"ஒளி
என்பதும் ஒரு கதாப்பாத்திரம், ஒரு சக்தி, ஒளியமைப்புச் செய்யும் போது
அதைத் மனதில் கொண்டு கையாண்டு பயன்படுத்து, பிறகு பார் அதன் பலனை."
ஒரு ஒளிப்பதிவாளனாக நான் எப்படி ஒரு காட்சிக்கு ஒளியமைப்பு செய்கிறேன், என்னவெல்லாம் காரணிகளாகக் கொள்கிறேன், எதையல்லாம் கவனிக்கிறேன் என்பதும், ஒளியமைப்பில் நான் பின்பற்றும் முறையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
ஒரு ஒளிப்பதிவாளன் என்பவன் இரண்டு விதத்தில் செயல் படவேண்டும். ஒன்று அவனுடைய ரசனை மற்றும் கற்பனைச் சார்ந்த அறிவு(Creative Knowledge)மற்றொன்று தொழில்நுட்ப அறிவு(Technical Knowledge). இந்த இரண்டு அறிவையும் எப்படிப் பயன்படுத்துகிறான் என்பதும், அதை எப்படி ஒன்றினைக்கிறான் என்பதைப் பொருத்தே அவனுடைய படைப்பு இருக்கிறது.
ஒரு காட்சியை விவரிக்கப்பட்டவுடன், நாம் முதலின் பார்க்க வேண்டியது அந்த காட்சி நடக்கும் தளத்திற்கு ஒளி எப்படி கிடைக்கிறது என்பது. உதாரணமாக ஒரு சிறிய படுக்கை அறை,வடிவமைக்கப்பட்ட அரங்கமாகிருந்தால் ஏதேனும் விளக்கைப் பயன்படுத்தி இருப்பார்கள். அதுவே உண்மையான தளம் என்றால் அந்த அறைக்கு ஒளி எங்கிருந்து வருகிறது என்பதனைப் பார்த்தால்,
பகலாகிருந்தால்
1.சன்னலின் வழியாக ஒளி உள்ளே வரும். - அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கலாம் அல்லது சன்னலுக்கு அருகில் வெளிச்சமாகவும் பாதி அறை இருட்டாகவும் இருக்கலாம்.
2.உள்ளே கூரையில் உள்ள விளக்கைப் பயன்படுத்தி இருப்பார்கள். - அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.
இதுவே இரவு என்றால் சன்னலிருந்து வரும் வெளிச்சமானது
1.நிலவு வெளிச்சமாகவோ, வெளியே எரியும் விளக்கிலிருந்தோ அல்லது சாலையில் செல்லும் வாகனத்திலிருந்தோ வருபவையாக இருக்கும்.- உள்ளே இருட்டாகவோ அல்லது விளக்கோ எரிந்துக்கொண்டிருக்கலாம்
2.அறைக்கு உள்ளே கூரையில் உள்ள விளக்கின் மூலமாக வெளிச்சம் வரும்.- அறை முழுவதும் வெளிச்சமாக இருக்கும்
3.இரவு விளக்கைப் பயன்படுத்திருப்பார்கள். - இருட்டாக, மங்கலான ஒளியாக இருக்கும்.
சரி வெளிச்சம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பது தெரிந்துவிட்டது. அடுத்து அந்த காட்சி நடக்கும் காலம் என்ன? இரவா பகலா? என்பதைக் கொண்டு வெளிச்சம் என்கிருந்து வரவேண்டும் என்பதையும், அந்த காட்சியின் தன்மை, சூழல் போன்றவற்றைக்கொண்டு ஒளியின் தன்மையை நிர்ணயிக்கலாம். மற்றும் படத்தின் தன்மை, வகையைப்பொருத்தும் ஒளியின் தன்மையை நிர்ணயிக்க வேண்டும். அதாவது நகைச்சுவைப் படமாகவோ ஜனரஞ்சகமானப் படமாகவோ இருந்தால் வெளிச்சம் மிகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்களின் அங்க அசைவுகள் பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும் என்பதினால். அதுவே ஒரு திரிலர் படத்திற்கு குறைந்த அளவு ஒளியை தேர்வுச்செய்யவேண்டும் ஏனெனில் காட்சியில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக காட்டப்படாதப் போதுதான் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும் கூடவே இருட்டு பயத்தைக் கொடுக்கும்.
