திரைப்படம்:பிரிண்டிலிருந்து திரையிடல் வரை(From Print to Screening)
“தோழர், ப்ரிண்டிலிருந்து திரையிடல் வரை என்று ஒரு பதிவு போடவும். ஏனெனில் நான் இருதினங்களுக்கு முன், ௭ஆம் அறிவு திரைப்படம் பார்த்தேன். பல காட்சிகளில், தேவையற்ற blur (out of focus) வந்தது. நிச்சயம் ரவி கே. சந்திரன் அவர்கள் இப்படி படம்பிடித்திருக்க மாட்டார் என்று நம்புகின்றேன். என்னவோ ப்ரொஜெக்டரில் பிரச்சினை. ஆகவே, முதல் பிரிண்ட் ரெடியானதிலிருந்து திரையரங்கில் திரையிடப்படும் வரை என்ன நடக்கின்றது என்பதைப்பற்றியும் பலவிதமான ப்ரோஜெக்டர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்.”
திரைப்பட உருவாக்கத்தில் பல நிலைகள் உள்ளன. காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு திரைக்கதை ‘செல்லுலாய்டு’ படச்சுருளில் திரைப்படமாக எப்படி உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப்பற்றி பல கட்டுரைகள் இத்தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை என்னும் கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.நண்பர் சக்திவேல் கேட்டுக் கொண்டதற்கினங்க இப்பதிவு எழுதப்படுகிறது. நன்றி சக்திவேல்.
பிரிண்ட்டாக(Print - பிரதி) இருக்கும் திரைப்படம் நம்மிடம் எப்படி வந்துச் சேருகிறது என்பதையும், இப்பிரிண்டுகள் திரையரங்கள் எப்படி திரையிடப்படுகிறது என்பதைப் பற்றியும் சில தகவல்கள் இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
Final Print: ஃபைனல் பிரிண்ட்:
ஃபைனல் பிரிண்ட் என்பது நாம் தயாரித்த திரைப்படத்தின் இறுதி நிலை பிரதியை குறிக்கிறது. படம் பிடிக்கப்பட்டு, படத்தொகுப்பு செய்யப்பட்டு, டம்பிங் , சிறப்பு சத்தம், பின்னனி இசை போன்றவைகள் சேர்க்கப்பட்டு,வண்ணம் நிர்ணயம்(Color Correction) செய்யப்பட்டு, ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட பின், நாம் திரையரங்குகளில் பார்க்க ஏதுவான நிலையில் ஒளி மற்றும் ஒலி உள்ளடக்கிய இறுதி பிரதியை ‘ஃபைனல் பிரிண்ட்’ என்கிறோம்.
செல்லுலாயிட் பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்:
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, ஃபைனல் பிரிண்ட் என்பது இரண்டு வகைளில் உருவாக்கப்படுகிறது.
செல்லுலாயிட் பிரிண்ட் என்பது நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிரிண்ட் வகை. நம் சிறு வயதுகளில் ‘நெகட்டிவ்’ என்று சொல்லி திரைப்படத்தின் நெகட்டிவ் துணுக்குகளை வைத்து விளையாடியது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
உண்மையில் அவை நெகட்டிவ் அல்ல. ஒரு திரைப்படத்தை திரையரங்கில் திரையிடுவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்ட ஃபைனல் பிரிண்டின் துணுக்குகள் தான் அவை.
