ஒரு
பொருளின் மீது விழும் ஒளியின் வண்ணத்தால் அந்தப் பொருளின் ஆதார நிறம்
மாறும், அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தின் மேல் விழும் சிவப்பு ஒளி அந்தக்
காகிதத்தை சிவப்புக் காகிதம் என்னும்படி செய்யும். நீல ஒளி நீலக் காகிதமாக
நினைக்கத் தூண்டும், நாம் எல்லாரும் அனுபவத்தில் கண்டிருப்போம்.
ஆனால் நாம் வெள்ளைக் காகிதத்தை அறிந்திருப்பதினால் அதன் மீது எந்த நிற ஒளி விழுந்தாலும் அது வெள்ளைக் காகிதம்தான் என்று மிகச்சுலபமாகத் தெரிந்து கொள்ள நம் மூளையும் நம் நினைவாற்றலும் முந்தைய அனுபவமும் உதவுகின்றன.
ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு படச்சுருளினால்(Film) அப்படி உண்மையை உணர முடியாது. அதற்கு மூளையோ, நம் நினைவாற்றலோ, முந்தைய அனுபவமோ இல்லை. அதனால் தன் மேல் விழும் ஒளியை அப்படியே பதிவுசெய்ய மட்டுமே முடியும்.
இங்கேதான் ஒரு பிரச்சனை, அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தை 'டே லைட்'-இல்(Day light - சூரிய வெளிச்சம்) காட்டினால் அது வெள்ளைக் காகிதம் என்றும், செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட 'டங்ஸ்டன் லைட்'-இல்(Tungsten Light- இழை வெளிச்சம்) காட்டினாலும் அது வெள்ளைக் காகிதம்தான் என நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படச்சுருள்(Film) சூரிய வெளிச்சத்தில் வெள்ளை நிற காகிதமாகவும், இழை வெளிச்சத்தில் காவி(warm) நிற காகிதமாகவும் பதிவுசெய்யும், அதாவது ஒரு படச்சுருளினால் இரண்டு வித ஆதார ஒளிகளைக் கையாள முடிவதில்லை.
நமக்கோ எந்த ஒளியில் காட்டினாலும் ஒரு பொருளின் ஆதார நிறம் பதிவுசெய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு படச்சுருளினால் இரண்டு வித வண்ண ஒளிகளைக் கையாள முடிவதில்லை. இந்த பிரச்சனையைத் தீர்க்க இரண்டு விதமான படச்சுருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
அதாவது 'டே லைட்'(Day light - சூரிய வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும்(Day Film),'டங்ஸ்டன் லைட்'(Tungsten Light- இழை வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும்(Tungsten Film) தயாரிக்கிறார்கள்.
முதலில் 'டங்ஸ்டன் ஃபிலிமும்'(Tungsten Film) பின்பு 'டே ஃபிலிமும்'(Day Film) கண்டுபிடித்தார்கள்.
டே ஃபிலிமானது(Day Film) பகல் வெளிச்சத்தில் பதிவுசெய்யப்படும் வெள்ளைக் காகிதத்தை வெள்ளையாகயும், டங்ஸ்டன் லைட்டில்(Tungsten Light- இழை வெளிச்சம்) பதிவுசெய்யப்படும் வெள்ளைக் காகிதத்தைக் காவி நிறத்திலும்(Warm Color) பதிவுசெய்யும். (ஏனெனில் டங்ஸ்டன் லைட்டில் காவி நிறம் அதிகம்)
'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film) செயற்கை விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட வெள்ளை காகிதத்தை வெள்ளையாகவும், சூரிய வெளிச்சத்தில் அதே வெள்ளை காகிதத்தை நீல நிறமாகவும் பதிவுசெய்கிறது. (ஏனெனில் சூரிய வெளிச்சத்தில் நீல நிறம் அதிகம்).
அதாவது 'டே ஃபிலிம்'(Day Film) நீலம் கலந்த ஒளியை வெள்ளையாகவும், 'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film) காவி கலந்த ஒளியை வெள்ளையாகவும் பார்க்கின்றன.
அதாவது ஒளியின் தன்மையை - வண்ணத்தை 'கெல்வின்'(Kelvin) என்ற அலகால் அளக்கிறார்கள்.
'கெல்வின்' என்பது வெப்பத்தை(Temperature) அளக்கப்பயன்படும் அலகு, அதாவது வெப்பம் வண்ணத்தையும்,வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பத்தை(Color Temperature) கெல்வினால் அளக்கப்படுகிறது.
ஒரு கறுப்பு இரும்புத் துண்டை(Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும்,பின்பு படிப்படியாக ஆரஞ்சு,மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது, அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெள்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.
அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400'K விலிருந்து 25000'K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500'K விலிருப்பதால், 'டே ஃபிலிம்'-ஐ 5500'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.
செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட இழை வெளிச்சமானது 3200'K விலிருக்கிறது, எனவே 'டங்ஸ்டன் ஃபிலிம்'-ஐ 3200'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.
அதாவது டே ஃபிள்மானது 5500'K ஒளியை வெள்ளையாகவும், டங்ஸ்டன் ஃபிள்மானது 3200'K ஒளியை வெள்ளையாகவும் பார்க்கின்றன.
டே ஃபிலிமை 3200'K இழை வெளிச்சத்தில் உபயோகிக்க '#80A' என்ற ஃபில்டரும், டங்ஸ்டன் ஃபிலிமை 5500'K சூரிய ஒளியில் உபயோகிக்க '#85' வகை ஃபில்டரும் உபயோகிக்கப்படுகின்றன.
இவ்வகை ஃபில்டர்கள் ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்பத்தின் அளவை மாற்றுவதின் மூலம் ஒளியின் வண்ணத்தை(தன்மை)மாற்றுகின்றன.
'ஃபிலிம் ஸ்பிட்'(Film Speed - படச்சுருளின் திறன்):
மாறுபட்ட ஆதார ஒளிகளுக்கு ஏற்ப படச்சுருள்கள் இருப்பது போல, ஒளியின் அளவைப் பொருத்து பயன்படுத்தக்கூடிய படச்சுருள்களும் உண்டு. அதாவது அதிக அளவு ஒளியிருக்கும் போது பயன்படுத்த ஒருவகை படச்சுருளும், குறைவான ஒளியிருக்கும் போது பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றொரு வகைப் படச்சுருளும் பயன்படுத்தப்படுகின்றன.
குறைவான ஒளியமைப்பிருக்கும் போது கிடைக்கக்கூடிய அந்தக் குறைவான ஒளியையும் தேவையான அளவிற்கு உள்வாங்கிப் பதிவுசெய்ய படச்சுருளுக்குத் திறன் அதிகமாக இருக்கவேண்டும், அதாவது ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் வேகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதுவே அதிகமாக ஒளியமைப்பு இருக்கும் போது உள்வாங்கிக் கொள்ளும் திறன் குறைவாக இருந்தாலே போதுமானது. இதன் அடிப்படையில் மாறுபட்ட திறனுடைய (அ) வேகம் உடைய படச்சுருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
படச்சுருளின் திறனை (அ) வேகத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த அதன் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதோடு, படச்சுருளின் தன்மையும் நாம் விரும்பத் தகாதவாறு மாறுபடுகின்றன. பதிவுசெய்யப்படும் காட்சியின் தரம் மாறுபடுகிறது. ஆழ்ந்து பார்க்க படச்சுருளின் துகள்கள்,வெளிச்சம் மற்றும் நிழலுக்கான விகிதம்(Contrast) போன்ற நிறைய காரணிகள் மாறுபடுகின்றன.
அதுமட்டுமல்லாது அதிக திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளைக் கொண்டு, அதிக ஒளியமைப்புக் கொண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும் போது சில நடை முறைச் சிக்கலும் உண்டு. ஏனெனில் நமக்கு அளவுக்கதிகமாக ஒளியமைப்பிருக்கும் போது குறைவான திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளே போதுமானது.
எனவேதான் மாறுப்பட்ட ஆதார ஒளியமைப்புக்கு ஏற்பவும் (Temperature of Light - Day (or) Tungsten), கிடைக்கக் கூடிய ஒளியின் அளவை பொருத்தும் (Amount of Light) நாம் படச்சுருளைப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு ஆதார ஒளிகளுக்கு ஏற்ப அதிக திறன் கொண்ட படச்சுருள்களும், குறைவான திறன் கொண்ட படச்சுருள்களும் தயாரிக்கவும் பயன்படுத்தவும் படுகிறது.
படச்சுருளின் திறனை (அ) வேகத்தை ISO , ASA என்று குறிக்கிறோம்.
ISO என்பது INTERNATIONAL STANDARD ORGANISATION என்பதின் சுருக்கம்.
ASA என்பது AMERICAN STANDARD ASSOCIATION என்பதின் சுருக்கம்.
படச்சுருள்கள் 50 ASA, 100 ASA, 200 ASA, 500 ASA என்ற வகைகளில் கிடைக்கின்றன. அதாவது 50 ASA-ஐ விட 100 ASA என்பது ஒரு மடங்கு அதிகம் சக்தி வாய்ந்தது. அதே போல 100 ASA-ஐ விட 200 ASA ஒரு மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. அதன்படி 50 ASA-ஐ விட 200 ASA என்பது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.