ELS |
மூன்று முக்கிய காரணிகள் கேமராக்கோணத்தைத் தீர்மானிக்கின்றன. அவை
SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.
SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு: படம்பிடிக்கப்படும் பொருளின் அளவைப்பொருத்து அந்த Frame எவ்வளவு பெரியது என்பது அமைகிறது, அதாவது பிம்பதின்(Image Size) அளவு. இந்த பிம்பதின் அளவைப்பொருத்து அது என்ன வகையான ஷாட்(Type of Shot) என வகைப்பிரிக்கப்படுகிறது. பதிவுசெய்யப்படும் பிம்பத்தின் அளவானது பொருளிலிருந்து கேமரா வைக்கப்பட்டிருக்கும் தூரத்தியும் பயன்படுத்தப்படும் லென்ஸின் ஃபோக்கல் லெந்த்தையும் பொருத்து அமையும். பொருளுக்கு அருகில் கேமரா இருந்தால் பிம்பம் பெரிதாக இருக்கும், அதேபோல் லென்ஸின் ஃபோக்கல் லெந்த் அதிகரிக்க(Longer the Lens) பிம்பத்தின் அளவும் அதிகரிக்கும். எதிர்மறையாக பொருளிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு கேமரா தூரமாக இருக்கிறதோ, அவ்வளவு சிறியதாக பிம்பத்தின் அளவு இருக்கும். அதேபோல் சிறிய ஃபோக்கல் லெந்த்(Shorter the Lens) என்றால் சிறிய பிம்பம்.
ஒரு ஷாட்டிலேயே பிம்பத்தின் அளவை மாற்ற முடியும். கேமராவை நகர்த்துவதின் மூலமாகவோ, நடிகனை நகரச்செய்வதின் மூலமாகவோ, அல்லது ஜூம் லென்ஸைப்பயன்படுத்தி ஜூம் செய்வதின் மூலமாகவோ பிம்பத்தின் அளவை மாற்றமுடியும். அது ஒரு குளோசப் ஷாட்டிலிருந்து வைட் ஷாட்டாகவோ அல்லது வைட் ஷாட்டிலிருந்து குளோசப் ஷாட்டாகவோ மாற்றலாம்.
பிம்பத்தின் அளவு என்பது கேமராவின் தூரம் மற்றும் ஃபோக்கல் லெந்த்தால் மட்டும் முடிவுச்செய்வது இல்லை, அது படம்பிடிக்கப்படும் பொருளின் அளவையும் பொருத்து இருக்கிறது. ஒரு மனிதக்குழந்தையின் குளோசப் ஷாட்டிற்கும் யானைக்குட்டியின் குளோசப் ஷாட்டிற்கும் வெவ்வேறு வகையான ஃபோக்கல் லெந்த்துடைய லென்ஸ் தேவைப்படும். ஆகவே படம் பிடிக்கப்படும் பொருள் ஃபிரேமில்(Frame) எந்த அளவு பதிவுசெய்யப்படுகிறது என்பதைப் பொருத்து அது என்னவகையான ஷாட் (type of shot) என வகைப்படுத்தப்படும்.
EXTREME LONG SHOT (ELS): எக்ஸ்டிரீம் லாங் ஷாட்
ஒரு காட்சி நடக்கும் முழு இடத்தையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் காட்டுவதற்கு 'எக்ஸ்டிரீம் லாங் ஷாட்(ELS)' பயன்படுத்தப்படும். ஆர்வத்தை தூண்டும் விதமான செயல்களை காட்டும்போதும் மற்றும் மேலும் அகண்ட நிலத்தை பார்வையாளனுக்கு காட்ட விரும்பும் போதும் மட்டும் Panning செய்தால் போதும். பொதுவாக ELS நிலையான ஷாட்டாக இருப்பது நல்லது. உயரமான இடத்திலிருந்து 'ELS' எடுக்கப்படவேண்டும். மலைமுகட்டிலிருந்தோ, கட்டிடத்தின் மேலிருந்தோ, விமானத்திலிருந்தோ எடுக்கலாம். ஒரு இராணுவ அணிவகுப்போ, ஒரு தொழிற்சாலையின் நிலப்பரப்போ அல்லது விவசாயப்பண்ணையின் விஸ்த்தாரமோ காட்டப்படும் போது பார்வையாளனின் ஆர்வம் அதிகரிக்கும், கதை சொல்லத்துவங்குவதிற்கு முன்பாகவே அவனை கதை களத்திற்குள் கொண்டுவந்துவிடமுடியும். எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போதெல்லாம் 'ELS'-ஐ பயன்படுத்த வேண்டும், இதன்மூலம் காட்சிக்கு ஒரு பிரமாண்டத்தை கொடுத்து பார்வையாளனின் ஆர்வத்தை தூண்டி கதையில் ஈடுபாட்டை அதிகரிக்கசெய்ய முடியும்.