நெகட்டிவைப் பயன்படுத்தி நாம் பிரிண்டை உருவாக்குகிறோம். (நெகட்டிவ் மற்றும் பிரிண்ட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்)
அந்த சிறிய பிரிண்டு துணுக்குகள், ஒரு திரைப்படப் படச்சுருளின் நீண்டப்பகுதியின் ஒரு துணுக்கு தான். அந்த ஒவ்வொரு சிறிய நெகட்டிவ் ( நம் பாஷையில்) துணுக்கும் ஒரு ஃபிரேம்(Frame) ஆகும். இப்படி ஃபிரேம் ஃபிரேம்மாகத்தான் ஒரு திரைப்படம் இருக்கிறது. இதைத்தான் திரையரங்கில் தொடர்ச்சியாக நொடிக்கு 24 ஃபிரேம்கள் என்ற கணக்கில் திரையிடுகிறார்கள்.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்படி செல்லுலாயிட் பிரிண்டாக உருவாக்குவது ஒருவகை. இதை ‘optical print’ என்கிறோம். மற்றொன்று டிஜிட்டல் பிரிண்டாக உருவாக்குவது.
அண்மைக்காலங்களில் ‘Qube' சினிமா என்ற தொழில்நுட்பத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் திரையரங்களில் ‘Qube Cinema' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இந்த ‘Qube Cinema' என்பது டிஜிட்டல் திரையிடலைக் குறிக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
செல்லுலாயிட் பிரிண்டாக போடப்பட்டு திரையிடப்பட்டது போய் இன்று டிஜிட்டலாக திரைப்படங்களைத் திரையிடும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கணினியில் பார்ப்பதைப்போன்று விடியோ காட்சிகளாக திரையரங்குகளிலும் பார்க்க முடிகிறது. கணினியில் பார்ப்பதைப் போன்று திரைப்படத்தை ‘ஹார்டு டிஸ்கில்’(Hard Disc) சேமித்து, திரையரங்கில் டிஜிட்டலாக திரையிட முடிகிறது.
வீடியோ ப்ரொஜக்டர்களை (Video Projectors) கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்தும் இருப்பீர்கள். அதைப்போன்ற சக்தி மிகுந்த ப்ரொஜக்டர்கள் திரையரங்கில் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே அதற்குத் தேவையான டிஜிட்டல் பிரிண்ட் உருவாக்கப்படுகிறது. அதுவேறொன்றும் இல்லை, முழு திரைப்படத்தையும் விடியோவாக ஒரு ஹார்டு டிஸ்கில் சேமித்து தருவார்கள். அவ்வளவுதான்.
செல்லுலாயிட் பிரிண்ட் Vs டிஜிட்டல் பிரிண்ட்:
செல்லுலாயிட் பிரிண்ட் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்டுகளிடியே இருக்கும் வித்தியாசம் என்ன? நிறை/குறைகள் என்ன? என்பதையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்வோம்.
செல்லுலாயிட் பிரிண்ட்டைப் பயன்படுத்தும் போது ஆரம்பத்தில் (முதல் காட்சி, இரண்டம் காட்சி - காட்சிகளின் எண்ணிக்கை என்பதாய் புரிந்துக்கொள்க) தெளிவான காட்சியும் ஒலியும் கிடைக்கிறது. பலக் காட்சிகளாக(Shows) தொடர்ந்து திரையிடப்படும் பிரிண்டில் ஏற்படும் உராய்வு/தேய்வின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தெளிவில்லாதப் காட்சி மற்றும் ஒலி உண்டாகிறது. திரையரங்களில் சில பழையப்படங்களைப் பார்க்கும்போது அவை கோடுகளாலும் புள்ளிகளாலும் நிறைந்து, தெளிவில்லாத பிம்பமாங்களாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரே மழையாக இருக்கிறது என்று கிண்டல் அடித்திருக்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறதா..!?
டிஜிட்டல் பிரிண்டில் இப்பிரச்சனைகள் இல்லை. எத்தனை முறை திரையிட்டாலும் ஒரேவிதமான பிம்பங்களையும் ஒலியையும் கொடுக்கும். முதல் காட்சிக்கும் நூறாவது காட்சிக்கு எவ்வித வித்தியாசமும் இருக்காது. (தற்போதெல்லாம் திரையரங்கில் நூறாவது காட்சியே இருப்பதில்லை என்பது வேறு விஷயம்)
செல்லுலாயிட் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் திரையிடப்படும் முறைகள்:
செல்லுலாயிட் பிரிண்டுகளைத் திரையிடுவதற்கென்று ‘புரொஜக்டர்கள்’(Projectors) இருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் உருவாக்கப்படும் ஒளியின் மூலம் பிரிண்டில் இருக்கும் ஒளி/ஒலி திரையிடப்படுகிறது.
