானது, அது ஒன்றும் மிக புதிதான நுட்பம் இல்லை ஏற்கனவே இருந்த மோஷன் கேப்சரிங் நுட்பத்தின் நுணுக்கமான அடுத்த கட்டமே ஆகும்.

மோஷன் கேப்சரிங்க்:

ஒரு நடிகரின் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் சென்சார்கள் பொருத்தி அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக அகச்சிவப்பு கேமிராவில் பதிவு செய்து , அந்த அசைவுகளை கணினி வரைகலை உருவத்துக்கு கொடுத்து செயல்பட வைப்பது. இதற்கென தனி அகச்சிவப்பு கேமராக்கள் , கணினி , மென்பொருள் எல்லாம் பயன்ப்படுத்துவார்கள், ஆனால் இதில் பெறப்படும் சித்தரிப்பு அத்தனை தத்ரூபமாக இருப்பதில்லை. அசைவுகள் செயற்கையாக இருக்கும்,எனவே தனியாக அசைவுகளை மீண்டும் அனிமேஷனில் கட்டுப்படுத்துவார்கள்.

இந்த குறைப்பாட்டை நீக்க வந்தது தான் பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங்க், இது ஒன்றும் அச்சு அசலாக ஒருவரின் நடிப்பை பிரதிபலித்து படமாக்கவில்லை. மேம்பட்ட சென்சார்கள்  கூடுதலான எண்ணிக்கையில் , எளிதாக ,நேர்த்தியாக அசைவுகளை கணினிக்கு மாற்ற ஒரு உடையோடு கூடிய சென்சார் என ஒரு முன்னேற்றம் அவ்வளவே.இம்முறையில் முன்பை விட சிறப்பாக காட்சியமைப்பு வரக்காரணம் புதிய மென்பொருளும் ஹை டெபனிஷன் கேமிராவுமே.

பெர்பார்மென்ஸ் கேப்சர் செய்யப்பயன்படும் லைக்ரா உடை.

பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் வந்த முதல் படம் அவதார் என்று சொல்லிக்கொண்டாலும் அதுவல்ல முதல் முயற்சி மேட்ரிக்ஸ் படமே ,அதே சமயத்தில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இல் முற்றிலும் கணினி வரைகலைப்பயன்ப்படுத்தி செய்தார்கள் கோலும் என்ற கதாபாத்திரத்தை. பின்னர் கிங்காங்க், போலார் எக்ஸ்பிரஸ், ஸ்பைடர் மேன் -2 வில் எல்லாம் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையான பெர்ஃபார்மென்ச் கேப்சரிங் செய்யும் கருவி எதுவெனில் வழக்கமான திரைப்பட கேமிரா தான், அது தானே நடிகர்களின் பெர்ஃபார்மன்சை நேரடியாக பதிவு செய்கிறது!

 அவதார் படத்தில் அசைவுகளை இணைக்கும் காட்சி:

இம்முறையில் முழுக்க கணினி வரைகலை உருவத்துக்கோ அல்லது நிஜமான ஒரு நடிகரை ஒத்த உருவத்தினை கணியில் உருவாக்கியோ உயிர்க்கொடுக்க முடியும்.மேலும் காட்சியில் இருக்கும் சூழலை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், வெளிப்புற படபிடிப்பு , இன்ன பிற அரங்க படப்பிடிப்பு எல்லாம் தனியாக பிடித்துக்கொண்டு அதில் கதாப்பாத்திரங்களை புகுத்திக்கொள்வார்கள்.எனவே ஸ்டூடியோவை விட்டு நடிகர்கள் போகாமலே மொத்த படமும் எடுக்க முடியும்.

உடல் அசைவுகளை தெளிவாக காட்ட உடலோடு ஒட்டிய லைக்ரா மோஷன் கேப்சர் உடைப்பயன்படுத்துவார்கள் ,அதில் சென்சார்கள் பதிக்கப்பட்டிருக்கும். முக அசைவுகளை படம் பிடிக்க ஒளிப்பிரதிப்பளிக்கும் வண்ணத்தினை கொண்டு முகத்தில் தேவையான இடங்களில் மார்க் செய்வார்கள். முன்னர் ஒளி உமிழும் எல் ஈ.டி பயன்ப்படுத்தியதால் அதிக மார்க்கர்களை உருவாக்க முடியவில்லை.