LONG SHOT (LS):லாங் ஷாட்
லாங் ஷாட் ஒரு காட்சி நடக்கும் இடத்தை முழுதாக காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த இடம் அதிலிருக்கும் மக்கள் மற்றும் பொருள்களைக் காட்டப்பயன்படும். ஒரு 'LS' என்பது கதை நடக்கும் வீடாகவோ, தெருவாகவோ அல்லது ஒரு அறையாகவோ இருக்கலாம். 'LS'-ஐப் பயன்படுத்தி அந்த காட்சியில் சம்பந்தப்பட்ட எல்லவற்றையும் தெளிவாக காட்டிவிடவேண்டும், அப்போதுதான் பார்வையாளன் அந்த காட்சி எங்கு நடக்கிறது, யார் யாரெல்லாம் பங்கு பெறுகிறார்கள், என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். இடையே குளோசப் ஷாட் வந்தாலும் கதை நடக்கும் இடத்தை தெளிவாக குழுப்பமில்லாமல் புரிந்துக்கொள்ளுவான். காட்சிக்குள் வரும் நடிகனையும் அல்லது வெளியேறும் நடிகனையும் 'LS'-இல் காட்ட வேண்டும். அதேபோல் குளோசப் ஷாட்டில் நடிகர்கள் இடமாறும் போது அவர்கள் அந்த களத்தில் எங்கிருக்கிறார்கள் என்பதை 'LS' மூலம் பார்வையாளனுக்கு தெரியப்படுத்திவிடுவது நல்லது. சில சமயம் நடிகனின் முழு உருவம்(தலை முதல் பாதம் வரை) மட்டும் படம் பிடிக்கப்படும், கதை நடக்கும் முழு இடத்தை காட்டாமல். அப்படி எடுக்கப்படும் ஷாட்டுகளை 'ஃபுல் ஷாட்'(Full Shot) என்கிறோம். அல்லது அது 'மீடியம் லாங் ஷாட்டாவும்'(Medium Long Shots) இருக்கலாம்.
LS |
MEDIUM SHOT (MS or MED): மீடியம் ஷாட்
லாங் ஷாட்டிற்கும் குளோசப் ஷாட்டிற்கு இடைப்பட்ட ஷாட் இது. நடிகனின் தலையிலிருந்து இடுப்பு வரை அல்லது முட்டி வரை கம்போஸ் செய்யப்படும். பல நடிகர்கள் இணைந்திருக்கும் போது 'MS' சிறப்பாக பயன்படும், ஏனெனில் அவர்களின் முகபாவனைகள், செயல்பாடுகள் சரியாக பார்வயாளனால் பார்க்க வைக்க முடியும். ஒரு லாங் ஷாட்டிற்கு பிறகு வரும் 'MS' மூலமாக பார்வையாளனை சரியான இடத்தில் நிறுத்தி காட்சியைப் சிறப்பாக பார்க்க வைக்க முடியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு 'MS' மிக அதிகமாக பயன்படும், ஏனெனில் சிறிய திரை என்பதினால் பார்வையாளன் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். நடிகர்கள் இடமாறுவதையும், மற்ற நடிகர்களையும் காட்ட Panning செய்து காட்டலாம்.