புரொஜக்டர்களில் ‘Carbon arc lamps’ மற்றும் ‘Xenon arc lamp’ ஆகிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒளி உருவாக்கப்படுகிறது. உலகளவில் ‘Carbon arc lamps’ என்பது 1900-களில் நடைமுறைக்கு வந்து 1960 ஆம் ஆண்டு வரை இருந்தது, பின்பு 1957-இல் ‘Xenon arc lamp’ ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘Carbon arc lamps’ ஆல் உருவாக்கப்படும் ஒளியில் Tungsten விளக்குகளில் இருந்து வரும் ஒளியைப் போன்று சிறிது ‘Warm' வண்ணம் கலந்து இருக்கும். மேலும் இந்த கார்பன் துண்டு எரிந்து போய்விடுமென்பதனால் அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். சில சமயம் திரையரங்கில் ஆப்ரேட்டர் கார்பனை மாற்ற தவறும்போது காட்சி தெரியாமல் நாம் கத்தியதும், விசில் அடித்ததும் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.
‘Xenon arc lamp’ என்பது அப்படி இல்லை. அது விளக்கைப் போன்றது. தொடர்ந்து எரியும். ஒளியும் துள்ளியமாக/வெண்மையாக இருக்கும். அதிக வெளிச்சத்தையும் கொடுக்கும்.
நம்மூர்களில் பெரும்பாலும் ‘Carbon arc lamps’ புரொஜக்டர்கள்தான் பயன்பாட்டில் இருந்தன, இருக்கின்றன. சென்னையில் சத்யம், தேவி போன்ற சில பெரிய திரையரங்களில்தான் ‘Xenon arc lamp’ புரொஜக்டர்கள் இருக்கின்றன. இதன் விலையும் அதிகம். இதனால் தான் இத்திரையரங்குகளில் படம் பார்க்கும்போது துள்ளியமான காட்சிகளைப் பார்க்க முடிகிறது. மற்ற திரையரங்குகளில் மங்களான காட்சிகளை பார்க்க முடிவதற்கு காரணம் ‘Carbon arc lamps’ என்பது புரிந்திருக்கும்.
மேலும் கார்பனை எரிக்க தேவைப்படும் மின்சாரத்தையும், கார்பன் துண்டையும் சேமிக்க விரும்பி, மின்சாரத்தைக் குறைத்து பயன்படுத்துவர். இதனால் உருவாகும் ஒளியின் தரம் மற்றும் அளவு குறைந்து விடும். குறைந்த ஒளியில் உருவாகும் பிம்பம் மங்களாகத் தெரியும். இதனால்தான் சிறிய திரையரங்குகளில் நாம் தெளிவான பிம்பத்தைப் பார்க்க முடிவதில்லை.
மொத்த திரைப்படமும் இரண்டாயிரம் அடிகள் கொண்ட ‘ரீலாக’(Reel) பிரிக்கப்பட்டு, ஏழு அல்லது எட்டு ரீல்களாகத் திரையரங்குகளுக்கு வருகிறது. இவற்றை திரையிட இரண்டு புரொஜக்டர்கள் தேவைப்பட்டன. முதல் ரீல் ஒரு புரொஜக்டரிலும் இரண்டாவது ரீல் மற்றொரு புரொஜக்டரிலும் இருக்கும். முதலாவது ரீல் முடியும் தருவாயில் இரண்டாவதை துவக்க வேண்டும். அப்படி துவக்க தானியங்கி முறைகள் இருந்தாலும், சிறிய திரையரங்குகளில் அத்தகைய வசதி இல்லாமையால் ஆப்ரேட்டரே அதைச் செய்ய வேண்டும். சில சமயங்களில் அப்படி செய்ய தவறியதும் அதனால் உண்டான இடைவெளியும் படம் பார்க்கும் சுவாரசியத்தை குலைக்கிறது, உடனே திரையரங்கில் விசில் சத்தம் பறந்ததை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?!
