'லென்ஸ்'-ஐப் பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுத்தப்பட்டிருக்கிறது. அது மிக மேலோட்டமாக ஒரு அறிமுகமாக எழுத்தப்பட்ட கட்டுரை. எந்தத் துறையானாலும், எதைப்பற்றி அறிந்துகொள்வதானாலும் அது பல கட்டங்களாகத்தான் நிகழும். அந்த வகையில் இந்தக் கட்டுரை 'லென்ஸ்'-ஐப் பற்றி அடுத்தகட்டப் பார்வையாக விவரிக்கப்படுகிறது.
முந்திய கட்டுரையில் விடுபட்ட சில விஷயங்களையும் இந்தக் கட்டுரையில் காணமுடியும். 'ஃபோகல் லெந்த்'(Focal Length), 'லென்ஸ் ஸ்பீட்'(Lens Speed) மற்றும் 'டெப்த் ஆஃப் பீள்ட்'(Depth of Field) போன்ற லென்ஸோடு சம்பந்தப்பட்ட சில காரணிகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
லென்ஸின் தேவை என்ன?
கேமராவிலிருந்து லென்ஸை எடுத்து விட்டு, ஒரு கறுப்பு அட்டையில் துளையிட்டு அதை 'லென்ஸ் மவுட்ன்டில்'(Lens Mount) சுற்றி ஒட்டிவிடுங்கள். அதாவது துளையின் வழியாக மட்டும்தான் ஒளி செல்லவேண்டும். ஏறக்குறைய ஒரு 'பின் ஓல் கேமரா'(Pinhole Camera) மாதிரி. இப்போது படம் எடுத்துப்பாருங்கள். படம் வரும். ஆனால் தலைகீழாக இருக்கும். அதிக 'எக்ஸ்போஷர்'(Exposure) தேவைப்படும். நாம் லென்ஸைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது. லென்ஸ் பிம்பத்தைத் தலைகீழாகத் திருப்பி பதிவுசெய்யும். 'பின் ஓல்' க்கும் லென்ஸுக்கும் முக்கிய வித்தியாசங்களில் ஒன்று, லென்ஸ் குறைந்த வெளிச்சத்தையும் ஒன்றுகுவித்து கேமாராவுக்கு அனுப்பும், 'பின் ஓல்' அப்படியல்ல, குறைந்த வெளிச்சத்தையே உள்ளனுப்பும்.
ஒரு லென்ஸின் வழியாக அதிகபட்ச ஒளி உள் செல்வது என்பது அதன் சுற்றளவு(Diameter) மற்றும் 'ஃபோகல் லெந்த்'(Focal Length) ஆகியவற்றைப் பொறுத்தது.
'ஃபோகல் லெந்த்'(Focal Length) என்பது லென்ஸ் 'infinity'-இல் 'ஃபோகஸ்' செய்யப்பட்டிருக்கும் போது லென்ஸின் குவிமையத்திற்கும்(Optical Center of the Lens) 'பிம்பம் பதியப்படும் தளத்திற்கும்'(Film Plane) இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது. இந்த 'ஃபோக்கல் லெந்த்'-ஐக் கொண்டே லென்ஸை வகைப் பிரிக்கிறார்கள்.
இந்த 'ஃபோகல் லெந்த்' -ஐ லென்ஸின் சுற்றளவால் வகுக்க லென்ஸின் 'அதிகபட்ச அப்பார்ச்சர்'( Maximum Aperture) கிடைக்கும். அதாவது 3இன்ச் சுற்றளவு கொண்ட லென்ஸின் 'ஃபோகல் லெந்த்' 6இன்ச் என்றால் அதன் அதிகபட்ச அப்பார்ச்சர் f/2. அதேபோல் 1இன்ச் சுற்றளவு கொண்ட லென்ஸின் 'ஃபோகல் லெந்த்' 2இன்ச் என்றால் அதன் அதிகபட்ச அப்பார்ச்சர் f/2 ஆகும். (6/3=2, 2/1=2).