'MS'-இல் முக்கியத்துவம் வாய்ந்தது 'Two Shot' ஆகும். இதில் இரண்டு நடிகர்கள் கம்போஸ் செய்யப்பட்டிருப்பார்கள். கதாநாயகனும் நாயகியும், நாயகனும் வில்லனும் அல்லது நாயகனும் அவன் நண்பனும் என்று. இரண்டு நடிகர்கள் அவர்களிடையே பரிமாறிக்கொள்ளும் உரையாடலையோ அல்லது செயலையோ காட்ட இந்த 'Two Shot' அதிகமாக பயன்படும். இந்த 'Two Shot' ஹாலிவுட் படங்களில் முதலில் பயன்படுத்தப்பட்டது, அதனால் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த ஷாட்டை "American-shot" என்றே அழைக்கிறார்கள்.
பல வகையில் இந்த 'Two Shot'-ஐப் கம்போஸ் செய்யலாம். அதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது இரண்டு நடிகர்கள் ஒருவருக்கொருவை எதிராக முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பது மாதிரி நிற்பது, கேமராவிற்கு புரஃபைலாக(Profiles) நிற்பது. இளைஞர்கள் தெளிவான முக அமைப்பு இருப்பவர்கள் இந்த வகை ஷாட்டில் அழகாக இருப்பார்கள், வயதானவர்களை இப்படி படம் எடுப்பது தவிர்ப்பது நல்லது. இந்த வகை ஷாட்டில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் இரண்டு நடிகர்களும் சரிச்சமமான முக்கியத்துவத்தை பெறுவார்கள். வசனம், செயல் அல்லது குறிப்பிடும்படியான ஒளியமைப்பினால் மட்டுமே ஒரு நடிகனை மற்ற நடிகனிடமிருந்து தனித்து பிரித்து அவனின் முக்கியத்துவத்தைக் காட்ட முடியும். ஷாட்டின் இடையில் நடிகர்கள் இடம் நகர்வதின் மூலம் பார்வையாளனின் கவனத்தை அவர்களின் மீது திருப்பலாம்.
1.இரண்டு நடிகர்களும் சரிச்சமமாக அமர்ந்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்களோ அவர்களின் மீது கவனம் செல்லும்.
2.கண்ணாடியில் ஒரு நடிகனின் உருவம் தெரியும் படியும் Two-Shot அமைக்கலாம். இதில் வலதுப் பக்கமிருக்கும் நடிகை கவனம் பெறுவார், ஏனெனில் அவரின் உருவம் பெரிதாக இருக்கிறது.
3.இதில் இரண்டு நடிகர்களும் வெவ்வேறு உயரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இடதுபுறம் இருக்கும் நடிகை சரியான ஒளியமைப்பில் முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறார், வலது புறமிருக்கும் நடிகர் கேமராவை நோக்கி சிறிது தன் முகத்தை வைத்திருக்கிறார், அதனால அவரின் இரண்டு கண்களையும் நாம் பார்க்க முடிகிறது.
4. நின்றுக்கொண்டிருக்கும் நடிகர் கவனத்தைப் பெறுவார்.
5.வலதுபுறமிருக்கும் நடிகை கவனத்தைப்பெறுவார்,காரணம் தேவையான ஒளியமைப்பு மற்றும் முகத்தை சரியாக பார்க்க முடிவது.
6.இடதுபுறம் இருக்கும் நடிகர் சற்று கீழாக இருந்தாலும் அவரே கவனத்தை பெறுவார், காரணம் அவரின் முகத்தை சரியாக பார்க்கும் படியாக கோணம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒளி/நிழலைக்கொண்டு அவருக்கு ஒளியமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
7. வலதுபுறம் இருப்பவர் கவனத்தை பெறுவார்.
