டிஜிட்டலின் கரங்கள் பரவாத துறை ஏதேனும் உண்டா என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால்.. நீங்கள் தயக்கமற்று சட்டென்று சொல்லி விடலாம் ..இல்லை என்று. அவ்வகையில் ஒளிப்பதிவிலும் டிஜிட்டலின் ஆதிக்கம் பரவ துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது.
எல்லாத் துறைகளிலும்..ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டம் என்பது விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் விசனத்திற்கும் உட்பட்டே அமைகிறது. காலபோக்கில் அதன் குறைகள் களையப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
இங்கே ஒளிப்பதிவிலும் அதேதான் நிகழ்ந்தது..நிகழ்கிறது. டிஜிட்டல் படப்பதிவு என்பது கால ஓட்டத்தில் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த ஒரு தொழில்நுட்பம் என்றுக் கொண்டாலும், அதன் பலன்களை நாம் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது என்றுதான் கருத வேண்டியதாக இருக்கிறது.
பல நிறுவனங்கள் டிஜிட்டல் படப்பதிவு கருவிகளில் கால்பதித்துவிட்டன. Panasonic, Canon, Sony, Arri, RedOne, Panavision என தொடரும் பட்டியலில், 'ARRI' நிறுவனம் 'Arriflex D-20' என்னும் டிஜிட்டல் கேமராவின் மூலம் தனது வலதுகாலை டிஜிட்டல் படப்பதிவுத் துறையில் எடுத்துவைத்தது. இது நிகழ்ந்தது நவம்பர் 2005-இல். பிறகு 2008-இல் 'Arriflex D-21' என்னும் மேம்படுத்தப்பட்ட கேமராவை கொண்டுவந்தது. அவ்விரு கேமராக்களையும் ஏற்றுக்கொள்ளுவதா இல்லையா என்று திரையுலகம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'Arri' நிறுவனம் மற்றுமொறு புதிய கேமராவை அறிமுகப்படுத்தியது.
ஏப்ரல்-2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'Arri Alexa' என்னும் இக்கேமரா பல விதங்களில் அதன் முந்தைய டிஜிட்டல் கேமராக்களில் இருந்து மேம்படுத்தப்பட்டு இருந்தது. எளிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
தற்போது 'Arri Alexa' கேமராவைப் பயன்படுத்தி ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருக்கிறேன். அக்கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை முந்தைய பதிவில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
இப்படத்தில் 'Arri Alexa' கேமராவின் மேம்படுத்தப்பட்ட வடிவமான 'Arri Alexa Plus'-ஐ பயன்படுத்துகிறேன். அக்கேமராவின் திறனைப் பற்றி சில செய்திகளை இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு ஒளிப்பதிவாளருக்கு, கேமரா என்னும் கருவி எவ்வகையில் துணைபுரியும் அல்லது துணைபுரியவேண்டும்?!.
இதே கேள்வியை சற்று மாற்றிக்கேட்டு புரிந்துக்கொள்வோம்..'ஒரு ஒளிப்பதிவாளர் விரும்பும் அல்லது உருவாக்கும் பிம்பத்தை, கேமரா என்னும் கருவி பதிவுசெய்ய எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்?
இந்த கேள்விக்கான பதிலை இரண்டு தளத்திலிருந்து சொல்லவேண்டும். ஒன்று 'பிலிம் கேமரா' மற்றொன்று 'டிஜிட்டல் கேமரா'. இரண்டு கேமராக்களின் செயல்பாடுகளிலும் ஆதாரமாக வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. பிலிம் கேமராவின் செயல்பாடுகள் டிஜிட்டல் கேமராவிலும் இருக்கிறது என்றாலும், டிஜிட்டல் கேமராவின் செயல்பாடுகளின் பல மாற்றங்கள் உண்டு. இங்கே, இந்த கட்டுரையின் நோக்கம் டிஜிட்டல் கேமராவைப் பற்றிப் பேசுவது என்பதனால், ஒரு டிஜிட்டல் கேமராவின் தகுதிகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
'ஒண்டிப்புலி' திரைப்படத்திலிருந்து .. |
தியரியாக இல்லாமல், நடைமுறையில் ஒரு டிஜிட்டல் கேமராவின் தேவைகள் என்ன என்பதையும் 'Arri Alexa Plus' கேமரா அதை எவ்விதத்தில் பூர்த்தி செய்தது என்பதையும் என் அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் விவரிக்க முயற்சிக்கிறேன்.
டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக கருதப்படுவைகள்:
அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)
ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)
இ. ரெக்கார்டிங் (Recording)
ஈ. வியு பைண்டர் (View Finder)
அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount):
'Alexa'வில் 'PL -Lens Mount' பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் லென்சுகளை (Ultra Prime, Master Prime, S4i, HR Zoom, Optimo Zoom..etc) பயன்படுத்த முடிகிறது. என்றாலும் இதன் 'லென்சு மௌண்டு' என்பது மாற்றி அமைத்துக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதனால், லென்சுகளுக்கு ஏற்ப நாம் மௌண்டை மாற்றியமைத்து பயன்படுத்தலாம். (Exchangeable Lens Mount allows the use of PL, Panavision and stills camera lenses)
மேலும் ஒளிப்பதிவில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, நாம் பதிவு செய்யும் பிம்பங்களின் 'போக்கஸ்' (Focus). போக்கசை சரியாக அமைக்க, அடிப்படையாக நல்ல லென்ஸ் வேண்டும். அதற்கு தேவையானபடி அந்த லென்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். 'Ultra Prime'லென்ஸ் அவ்வகையில் சிறப்பான லென்ஸ் ஆகும்.
......
மற்றவைகளை வரும் கட்டுரையில் காண்போம்......