SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.
இதில் 'SUBJECT SIZE' மற்றும் 'SUBJECT ANGLE'-ஐப் பற்றி முந்தியக்கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக்கட்டுரையில் 'CAMERA HEIGHT'-ஐப் பற்றிப் பார்ப்போம்.
கேமரா உயரம் என்பது மிக முக்கியமான ஒன்று, ஒரு 'Subject'-ஐச் சார்ந்து கேமராவின் தூரமும், கோணமும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவத்தை கேமராவை அமைக்கும் உயரத்திலும் கொடுக்கவேண்டும். இது பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. அதாவது ஒரு நடிகனை படம் பிடிக்கிறோம் என்றால் லென்ஸ் எந்த உயரத்தில் இருக்கவேண்டும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. நடிகனின் கண்ணுக்கு நேராக இருக்கவேண்டும் என்பது மிக ஆதாரமான பொது விதி. நடிகன் நிற்கும் போது கேமரா அந்த உயரத்தில் நிறுத்தப்படவேண்டும், அதேபோல் நடிகன் உட்கார்ந்து இருக்கும் போது கேமராவும் உயரம் குறைக்கப்பட்டு அவன் கண்ணின் நேர் கோட்டில் அமைக்கப்படவேண்டும். ஆனால் சில ஒளிப்பதிவாளர்கள் தங்களின் உயரத்திற்கு சவுகரியமாக கேமராவின் உயரத்தை அமைத்துக்கொள்கிறார்கள். 'subject'-இன் உயரத்தை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.
Artistic, Dramatic மற்றும் Psychological தொடர்பான அனுகுமுறையை கேமராவின் உயரத்தை மாற்றியமைப்பதின் மூலம் ஏற்படுத்த முடியும். பார்வையாளனின் கவனமும் பங்குபெறலும் மறுவினையும் படமாக்கப்படும் பொருளைச்சார்ந்து கேமராவின் உயரம் அமைத்தலில் மாற்றி அமைக்க முடியும். அதாவது அவன் செயலை நேராகப் பார்க்கிறானா அல்லது கிழே இருந்தா, உயரே இருந்தா என்பதைப்பொருத்து பார்வையாளனின் புரிதல் மாறுபடும்.
ஒரு நடிகனின் குளோசப் ஷாட் என்பது அவன் நின்றிருந்தாலும் சரி உட்கார்ந்திருந்தாலும் சரி அவன் கண்ணின் மட்டத்திலிருந்து எடுக்கப்படவேண்டும். அப்போதுதான் பார்வையாளன் நடிகனை கண்ணோடு கண் பார்க்கமுடியும். கண்ணோடு கண் பார்த்துப் பேசுவதில் கிடைக்கும் உணர்வை நான் உங்களுக்கு சொல்லவேண்டியது இல்லை. அதனால் அது 'லாங் ஷாட்டோ', 'மிட் ஷாட்டோ' அல்லது 'குளோசப் ஷாட்டோ' எதுவாகிருந்தாலும் கேமராவை நடிகனின் கண் மட்டத்திற்கு அமைத்து படம் பிடிக்கவேண்டும்.
Point-of-view ஷாட்ஸ் எடுக்கும் போது இரு நடிகர்களின் உயரத்தைப் பொருத்து கேமராவின் உயரம் அமைக்கப்படும். ஒரு நடிகன் நின்று கொண்டும் அடுத்தவன் உட்கார்ந்துக்கொண்டும் இருப்பதாக இருந்தால், அவர்களின் உயரம் சார்ந்து Point-of-view ஷாட்ஸ் எடுக்கப்படும். உட்கார்ந்து இருக்கும் நடிகனின் பார்வையாக எடுக்கும் போது உட்கார்ந்து இருக்கும் உயரத்திலும், நிற்பவனின் பார்வையாக இருந்தால் நிற்கும் உயரத்திலும் கேமராவின் உயரம் அமைக்கவேண்டும்.
Subjective குளோசப்பில் நடிகன் கேமராவின் லென்ஸை நேரடியாக பார்க்கும் ஷாட்டை அப்படி பார்க்கப்படும் நபரின் உயரத்திலிருந்தே எடுக்கவேண்டும். அதாவது ஒரு நடிகன் தன் சக நடிகனை பார்ப்பதை Subjective close-up ஷாட்டாக எடுக்கும் போது சக நடிகனின் இடத்தில் கேமராவை வைத்து படமாக்கும் போது அந்த நடிகனின் உயரத்திலேயே கேமராவின் உயரம் இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் கேமராவின் உயரம் மாற்றி அமைக்கப்பட்டு , லென்ஸைப் பார்க்க மேலாகவோ அல்லது கீழாகவோ சக நடிகன் பார்க்கும்படி எடுத்தால் அது பார்வையாளனிடம் ஒரு அந்நியத்தன்மையை(awkward relationship) ஏற்படுத்தும். Subjective-வாக காட்டப்படும் நடிகனின் நிலையை எப்போதும் அவன் கண் மட்டத்திலேயே(eye-to-eye) கேமராவை வைத்துக் காட்டப்படவேண்டும். அதாவது பார்வையாளன், நடிகன் நின்றால் நின்றும், உட்கார்ந்தால் உட்காரவும் வேண்டும்.