ஆகவே 'சுற்றளவு' மற்றும் 'ஃபோகல் லெந்த்' ஆகியவற்றைப் பொறுத்து அதன் அதிகபட்ச அப்பார்ச்சர் அளவு அமைகிறது எனில், லென்ஸின் உள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துவது எப்படி?
இங்கேதான் 'ஐரிஸ்'(Iris) தேவைப்படுகிறது. 'ஐரிஸ்' என்பது லென்ஸின் உள்செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் அமைப்பு(Aperture Control). 'ஐரிஸ்'-ஐச் சிறிதாக்குவதின் மூலம் நாம் லென்ஸின் 'செயல்படு சுற்றளவை'(Effective Diameter) குறைக்கிறோம். அதாவது 'ஐரிஸ்' திறந்திருக்கும் அளவே இப்போது லென்ஸின் சுற்றளவாகிறது. அதன் உள்செல்லும் ஒளியின் அளவும் குறைகிறது. இப்போது 'f- stop' என்பது 'ஃபோகல் லெந்த்'-ஐ புதிதாக 'ஐரிஸ்'-ஆல் உருவாக்கப்பட்ட 'சுற்றளவால்' வகுக்கக் கிடைக்கும். 2இன்ச் 'ஃபோக்கல் லெந்த்' -உடைய லென்ஸின் 'ஐரிஸ்' -ஆல் உருவாக்கப்பட்ட அளவு 1/8இன்ச் எனில் அதன் f-stop என்பது f/16 ஆக இருக்கும்.( 2/ 1/8=16)
'f-stop' என்பது 'ஐரிஸ்' உள்ளனுப்பும் ஒளியின் அளவை மட்டும் பொறுத்தது அல்ல, அது 'ஃபோக்கல் லெந்த்' மற்றும் 'ஐரிஸ்'-க்கும் இடைப்பட்ட உறவைப்பொறுத்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
கவனிக்க வேண்டிய முக்கியமானது ஒன்று உண்டு, அதாவது சிறிய 'ஐரிஸ்' அளவானது 'ஃபோக்கல் லெந்தில்' அதிக தடவை வகுக்க முடியும் என்பதினால் அதன் f-stop மதிப்பானது அதிகமாக இருக்கிறது. அதாவது 'ஐரிஸ்'- இன் திறப்பு சிறிதாக இருந்தால் f-stop Number அதிகமாக இருக்கும். ஆகவே சிறிய f-stop Number(f/2) அதிக ஒளியையும் பெரிய f-stop Number(f/16) குறைந்த ஒளியையும் உட்செல்ல அனுமதிக்கும்.
ஒவ்வொரு லென்ஸிலும் f-stop-ஐ வரையறுத்து வைத்திருப்பார்கள். பொதுவாக அவை இப்படி இருக்கும்.
1, 1.4, 2, 2.8, 4, 5.6, 8, 11, 16 மற்றும் 22. f-stop-இன் மதிப்பு உயர உயர, அதிகரிக்கும் மதிப்பானது அதன் முந்தைய மதிப்பு உள் விடும் ஒளியின் அளவில் பாதி அளவு ஒளியைத்தான் உட்செல்ல அனுமதிக்கும். உதாரணத்திற்கு f/11 ஆனது அதன் முந்திய மதிப்பான f/8-இல் பாதி ஒளியைத்தான் உட்செல்ல அனுமதிக்கும். அதையே வேறுவிதமாகப் பார்த்தால் f/8 ஆனது f/11-ஐ விட ஒரு மடங்கு அதிக ஒளியை அனுமதிக்கும்.