CLOSE-UP (CU):குளோசப்
ஒரு குளோசப் ஷாட் என்பது கதையின் தன்மைக்கேற்ப முடிவுசெய்யப்படுகிறது. மீடியம் குளோசப் ஷாட்(medium close-up) என்பது தலைக்கு மேலே சிறிது இடம் விட்டு தோல்பட்டைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட வரை கம்போஸ் செய்யப்படும். ஹெட் அண்ட் ஷோல்டர் குளோசப் ஷாட்(Head and Shoulder close -up) என்பது தலையிலிருந்து தோல்பட்டை வரை இருக்கும். ஹெட் குளோசப் ஷாட்(Head close-up) என்பது தலை மட்டும் கம்போஸ் செய்யப்பட்டிருக்கும். சோக்கர் குளோசப்(Choker close-up) என்பது புருவத்திலிருந்து தாடைவரை இருக்கும். குளோசப் என்பது இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் முடிவின் படியும் எடுக்கப்படும். எந்த வகையான குளோசப் என்று குறிப்பிடப்படாமல் இருந்தால் தலைமுதல் தோல்பட்டை வரை எடுப்பது நலம். குளோசப் ஷாட் என்பது மிக முக்கியமானது என்பதினால் அது ஒரு தனி அத்தியாயமாக விவரிக்கப்படுகிறது. இந்த '5Cs'-இல் அதுவும் ஒரு ஒரு 'C' என்பதை கவனத்தில் கொள்க.
INSERTS:இன்சர்ட்ஸ்(இடைச்சொறுகள்)
திரைமுழுவதும் வரும்படியான கடித வரிகள், தந்தி, புகைப்படம், செய்தித்தாள், போஸ்டர்ஸ் போன்றவை இன்சர்ட்ஸ் எனப்படும். சிலசமயம் முக்கியமான படபிடிப்பு முடிந்தப்பிறகு இந்த இன்சர்ட்ஸ் தனியாக எடுக்கப்படும். சில இன்சர்ட்ஸ்களில் அதன் பின்புறமும் தெரியும் படி இருக்கும், அந்த மாதிரியான ஷாட்டுகள் அந்த அந்த காட்சிகள் எடுக்கும் போதே எடுத்து விடுவார்கள்.
DESCRIPTIVE SHOTS: காரணப்பெயருடைய ஷாட்டுகள்:
1.Pan சாட்-பேன் ஷாட்: கேமரா நகராமல், வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ நகரும் நடிகனை படம் பிடிக்க கேமராவை பக்கவாட்டில் திருப்பி(Panning) அவனை தொடரவேண்டும், இந்த வகையான ஷாட்டை 'பேன் ஷாட்' என்கிறோம். பேன்(Pan) செய்து இடத்தையும் காட்டலாம்.
2.Dolly ,Crane சாட்- டாலி ஷாட், கிரேன் ஷாட்: கேமரா
நகர்ந்து வைட் ஷாட்டிலிருந்து(Wide shot) குளோசப் ஷாட்டிற்கு(Close-up
shot) வருவது அல்லது அதன் எதிர்மறையாக நகர்ந்து படம் பிடிப்பது டாலி(Dolly)
அல்லது ட்ராலி(Trally) ஷாட் எனப்படும். மேலும் கீழுமாக நகர்ந்து படம்
பிடிப்பது கிரேன் ஷாட் எனப்படும்.
3.Follow shot or a Tracking shot: கேமரா நடிகனின் நகர்வுக்கு ஏற்ப பக்கவாட்டில்/நேராக/பின்புறமாக நகர்ந்து படம் பிடிப்பது.
4.Low-சாட்- லோ ஷாட் : கேமரா மேல் நோக்கி கோணம் அமைக்கப்பட்டு படம் பிடிப்பது.
5.High-Shot: ஹை ஷாட்: கேமரா கீழ் நோக்கி கோணம் அமைக்கப்பட்டு படம் பிடிப்பது.
6.Reverse Shot: எதிர்மறையான இயக்கத்தில் படம் பிடிப்பது. அதாவது கீழே விழும் பொருள் மேலே எழுவது மாதிரியாக, மிதிவண்டியை பின்புறமாக ஓட்டுவதாக, பின்நோக்கி ஓடுவதாக படம் பிடிப்பது. இதை நீங்கள் 'சித்திரம் பேசுதடி' படத்தில் ஒரு பாடலில் பார்க்கலாம். 'அலையாயுதே' படத்தில் 'சினேகிதனே' பாடலிலும் பார்க்கலாம்.