பின்னர் அகச்சிவப்பு கேமிராவில் படம் பிடித்து கணினிக்கு அனுப்பிவிட்டால் , தேவையான உருவத்துடன் இணைத்து ஒருங்கிணந்த அசைவுகளை கொடுத்துவிடும்.

ஸ்பைடர் மேன் -2 ல் முதுகில் எந்திரக்கரங்களுடன்ன் ஒரு விஞ்ஞானி பாத்திரம் டாக்டர் ஆக்டோபஸ் என வரும் ,சில குளோஸ் அப் காட்சிகள் தவிர மற்றதெல்லாம் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்கில் எடுக்கப்பட்ட 3டி மாடல் தான் அப்பாத்திரம்.

முகத்தினை மறைக்காமல் நிஜ நடிகரின் முகத்தினை, பாவனைகளையும் 3டி மாடலுக்கு கொண்டு வந்திருப்பார்கள்.


தத்ரூபமாக முகத்தினைக்காட்ட அரைவட்ட வடிவில் விளக்குகள் பொருத்தி (லைட் ஸ்டேஜ்) அதன் நடுவே நடிகரை உட்கார வைப்பார்கள் பின்னர் அனைத்து கோணங்களிலும் சுழன்று ஹை டெபனிஷன் கேமிராவில் 8 நிமிடத்தில் 2000 படங்கள் எடுக்கப்படும் அதனை கணினியில் உருவாக்கிய 3டி மாடலின் உருவத்தில் முகம் இருக்கும் இடத்தில் பொருத்திவிடுவார்கள். இப்போது 3டி உருவத்தினை எந்தக்கோணத்தில் திருப்பினாலும் அதற்கேற்ப முகம் தெரியும். இதெல்லாம் மென்ப்பொருளே கவனித்துக்கொள்ளும்.ஸ்பைடர் மேன் படத்தில் முகமூடியுடன் வரும் ஸ்பைடர் மேன் எல்லாமே 3டி மாடலே.முகம் தெரியாத நிலை என்பதால் இன்னும் எளிதான வேலை.

முகத்தினை தத்ரூபமாக படம் பிடித்தார் போல முழு உடலையும் கூட செய்ய முடியும், ஆனால் அதை கணினி வரைகலையில் செய்துக்கொள்வார்கள் ஏன் எனில் உண்மையில் குள்ளமாக,ஒல்லியான உருவம் உள்ள நடிகரை உயரமாக ,சிக்ஸ் பேக்குடன் என எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளவே.



இந்த முறையிலே மேட்ரிக்ஸ் படத்தில் வரும் வில்லன் ஏஜன்ட் ஸ்மித் ஒரே நேரத்தில் 100 பிரதிகளாக வரும் காட்சியில் 100 வெவ்வேறு ஆட்கள் தான் நடித்திருந்தார்கள், பின்னர் முகத்தினை மட்டும் இப்படி பிடித்து பொறுத்திவிட்டார்கள்,அப்போது இதற்கு யுனிவர்சல் கேப்சர் என்று பெயர்.அப்போது 5 கேமிராவைக்கொண்டே அனைத்து கோணத்திலும் தெரிவது போன்று முகபாவங்களை படம்ப்பிடித்துக்கொண்டார்கள்.சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து சண்டைப்போட்டதெல்லாம் 3டி மாடல்களே.
ஆண்டி செர்கிஸ்
முழுக்க கணினியில் உருவாக்கிய உருவமான கோலும்( Gollum ), பின்னர் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் படத்தில் கொரில்லாவிற்கு எல்லாம் உடல்,முக அசைவுகளை பெர்பார்மென்ஸ் கேப்சரிங்கில் ஆண்டி செர்கிஸ் என்பவரே கொடுத்தார்.இதற்காக உடல் அசைவுகளை 52 கேமிராவிலும்,   முக அசைவுகளை 20 கேமிராவிலும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிவாக்கியுள்ளார்கள்,இதனாலே அந்த 3டி கணினி வரைகலை கொரில்லா தத்ரூபமாக காட்சியளித்தது.மேலும் நுணுக்கமாக முக அசைவுகளை படம் பிடிக்க தலையில் கேமராவுடன் இணைந்த கவசம் அணிந்துக்கொள்வார்கள்.