பின்பு திரையரங்கில் மொத்த ரீல்களையும் ஒன்றாக இணைத்து ஒரே ரீலாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்தது என்றாலும் பெரிய திரையரங்குகளில் மட்டுமே இத்தகைய வசதிகள் சாத்தியமாயின.
மேலும் திரைப்பட லேபில்(Film Lab) 'Optical Print' போடும்போதும் சில குறைகள் பிரிண்டில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது லேபின் தரத்தைப் பொருத்தது. அப்படி குறைப்பாட்டோடு பெறப்படும் பிரிண்டுகள் சிறிய திரையரங்களுக்கோ அல்லது வெளியூர் திரையரங்களுக்கோ அனுப்பி வைப்பார்கள். இதனாலும் சிறிய திரையரங்கில் தரம் குறைந்த திரையிடலைப் பார்க்கிறோம்.
தரமற்ற ஒளி, இரண்டு புரொஜக்டர்கள், மாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய கார்பன், அதிகரிக்கும் செலவினம் மற்றும் தேய்ந்து வீனாகும் பிரிண்டுகள் போன்ற எவ்வித தொல்லைகளும் இல்லாத டிஜிட்டல் ப்ரொஜக்டர்கள் தற்போது வந்துவிட்டது.
டிஜிட்டல் புரொஜக்டரில் துள்ளியமான ஒளி/ஒலி கிடைக்கிறது. மேலும் அது தொடர்ந்து எல்லா திரையிடலிலும் சிறப்பாக இருக்கும். அனைத்துக் காட்சிகளும் முதல் காட்சியைப் போன்றே துள்ளியமாகிருக்கும்.
டிஜிட்டல் ப்ரொஜக்டரில்..
CRT projector
LCD projector
DLP projector
LCoS projector
LED projector
Laser diode projector
போன்ற பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. நம்மூர்களில் Qube cinema, UFO, RDX போன்ற பெயர்களை டிஜிட்டல் திரையரங்குகளில் பார்த்து இருப்பீர்கள். இப்பெயர்கள் தொழில்நுட்பத்தைக் குறிக்கவில்லை. அவை இங்கே தமிழ்நாட்டில் டிஜிட்டல் திரையிடலை வழங்கும் நிறுவனங்களில் ‘Brand Names’ ஆகும்.
எனில் ஏன் டிஜிட்டல் திரையிடலிலும் குறைகள் இருக்கிறது?
1. டிஜிட்டல் புரொஜக்டரில் பயன்படுத்தப்படும் விளக்குகள் குறிப்பிட்ட மணி நேரம்தான்(usage time) பயன்படுத்த முடியும். அதற்கு மேலாக பயன்படுத்தினால் விளக்கின் தரம் குறைந்து ஒளியின் தரத்தை குறைக்கும். அப்படி பயன்படுத்தும் நேரம் என்பது பல நூறு மணி நேரங்கள் என்றாலும், புதிய விளக்கிற்கு ஆகும் செலவை குறைப்பதற்காக சில திரையரங்குகளில் குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் பயன்படுத்துகிறார்கள். இதனால் உருவாகும் குறை வெளிச்சத்தினால் பிம்பம் மங்களாகத் தெரிகிறது.
RGB என்று சொல்லப்படும் ஒளியின் ஆதார வண்ணங்களான சிகப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களில் ஏதேனும் ஒரு வண்ணம் குறைபட்டோ அல்லது எல்லா வண்ணங்களுமே குறைபட்டோ பிம்பம் வண்ணமற்று வெளிறித் தெரிகிறது.