சரி நமக்கு கொடுக்கப்பட்ட காட்சியில் காதலர்கள் இருவர் நள்ளிரவில் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வெளியே வந்து நிற்கும் காரின் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறார்கள். அது ஒரு திரிலர் படம். என்று கொண்டால். இப்போது ஒளியமைப்பிற்கு நமக்கு இருக்கும் சாத்தியங்கள் என்ன?
நள்ளிரவு என்பதினாலும் திரிலர் படம் என்பதினாலும் அதிகபடியான ஒளியமைப்பு இருக்க முடியாது எனில்..
1. காதலர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டிடுக்கும்போது உள்ளே இரவு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த மங்கலான ஒளியில் அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. சன்னல் வழியாக எந்த வெளிச்சமும் வரவில்லை. வெளியே கார் வந்து நிற்கும் போது சன்னல் வழியாக காரின் முகப்பு விளக்கின் வெளிச்சம் இவர்கள் மேல் விழலாம்.அல்லது விழாமல் போகலாம்.
2. உள்ளே எந்த விளக்கும் எரிய வில்லை. சன்னல் வழியாக ஏதோவொறு வெளிச்சம் இவர்கள் மேல் விழுந்திருக்கிறது. வந்து நின்ற காரின் வெளிச்சம் இவர்கள் மேல் விழுகிறது அல்லது விழவில்லை.
இதில் எந்த சாத்தியத்தை பயன்படுத்துப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவைச் சார்ந்தது. ஒரு காட்சிக்கு எந்த வித ஒளியமைப்புச் செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவு என்றால் அதை எப்படி ஒளிப்பதிவுச் செய்யப்போகிறீர்கள் என்பது உங்களின் தொழில்நுட்ப அறிவைப் பொருத்தது.
அதற்கு நீங்கள் சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
ஒளிப்பதிவு என்பதை ஒளியைக்கொண்டு படம் வரைவது(Painting with Light)என்பார்கள். இந்த கலைக்கு படச்சுருள், ஒளியமைப்புக் கருவிகள், வண்ணம் போன்றவற்றிய பற்றி அறிவு இருப்பதோடு, இதன் ஆதார தொழில்நுட்பங்களான எக்ஸ்போஷர், வண்ணத்தின் விதிகள் மற்றும் கண்ணாடியியல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு ஒளிப்பதிவாளன் இருபரிமாண நெகட்டிவில் முப்பரிமாணப் பிம்பத்தைக் கொண்டுவரவேண்டும். அதாவது நாம் இயல்பில் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் முப்பரிமாணத்தன்மைக் கொண்டவை. உயரம், அகலம் மற்றும் தூரம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்டது. ஆனால் நெகட்டிவ் என்பது உயரம் மற்றும் அகலம் என்ற இரண்டு பரிமாணங்களை மட்டும் கொண்டது. ஓவியமாகட்டும் புகைப்படமாகட்டும் அதில் இந்த முப்பரிமாணத்தன்மையை கொண்டுவருவதே அந்தக்கலையின் உன்னதம் அடங்கிருக்கிறது.
இந்த முப்பரிமாண பிம்பத்தைக் கொண்டு வருவதிற்கு ஒளியமைப்பில் நாம் கவனிக்க வேண்டியது, ஒரு பிம்பத்தில் இருக்கும் நடிகர்களையும்(Subject) பின்புலத்தையும்(Background) தனித்து பிரித்து காட்டுவது, பிம்பத்தில் இருட்டு அல்லது குறைந்தவெளிச்சம்(Shadow) பகுதி மற்றும் அதிவெளிச்சப்(Highlight) பகுதிக்கும் இடையேயான வித்தியாசங்களையும் நிர்ணயிப்பதாகும். இந்த வித்தியாசங்களை ஒளியைக் கொண்டோ அல்லது வண்ணத்தைக்கொண்டோ நிர்ணயிக்கலாம்.
ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது அந்தப்பொருளின் உருவத்தை காட்டுகிறது. அந்தப் பொருளில் வலைவுகளோ வடிவமோ இருக்க அங்கே உருவாகும் இருட்டே அல்லது குறைந்தவெளிச்சம்(Shadow) அந்த பொருளின் வடிவத்திலிருக்கும் வேறுபாட்டை காட்டுகிறது. மேலும் அதிவெளிச்சப்(Hightlight) பகுதியும் இதற்கு உதவுகிறது.
அதாவது வெளிச்சம்(Light), இருட்டு அல்லது குறைந்தவெளிச்சம்(Shadow), அதிவெளிச்சம்(Highlight) இவற்றைக்கொண்டு ஒரு பொருளின் முப்பரிமாணத்தன்மையை தெரிந்துக்கொள்ளலாம். பதிவுச்செய்யலாம்.
ஒளியமைப்பிற்கு இரண்டு ஆதார சித்தாந்தங்கள் உண்டு.
1. இயல்புத்தன்மை (Naturalism) - ஒளியை அது இருக்கும் விதத்திலேயே பயன்படுத்துவது. அதாவது இரண்டு நபர்கள் காலை சூரிய ஒளியில் எதிர் எதிராக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒருவர்க்கு சூரிய ஓளி நேரடியாக முகத்தில் விழும்(Face Light), மற்றவர்க்கு பின்புறம் விழும்(Back Light) அல்லவா? இதை அப்படியே பயன்படுத்தி ஒளிப்பதிவுச் செய்தல்.
2. அழகியியல் (Pictorialism) - ஒளியை அழகியலுக்காக மாற்றி அமைத்துக்கொள்வது, அது இயல்பு தன்னையில் இல்லாவிட்டால் கூட. அதே சூரிய ஒளி இரு நபர்கள் உதாரணத்தில் இருவருக்கும் பின்புறத்திலிருந்து ஒளி வரும்படி மாற்றி அமைத்துக்கொள்வது. ஏனெனில் Back light-இல் அழகாக இருக்கும் என்பதினால்.
இந்த Back Light அழகைத் தெரிந்துக்கொள்ள காலையில் பனிபடர்ந்த புற்களின் மீது சூரிய ஒளி விழும் திசையிலிருந்து பார்ப்பதை விட சூரிய ஒளிக்கு எதிர்புறத்திலிருந்து புற்களைப்பாருங்கள். அந்தப் புற்கள் இன்னும் அழகாகத்தெரியும். இதை ஒருமுறை முயன்றுப் பாருங்கள்.
ஒளியமைப்பில் இரண்டு முறைகள் உண்டு.
1. High-Key: காட்சிகளை வெளிச்சமாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை குறைத்தும் ஒளியமைப்பது.
2. Low-Key: காட்சிகளை இருட்டாகவும், வெளிச்சத்திற்கும் இருட்டிற்கு இடையேயான வித்தியாசத்தை அதிகரித்தும் ஒளியமைப்பது. காட்சியில் மிக குறைந்த இடங்களே ஒளியூட்டப்பட்டிருக்கும்.
ஒளியை புரிந்துக்கொள்ள ஒளி எதனால் ஆனது அல்லது ஒளியில் இருக்கும் காரணிகள்(THE PROPERTIES OF LIGHT) என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
நான்கு முக்கிய காரணிகளைக்கொண்டு ஒளியை விவரிக்க முடியும்:
1. Intensity- ஒளியின் அடர்த்தி அல்லது ஒளியின் அளவு. இதை 'foot-candles' என்ற அலகால் குறிக்கிறோம். ஒரு foot-candles என்பது ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் ஒளியின் அளவை அந்த மெழுகுவர்த்தியிலிருந்து ஒரு அடி தூரத்தில் இருந்து அளக்கும் போது கிடைக்கும் அளவைக் குறிப்பது.