சில சமங்களில் நடிகனின் முகவெட்டைப் பொருத்து, அதிலிருக்கும் சில குறைகளை நிவர்த்தி செய்வதிற்காக கேமராவின் உயரத்தை சிறிது மாற்றம் செய்து
Subjective குளோசப் ஷாட்டை எடுக்கலாம். ஆனால உயரம் சார்ந்த கோணமும் அந்த உணர்வும் மாறாமல். அதாவது உட்கார்ந்து இருக்கும் ஒரு நடிகனை நின்றிருக்கும் ஒரு நடிகன் பார்ப்பதாக எடுக்கும் போது கேமராவை நிற்கும் உயரத்தில் வைத்து எடுத்தால் உட்கார்ந்திருக்கும் நடிகனின் கண்கள் சரியாக தெரியாமலிருந்தால்(காரணம்: அந்த நடிகருக்கு கண்கள் உள்ளே ஒடிங்கி இருக்கிறது) கேமராவின் உயரத்தை கொஞ்சம் குறைத்து படமாக்கலாம், ஆனால நிற்கு நடிகனின் பார்வையாக இருப்பதனால் கேமராவின் உயரம் அந்த உணர்வை தரும்விதத்தில் உயரம் இருக்கவேண்டும்.
LEVEL ANGLE-லில் எடுக்கப்படும் ஷாட்டானது LOW ANGLE அல்லது TOP ANGLE-லில் எடுக்கப்படும் ஷாட்டைவிட குறைந்த ஆர்வத்தையே தூண்டினாலும், அது குளோசப் ஷாட் எடுப்பதிற்கும் ஒரு காட்சியை ஒரு பொது சராசரி உயரத்திலிருந்து(Eye-level) பார்ப்பதிற்கும் உதவுகிறது. Eye-level ஷாட்டுகள் ஒரு reference ஷாட்டாகவும் நம்பகத்தன்மையையும் கொடுக்கின்றன, ஏனெனில் பார்வையாளனும் அந்த காட்சியில் பங்கு பெற்று பார்ப்பதாக உணருகிறான்.
சில சமயங்களில் ஒரு Angle shot -ஐ விட ஒரு LEVEL ANGLE ஷாட்ஸ் மிகுந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றன. உதாரணமாக ஒரு வாகனம் கேமராவை நோக்கி வேகமாக வருவதைப்போல் படமாக்கும் போது அது பார்வையாளனை மோத வருவதாக நினைக்கத்தூண்டுகிறது. வாகனம் போத வரும் நடிகனின் இடத்தில் பார்வையாளன் தன்னை நிறுத்தி அதை தன் மேல் மோதுவதாக உணருகிறான். காரணம், பிம்பத்தில் ஏற்படும் வேகமான பெரிதாக்கம்(speed, increase in image size) மற்றும் subjective treatment.
அதேபோல் கருவிகளைக் காட்டும் போது LEVEL ANGLE-லில் காட்டுவது முக்கியம். ஏனெனில் அப்போதுதான் அந்த கருவிகளின் உண்மையான அமைப்பைத் தெரிந்துக்கொள்ள முடியும்.
.........................
இந்த கட்டுரையில் எப்போதெல்லாம் கேமராவின் உயரத்தை LEVEL ANGLE-லில் வைத்து எடுக்கவேண்டும் என்பதை விவரித்துள்ளேன். வேண்டுமானால் நன்றாக இன்னொறு முறை படித்து புரிந்துக்கொள்ளுங்கள். இது ரொம்ப முக்கியமானது ஏனெனில் நாம் காரணமே இல்லாமல் Low Angle/Top Angle பயன்படுத்துகிறோம். ஆனால் அப்படி எடுக்க கூடாது என்று காரணத்தோடு இந்த விதிகள் சொல்லுகிறது.
HIGH ANGLE மற்றும் LOW ANGLE எப்போதெல்லாம் பயன்படுத்தவேண்டும் என்பதை அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.
முந்தையக் கட்டுரையில் கேட்கப்பட்டக் கேள்விக்கான பதில்கள்:
1. ஏன் முப்பரிமாணத்தன்மை வெளிப்படும் விதத்தில் கேமராக்கோணம் அமைக்கவேண்டும்?
உலகில் நாம் பார்ப்பவை அனைத்தும் முப்பரிமாணத்தன்மை கொண்டவை, மனிதன், அறை, மரச்சாமான்கள், தெரு என எல்லாம் பொருள்கலும் முப்பரிமாணத்தன்மை உண்டு. ஒரு காகிதம் கூட முப்பரிமாணத்தன்மைக் கொண்டது, உயரம் அகலம் மற்றும் தடிமன் கொண்டது. நாம் கண்களினால் அப்படித்தான் பார்க்கிறோம். height, width and depth ஆகியவை முப்பரிமாணங்கள் எனப்படுகிறது. ஆகவே இருப்பரிமாண படச்சுருளில் முப்பரிமாணப் பிம்பங்களை உருவாக்க வேண்டும்.
2. முப்பரிமாணத்தன்மையை கொண்டுவர பயன்படும் சில வழிமுறைகளை கூறுக? அல்லது எந்த விதங்களில் ஒரு ஒளிப்பதிவாளன் முப்பரிமாணத்தை கொண்டுவரமுடியும்?
ஒளியமைப்பு, கேமராக்கோணம், கேமரா மற்றும் நடிகர்களின் நகர்வு, லென்சை தேர்ந்தெடுத்தல் என பல தொழில்நுட்ப உதவிகளைக்கொண்டு முப்பரிமாணப்பிம்பத்தைக் கொண்டுவரமுடியும்.
இந்தக் கட்டுரைக்கான கேள்வி:
1. CAMERA HEIGHT - கேமரா உயரம் என்பதை நீங்கள் எப்படி புரிந்துக்கொள்கிறீர்கள்?