தற்போது அனேகமான Qube திரையரங்குகளில் இத்தகைய பிரச்சனைகளை பார்க்க முடிகிறது. பெரிய திரையரங்குகளில் மட்டும்தான் சரியான பிம்பம் காணக்கிடைக்கிறது.
2. டிஜிட்டல் ஃபைலாக (Digital File) Hard Disc-இல் சேமிக்கும் போது, File-இன் size-ஐ குறைப்பதற்காக அதிகம் கம்பரஸ் செய்து சேமிக்கிறார்கள். இதனால் சேமிக்க தேவையான இடம் குறைகிறது. மேலும் டிஜிட்டல் ஃபைலாக மற்ற தேவைப்படும் நேரமும் குறைகிறது. இதனால் மிச்சமாகும் நேரமும், செலவும் இதைச் செய்ய தூண்டுகிறது.
‘Qube’ திரையிடலை வழங்குவது ‘Real Image Media Technologies Pvt. Ltd.’ நிறுவனம். இவர்கள் தான் முதன் முறையாக தமிழ்நாட்டில்/இந்தியாவில் டிஜிட்டல் திரையிடலை அறிமுகப்படுத்தினார்கள். வழக்கமான திரையிடலிலிருந்து திரையரங்குகளை டிஜிட்டல் திரையிடலுக்கு மாற்ற இவர்களே டிஜிட்டல் புரொஜக்டர்களை ‘கடன்’ வசதியோடு செய்துக் கொடுத்தார்கள்.
விலையைப் பொருத்து டிஜிட்டல் புரொஜக்டர்கள் கிடைக்கிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் சிறந்த புரொஜக்டர்களும், சிறிய திரையரங்குகளில் விலைகுறைந்த, தரம் குறைந்த புரொஜக்டர்களும் வழங்கினார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை முதலீடு என்பது இடத்திற்கு இடம் மாறத்தானே செய்கிறது. ஆகையால் சில/பல சிறிய டிஜிட்டல் திரையரங்குகளில் தரம் குறைந்த திரையிடலை நாம் பார்க்கிறோம்.
சத்யம் திரையரங்கம் தங்கள் டிஜிட்டல் திரையிடலை RDX என்று பெயரிட்டு அடையாளப்படுத்துகிறது. Real Digital Experience என்பதின் சுருக்கம் அது. இவர்கள் தங்களுடைய தரத்தை நிலைநிறுத்த, உலகின் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றான ‘DLP Cinema™ Digital Projector’-ஐப் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் சத்யத்தில் நாம் சிறப்பான திரையிடலை பார்க்க முடிகிறது.
‘UFO Moviez’ என்ற நிறுவனம் வழக்கும் UFO டிஜிட்டல் திரையிடல் என்பது மிகவும் தரம் குறைந்த புரொஜக்டர்களை சில இடங்களில் பயன்படுத்துவதாக கேள்வி. படங்களை DVD-இல் சேமித்து திரையிடுகிறார்கள் என்பதும் நான் கேள்விப்பட்ட அதிர்ச்சிகளில் ஒன்று. இப்படி ஒரு திரைப்படத்தை ஒரு DVD-இல் சேமிக்கும் அளவிற்கு கம்பரஸ் செய்தால் அதில் எப்படி தரம் இருக்கும்? DVD என்பது சின்னத் திரையான தொலைக்காட்சிக்கு வேண்டுமானால் போதுமானதாகிருக்கும். பெரிய திரைக்கு எப்படி சரிவரும்? சின்னத் திரைக்கே இப்போது புளுரே டிஸ்க் போன்ற HD தரங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மேலும்..திரையரங்கில் இருக்கும் குறைகளும், கவனமின்மையும் அலட்சியமும் தெளிவற்ற திரையிடலுக்கான காரணங்கள். சில திரையரங்குகளில் புரொஜக்டர் லென்சில் இருக்கும் அழுக்கைக் கூட சுத்தம் செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் படியும் அழுக்கு அப்படியே இருக்கிறது. அதன் ஊடாக வெளிப்படும் ஒளி எப்படி தரமானதாக இருக்கும்?!. இதை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.