2. Color- வண்ணம். ஒளி எதோ ஒரு வண்ணத்தைக் கொண்டுதான் இருக்கிறது. சூரிய வெளிச்சமோ மெழுகுவர்த்தி வெளிச்சமோ அதற்கென்று ஒரு வண்ணம் இருக்கிறது.
3.Quality- ஒளியின் தரம். இங்கே தரம் என்பது Hardlight, Softlight -ஐ குறிக்கிறது.
Hardlight-ஐ அதாவது ஒரே திசையில் குவிக்கப்பட்ட(direct) ஒளியானது அதிக
shadow-வை ஏற்படுத்தும்.
softlight-ஐ அதாவது திசைகளற்ற(Indirect or diffused) ஒளியானது குறைந்த அளவே
shadow-வை ஏற்படுத்தும் ஒளியாகவும் கொள்ளவேண்டும்.
4.Angle- ஒளிவிழும் திசை. பொருளின் மீது ஒளிவிழும் திசையைப்பொருத்து ஒளியின் அளவும் தரமும் மாறும்.
ஒளியை இரண்டுவிதமாகப் பயன்படுத்தலாம்:
ஒரு காட்சியில் ஒளியை சேர்ப்பது(Additive lighting) fill-ஐ அதிகப்படுத்துவதின் மூலமாகவோ அல்லது ஒளியை குறைத்து(subtractive lighting) negative fill கொடுப்பதின் மூலமாகவோ ஒளியமைப்புச் செய்யலாம்.
THREE-POINT LIGHTING:
மும்முனை ஒளியமைப்பு. அதாவது மூன்று ஆதார இடங்களிலிருந்து ஒரு பொருளையோ அல்லது நபரையோ ஒளியூட்டுவது.
1.Key Light - நபரை பார்ப்பதிற்கு தேவையான முதல் நிலை ஆதார ஒளி. இது நபரின் ஒரு பக்கத்திலிருந்து அமைக்கப்படும். இடதுபுறம் என்றால், இடதுப்புறத்தில் ஒளிவிழுவதோடு நபரின் வலதுப்புறத்தில்
Shadow-வை எற்படுத்தும்.
2.Fill Light- Key Light ஏற்படுத்தும் Shadow-வை குறைக்க வலதுப்புறத்திலிருந்து கொடுக்கப்படும். இது key light-இன் அளவை விட குறைவாக இருக்கும்.
இந்த Key Light-க்கும் Fill Light-க்கும் இடையேயான அளவிலிருக்கும் வித்தியாசத்தைதான் 'கான்ட்ரஸ்ட் ரேஷியோ'(Contrast Ratio) என்கிறோம். 'கான்ட்ரஸ்ட் ரேஷியோ'-வை மாற்றுவதின் மூலம் காட்சியின் பரிமாணத்தை மாற்றலாம்.
3. Back Light- என்பது ஒரு பொருளையோ அல்லது நபரையோ அவரின் பின்புலத்திலிருந்து பிரித்துக்காட்ட பயன்படுகிறது. அதாவது நபரின் பின்புறத்திலிருந்து அவர்மேல் ஒளி விழச்செய்வது இதனால் அவரைச்சுற்றி ஒரு ஒளிக்கோடு உருவாகி அவரை அவரின் பின்புலத்திலிருந்து பிரிக்கிறது.
இந்த முறை மிக ஆதாரமான ஒளியமைப்பு முறை, இதை அடிப்படையாகக் கொண்டு பல விதங்களில் ஒளியமைப்புச் செய்யலாம்.
மேலேச் சென்னவைகள் எல்லாம் நீங்கள் ஒளியமைப்புச் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்.
மேலும் ஒரு காட்சியை நீங்கள் எப்படி 'எக்ஸ்போஸ்'(Expose) செய்கிறீர்கள் என்பதும், என்னவிதமான லென்ஸ், படச்சுளின் திறனைபயன்படுத்துவதும் உங்களின் தொழில்நுட்ப அறிவு.
உங்களின் ரசனை மற்றும் கற்பனை அறிவையும் தொழில்நுட்ப அறிவையும் நீங்கள் எப்படி ஒன்றினைக்கிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களின் ஒளிப்பதிவின் தரம் அமையும்.