வித்தியாசம் ஒரு f-stop க்கும் அதிகமாகியிருந்தால், ஞாபகத்தில் கொள்ளவேண்டும் ஒவ்வொரு f-stop-க்கும் ஒளி இரட்டிப்பாகிறது. அதாவது f/4 ஆனது f/11-ஐ விட 8மடங்கு அதிக ஒளியை உள் விடுகிறது. ஏனெனில் f/11-இன் ஒளியைப்போல் f/8-இல் இரண்டு மடங்கு, f/8-ஐ போல் f/5.6- இல் இரண்டு மடங்கு, f/5.6-ஐப் போல் f/4 இரண்டு மடங்கு வெளிச்சத்தை உள்விடும். அதனால் f/11 விட f/4 8 மடங்கு அதிக வெளிச்சத்தை அனுமதிக்கும். (2 x 2 x 2 =8)
f-stop number குறையக் குறைய, ஒவ்வொரு மதிப்பிலும் ஒளி இரட்டிப்பாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
லென்ஸ் திறன்(Lens Speed):
லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop என்பது அதன் 'சுற்றளவையும்' மற்றும் 'ஃபோக்கல் லெந்த்'-ஐயும் பொறுத்து ஒவ்வொரு லென்ஸீக்கும் மாறுபடும். ஒரு லென்ஸின் குறைந்த f-stop f/1.9 - உம் மற்றொரு லென்ஸில் f/3.5-ஆகவும் இருக்கும். 'லென்ஸ் திறன்' என்பது ஒரு லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop-ஐப் பொறுத்தது. உதாரணத்திற்கு f/3.5 விட f/1.9 மதிப்புடைய லென்ஸ் 'fast lens' என்றும் f/3.5 லென்ஸ் 'slow lens' எனவும் அழைக்கப்படும். ஏனெனில் f/3.5 விட f/1.9 அதிக ஒளியை அனுமதிக்கும், அதனால் குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிக்க உதவுவதால் அதன் திறன்(Speed) அதிகமாக இருக்கிறது எனக் கொள்கிறோம்.
பொதுவாக 'wide-angle lenses' அதிக திறனும்(Fast Lens), 'Telephoto Lenses' குறைந்த திறன்(Slow lenses) ஆகவும் இருக்கும். காரணம் Telephoto Lenses - இல் அதிக கண்ணாடிகள் இருப்பதினால் அதன் நீளம் அதிகமாக இருக்கிறது. அதன் 'சுற்றளவு அதிக தடவை அதன் 'ஃபோக்கல் லெந்த்'-ஆல் வகுக்கப்படுவதினால் அந்த லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop அதிகமாக இருக்கிறது.(இதை கொஞ்சம் யோசித்துப் புரிந்துகொள்ளுங்கள்)
T-stops:
சில லென்ஸில் T-stops குறிக்கப்பட்டிருக்கும். இதற்கும் f-stops-க்கும் என்ன வித்தியாசம்?
f-stops என்பது கணிதவியல்(Mathematical) சமன்பாடுகளால் குறிக்கப்படுவது. T-stops என்பது ஒவ்வொரு தனிப்பட்ட லென்ஸையும் தனித்தனியாக அது உள்விடும் ஒளியின் அளவைக் 'Light Meter' கொண்டு சோதிக்கப்பட்டு குறிக்கப்படுகிறது. 'True stops' என்பதின் சுருக்கம் T-stops. f-stops- உம் T-stops- உம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி இல்லாத போது நாம் T-stops-ஐயே பயன்படுத்தவேண்டும். இரண்டு மதிப்புகளும் லென்ஸின் உருளையில் குறிக்கப்பட்டிருக்கும்.
'ஃபோக்கஸ்', 'Depth of Field and Circle of Confusion', 'Focal Length and Perspective' மற்றும் லென்ஸின் மற்றத் துணை உபகரணங்களைப்பற்றி அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.
குறிப்பு: நண்பர்களே தயவுசெய்து இந்தக் கட்டுரைக்கு உங்களின் கருத்துகளைச் சொல்லவும், ஏனெனில் இந்தக் கட்டுரை கொஞ்சம் ஆழமானதொழில்நுட்பத்தைப்பற்றி விவரிக்கப்பட்டு இருக்கிறது. இது புரிந்துகொள்ளும்படி இருக்கிறதா? தொடரலாமா?
தொடரலாம் என்றால் பெரும்பான்மையான விஷயத்தைப்பற்றி அடுத்தகட்டப் புரிதலுக்கான கட்டுரைகள் எழுத உத்தேசித்துள்ளேன். உதவுங்கள். நன்றி...