போலார் எக்ஸ்பிரஸ் படத்தில் டாம் ஹேங்ஸ் 4 கதாபாத்திரங்களை அவரே இத்தொழிட்பத்தின் மூலம் நடித்திருப்பார்.

டாம் ஹேங்ஸ் அசைவுகள் 3டி உருவத்திற்கு கொடுப்பதை விளக்கும் படம்

கியுரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் வயதாக ஆக குழந்தையாவது போன்ற பாத்திரத்தில் பிராட் பிட் இந்தொழில்நுட்பத்தின் படி பல உருவங்களுக்கு முக பாவனை மட்டுமே கொடுத்து நடித்திருப்பார்.ஹி..ஹி இந்த படத்தின் உல்டா தான் அமிதாப் நடித்த ஃபா!


அவதார்,டின்டின் போன்ற படங்களின் காலத்தில் கணினியின் திறனும், மென்பொருளும் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டதால் சிறப்பாக எடுக்க முடிந்தது.மேலும் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்த நடிப்பை உடனுக்குடன் சூழலுடன் பொருத்தியும் பார்க்கும் வசதியுள்ள வேகமான கணிப்பொறி,மென்பொருளும் பயன்ப்படுத்தப்பட்டது.

அவதார் படப்பிடிப்பில்.

இது போன்று உருவம் மட்டும் கிடைத்து விட்டால் அதற்கான நடிப்பை இயல்பாக அடுத்தவர்களை வைத்துக்கொடுக்க முடியும் என்பதால் இறந்த நடிகர்களையும் நடிக்க வைக்கலாம் , ஆனால் கொஞ்சம் கவனமாக ,செய்ய வேண்டும் ஏன் எனில் அனைத்துக்கோணங்களிலும் முகத்தின் படம் கிடைக்காது என்பதால் ஏதோ ஒரு கோணத்திலேயே காட்ட வேண்டியது இருக்கும்.

மேலும் இனிமேல் ஒரு நடிகர் கேமிரா முன் நிற்காமலே அவரது கணினி முப்பரிமாண உருவத்தை வைத்து ,இன்னொருவரை நடிக்க வைத்து படம் எடுக்கவும் முடியும்.

இப்போது பதிவின் தலைப்பின் பொருள் புரிந்திருக்குமே, கோச்சடையானில் சூப்பர் ஸ்டாரே அவரது உருவத்துக்கு நடிப்புக்கொடுக்க போகிறாரா அல்லது அவரைப்போலவே இமிடேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த மிமிக்ரி நடிகரை வைத்து பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் செய்வார்களா என்பதே எனது கேள்வி. குரலை மட்டும் டப்பிங்கில் கொடுத்து விட்டால் போதும் கண்டுப்பிடிக்க முடியாது.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விரைவாக கோச்சடையானை துவக்கியதே இப்படியெல்லாம் கேள்விகளை உருவாக்குகிறது.ஏற்கனவே சுல்தான் அனிமேஷன் படமே இது போல ரஜினியின் முகம்,உருவத்தினை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மோஷன் கேப்சரிங்கை வேறு ஒருவர் மூலம் செய்து படமாக்க திட்டமிடப்பட்டது, இப்போது அதே வேலை பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்ற பெயரில் கோச்சடையானிலும் நடக்கலாம்,பழைய கள் புதிய மொந்தை :-))

சுல்தான் அனிமேஷன்  படத்திற்காக எடுக்கப்பட்ட முகம், உடல் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதிகளை பயன்ப்படுத்திக்கொண்டாலே போதும் மீண்டும் புதிதாக 3டி உருவத்தினை உருவாக்க கூடத்தேவை இல்லை. இம்முறை சொதப்பாமல் படத்தினை முடிக்க வேண்டுமென்பதால் தான் இம்முறை அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ரவிகுமாரை ,ஸ்டூடியோவில் நன்றாக வேலை செய்யவும் , திரைக்கதையை கவனித்து வேலையை முடிக்கவும் கோச்சடையானில் பயன்ப்படுத்தி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.


--------

பின்குறிப்பு:

படங்கள் உதவி: கூகிள் படங்கள்,IMDB,AWN தளங்கள், நன்றி!