Tuesday, 19 March 2013

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2:


இக்கட்டுரை,  'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில் - என்ற கட்டுரையின் தொடர்ச்சி. அதை படித்துவிட்டு தொடரவும்.

ஒரு டிஜிட்டல் கேமராவின் முக்கிய பாகங்களாக அதன்..
அ. லென்ஸ் மௌண்டு (Lens Mount)
ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor)
இ. ரெக்கார்டிங் (Recording)
ஈ. வியு பைண்டர் (View Finder)

போன்றவைகள் கருதப்படுகின்றன என்பதையும், அதில் ‘லென்ஸ் மௌண்டு’ பற்றி முந்திய கட்டுரையில் பார்த்துவிட்டோம் என்பதை நீங்கள் படித்துவிட்டுதான் இங்கே வந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை தொடர்கிறேன்.. 

ஆ. இமேஜ் சென்சார் (Image Sensor):
டிஜிட்டல் கேமராக்களில் மிக ஆதார பாகம், அதன் சென்சார் தான். சென்சாரின் தரத்தைப் பொருத்தே டிஜிட்டல் கேமராக்களின் தரம் மதிப்பிடப்படுகிறது. 'Single CCD', '3 CCD' கேமராக்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ‘CCD’ மூலம் ஒளியை உள்வாங்கி பதிவுசெய்வது என்பது 'Single CCD' கேமரா எனவும், மூன்று ஆதார வண்ணங்களுக்கு ஏற்ப, மூன்று தனித்தனியான 'CCD'-க்கள் மூலமாக ஒளியை பிரித்து உள்வாங்கி, பதிவுசெய்வது '3CCD' கேமரா என, வகைப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். பெரும்பாலான ‘தொழில்முறை’(professional) கேமராக்கள் '3CCD' வகையைச் சார்ந்தவைகள் தான்.


'CCD' என்பது ஒரு வகையான சென்சார் என்றால், ‘CMOS’ என்பது மற்றொரு வகை சென்சார். இவைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தையும் தொழில்நுட்ப செயல்பாடுகளையும் அறிந்துக்கொள்ள, தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். விரைவில் அதைப்பற்றி எழுதுகிறேன். இங்கே நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது, ‘CMOS’ என்று ஒரு சென்சாரும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதும், அந்த ‘CMOS’ சென்சார்தான் ‘ALEXA’ கேமராவில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தான்.

‘ALEXA’ கேமராவில் ‘35mm format ALEV III CMOS’ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. முழு சென்சாரின் அளவு (Sensor Size) 3392 x 2200 Pixels என்றாலும், '16:9'Aspect Ratio-வில் நமக்கு பயன்படுவது (Image Out) 2880 x 1620 Pixels தான்.

(The ALEV III sensor has a horizontal pixel count of 3.5K resulting in true 2K
resolution. It covers the full Super-35 format and it provides a latitude of 14 stops and a base sensitivity of 800 ASA)

இந்த சென்சார் 800ASA திறன் கொண்டது. ‘14-stops latitude’ கொண்டது. இந்த ‘latitude’ மிக முக்கியமானது. ஃபிலிமைப் போல அதிக ‘latitude’ திறன் என்பது ஒரு டிஜிட்டல் கேமராவின் மதிப்பைக் கூட்டும். பொதுவாக டிஜிட்டல் கேமராக்கள் ‘latitude’ திறனில் தான் அடிவாங்கும். ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்கும் இருக்கும் வித்தியாசங்களில், இந்த ‘latitude’-தான் மிக முக்கியமானது. சில டிஜிட்டல் கேமராக்கள் ‘3-stops’ அல்லது ‘5-stops latitude’ திறன் தான் கொண்டிருக்கும்.

800ASA என்பதும் ‘14stops latitude’ என்பதும் ‘ALEXA’ கேமராவை திறன் வாய்ந்ததாகக் கருத செய்கிறது. 800ASA-வினால் குறைந்த வெளிச்சத்திலும் இக்கேமராவைப் பயன்படுத்த முடிகிறது. மேலும் உட்புற (Indoor) படபிடிப்பு மற்றும் இரவு நேரக்காட்சிகளில் குறைந்த அளவு ஒளியமைப்பே போதுமானதாக இருக்கிறது. குறைந்த அளவு ஒளியமைப்பு என்று நான் குறிப்பிடுவது ‘ஒளியின் அளவைத்தானே’(quantity of Light)தவிர, ஒளியமைப்பின் முறையை (Way of Light - Lighting Pattern) அல்ல .



குறிப்பாக உட்புற படபிடிப்பின் போது பெரிய விளக்குகளுக்கு (4K PAR) பதிலாக, சிறிய விளக்கை (4Bank/10 Bank) பயன்படுத்த முடிகிறது. இப்படி சிறிய விளக்குகளை பயன்படுத்துவது செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் மிச்சப்படுத்தும். ‘ஒண்டிப்புலி’ படத்தில் மிக குறைந்த ஒளியைப் பயன்படுத்தி சில காட்சிகள் எடுத்தேன். ஒரு காட்சியில் சிறுவிளக்குகளையும் கொஞ்சம் ‘fill light’-யும் பயன்படுத்தி பதிவுசெய்திருக்கிறேன்.

இரவு..

சிறுவிளக்குகள் + Photoflood Light

தீ..மட்டுமே

‘ALEXA’ கேமராவில் ‘14stops latitude’ திறன் இருப்பதனால் வெளிப்புற படப்பிடிப்பும் சுலபமானதாக இருக்கிறது. ஃபிலிமைப் பயன்படுத்துவதைப் போலவே ‘ALEXA’ கேமராவையும் பயன்படுத்த முடிகிறது. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காட்சியை ஃபிலிம் கேமரா மற்றும் ‘ALEXA’ கேமராவையும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் படம்பிடித்து பார்த்தால், இரண்டு கேமராக்களும் பதிவுசெய்த பிம்பங்களில் வித்தியாசம் இருக்கலாம்(ஒருவேளை) என்றுதான் நினைக்கிறேன். அதுவும் ‘latitude’ சார்ந்து பெரிதாக வித்தியாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் மிக மிக குறைவாகவே இருக்கும். அது ‘half stop’ அல்லது ‘one stop’-ஆகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தனியாக ‘Camera Test’ எடுத்துதான் அதைப் பார்க்கவேண்டும்.


இங்கே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்..‘ALEXA’ கேமராவை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒரு ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்துவது போலவே, வெளிப்புறப் படப்பிடிப்புகளில்  பயன்படுத்தலாம்/பயன்படுத்த முடிகிறது என்பதைத்தான். மேலும் ‘SHADOWS’-உம்‘HIGHLIGHTS’-உம் ஃபிலிமைப் போலவே பதிவுசெய்கிறது. இதனால் பிம்பத்தின் ‘Contrast Ratio’ பாதிக்கப்படாமல் இருக்கிறது.

'35mm size' சென்சார் என்பதனால் ‘SHALLOW DEPTH OF FIELD’ ஆனது 35mm ஃபிலிமில் கிடைப்பதைப்போன்றே கிடைக்கிறது.

மொத்தத்தில் Alexa-வின் ‘இமேஜ் சென்சார்’, நமக்கு போதுமானதாக இருக்கிறது என்பது உண்மை. ஃபிலிமுக்கு இணையான(ஏறக்குறைய) தரத்தில், பிம்பத்தை பதிவுசெய்கிறது என்பது என் அனுபவம்.