7.Cut-in Shot: நேரடியாக கட் செய்து முந்திய காட்சியின் பகுதிக்கு போவது. முன்னால் நடந்ததை சொல்லும் போது இந்த யுக்தி பயன்படுகிறது.
8.Cut-away Shot: நேரடியாக கட் செய்து மற்றொரு காட்சிக்குப் போவது, அது கேமராவிற்கு அடுத்தப்பக்கத்திலும் இருக்கலாம் அல்லது எங்கோ நடக்கும் காட்சியாகவும் இருக்கலாம்.
9.Reaction Shot: செயல் அல்லது பேச்சற்ற முகபாவனைச் ஷாட்(Silent shot), ஒரு நடிகனின் பேச்சுக்கு மற்ற நடிகனின் முகபாவனையை காட்டும் ஷாட். இது பெரும்பாலும் குளோசப் ஷாட்டாகத்தான் இருக்கும்.
10.Wide-Angle, Telephoto or Zoom Shot: உபயோகிக்கும் லென்ஸைப்பொருத்து அந்த ஷாட் குறிக்கப்படும். வைட் ஆங்கிள் லென்ஸ் உபயோகித்தால் அந்த ஷாட் 'வைட் ஆங்கள் ஷாட்' எனப்படும், அதேப்போல மற்றவைகளும்.
11.Two-Shot , Three-Shot and Group-Shot: ஷாட்டில் இடம் பெறும் நடிகர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் அந்த ஷாட்டிற்கு பெயர்கொடுக்கப்படும்.
SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு மற்றும் பிம்பத்தின் அளவைப்பொருத்து அந்த ஷாட் அமைகிறது என்பதும் அதை பொருத்து அந்த ஷாட்டிற்கு பெயர் கொடுக்கப்படுகிறது என்பதையும் பார்த்தோம், இது கேமராக் கோணம் அமைப்பதில் கவனிக்க வேண்டிய காரணிகளில் ஒன்று. அதாவது பொருளின் அளவைப்பொருத்து எப்படி கேமராக்கோணம்(பார்க்கப்படும் பரப்பளவு/கோணம்) மாறுபடும் என்பதைப்பார்த்தோம். அதேபோல் மற்ற இரண்டு காரணிகலான..
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.
ஆகியவையைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்
முந்தையக் கட்டுரையில் கேட்கப்பட்டக் கேள்விக்கான பதில்கள்:
1. கேமராக்கோணம் அமைத்தலில் பூர்த்தி செய்ய வேண்டிய இரண்டு தேவைகள் என்ன?
ஒரு காட்சியை பார்வையாளன் சரியான இடத்திலிருந்து(best viewpoint) பார்க்க அனுமதிப்பதும், எந்த அளவு பரப்பளவைப்(How much area) பார்க்கிறான் என்பதையும் தீர்மானிப்பதும்.
2. ஒரு நிலையான கேமராக் ஷாட்டை 'அகநிலைக் கோணமா' அல்லது 'புறநிலைக் கோணமா' என்பதை எப்படி முடிவுசெய்வது?
அந்தக் காட்சி 'எடிட்' செய்யப்பட்டிருக்கும் முறையைப் பொருத்து அந்த ஷாட் 'SUBJECTIVE கோணமா' அல்லது 'OBJECTIVE கோணமா' என்பதை முடிவுச்செய்யமுடியும். அதாவது பூங்காவில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நடிகனின் குளோசப் ஷாட் போட்டுவிட்டு கேமராக் கோணத்தில் ஷாட் போட்டால் அது அந்த நடிகனின் பார்வையாக கருத முடியும், அதனால் அது 'SUBJECTIVE கோணமாக' கொள்ளலாம். அதுவே அந்தக் குளோசப் ஷாட் இல்லாமல் நேரடியாக கேமராக் கோணத்தில் ஷாட் போட்டால் அது 'OBJECTIVE கோண ஷாட்டாக' கொள்ளவேண்டும்.
இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:
1.EXTREME LONG SHOT-க்கும் LONG SHOT-க்குமான வித்தியாசம் என்ன?
2.Follow shot/Tracking Shot-க்கும் Pan shot-க்குமான வித்தியாசம் என்ன?