மாத்தியோசி திரைப்படம் சென்னை உதயம் திரையரங்கில் இருக்கும் ‘மினி உதயத்தில்’ திரையிட்டார்கள். படம் பார்த்த என் நண்பர்கள் பிம்பங்கள் தரமாக இல்லை, மங்களாகவும் தெளிவற்றும் இருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். முதலில் நான் அதை பெரிது படுத்தவில்லை. ஏனெனில் எனக்கு கிடைத்த லேபில் என்னால் சரியான பிரிண்டை எடுக்க முடியவில்லை. தரமற்ற ஒரு லேப் அது. அதனால்தான் பிம்பங்கள் சரியாகத் தெரியவில்லை என்ற எண்ணத்தில், நான் திரையரங்கிற்கு சென்று பார்க்கவில்லை.
ஆனால், தொடர்ந்து பல நண்பர்கள் இதைச் சொன்னபோது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏனெனில் அவர்கள் சொன்ன அளவிற்கு என் பிரிண்ட் குறைபாடு கொண்டது இல்லை. ஆகையால் திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். அதிர்ந்துப் போனேன். திரையிடப்பட்ட பிம்பங்கள் குறைந்த ஒளியில் மங்களாகவும், தெளிவில்லாமலும் இருந்தன. மேலும் வண்ணம் சார்ந்து சில பிரச்சனைகளும் இருந்தது.
எனக்கு நன்றாகத் தெரியும் என்னுடைய பிரிண்டுகள் சரியாக வரவில்லை என்றாலும், இந்த அளவிற்கு மோசமானவைகள் அல்ல என்பது. ஆகையால் அது ஏன் அப்படி திரையிடப்படுகிறது என்று சரி பார்க்க புரொஜக்ஷன் அறைக்குச் சென்றேன். அங்கே இருந்த ஆப்ரேட்டரிடம் என் குறைகளை குறிப்பிட்டு காரணங்கள் கேட்டேன்.
அதற்கு அவர் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றார். நான் அதை மறுத்து திரையிடலில் இருக்கும் குறைகளை குறிப்பிட்டேன். இப்படி குறை வருவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக சொல்லி, அவற்றால் இருக்குமோ என்றேன். அவர் எல்லாவற்றையும் மறுத்துவிட்டார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பது அவரின் வாதம், குறை என் ஒளிப்பதிவில் என்பது அவரின் எண்ணம்.
பேசிக்கொண்டிருக்கும்போது புரொஜக்டர் லென்ஸைப் பார்த்தபோதுதான் அதைக் கவனித்தேன். லென்ஸ் முழுவதும் எண்ணைப் படிந்து காணப்பட்டது. அதை சரியாக துடைக்கவில்லை. கண்ணாடியின் மீது எண்ணை படிந்தால் எப்படி இருக்கும். கண்ணாடி மங்களாகத்தானே தெரியும். மேலும் அதில் அழுக்குகள் வேறு. இந்த லட்சணத்தில் என் படம் எப்படி தெளிவாகத் தெரியும்?
அதைக் குறிப்பிட்டுக் காட்டியும், அவர் அதை மறுத்ததும் நான் கோபம் கொண்டு சண்டைப் போட்டதும், பின் மேலாளர் வரை கொண்டுச்சென்று சண்டைப்போட்டும் ஒன்றும் நடக்காதது பற்றி எழுதினால் இக்கட்டுரை நீண்டுவிடும்.
நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்.
ஒரு ஒளிப்பதிவாளர் உருவாக்கும் சரியான பிம்பத்தை, திரையரங்கில் முழுமையாகப் பார்க்க முடியாமல் போவதற்கு பல நிலைகளில் பல குளறுபடிகள் நடக்க சாத்தியம் இருக்கிறது என்பதைத்தான்.