திரைப்படத் தொழில்நுட்பங்களில் நாம் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருப்பதில், இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன? என்பதும் ஒன்று. இத்தலைப்பைப்பற்றி பலபேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
ஒரு கமலை இரண்டு கமலாக காட்டுவதற்கும், ஒரு ரஜினியை இரண்டு ரஜினியாக காட்டுவதற்கும், அதுவும் அவ்விரண்டு நபரையும் ஒரே ஃபிரேமில் காட்டுவதற்கும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் மிக முக்கியமான தொழில்நுட்பத்தைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
இரட்டை வேடப்படங்கள் எடுப்பதற்கு முன்பெல்லாம்(குத்துமதிப்பாக 1990 முன்புவரை என்று வைத்துக்கொள்வோம்) 'மாஸ்க்' (Mask) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. இப்போது 'கிரின் மேட்' (Green mate/Blue mate) என்ற தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் ஏன்..கமல், ரஜினியின் காலங்களில் கூட 'மாஸ்க்' தொழில்நுட்பம் தான் பயன்பாட்டிலிருந்தது. இப்போது, அதாவது இந்த கணினி (அல்லது விடியோ சார்ந்த தொழில்நுட்பம்) கண்டுபிடித்தப் பிறகு என்று வைத்துக்கொள்வோம், இதற்கு பிறகுதான் 'Blue Mate' அல்லது 'Green Mate' என்ற இத்தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது. இப்போது 'Green Mate' தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டாலே போதுமானதுதான். ஆனாலும் முந்தைய தொழில்நுட்பத்தையும் கொஞ்சம் விளக்கி விடுகிறேன். சும்மா தெரிந்துக்கொள்ளுங்கள். ஒன்றும் மோசம் போய்விடாது.
'மாஸ்க்'(Mask) தொழில்நுட்பம்:
பொதுவாக இரண்டுநபர்கள்(அப்பா,மகன் என்று கொள்வோம்) ஒரே ஃபிரேமில் இருக்கிறார்கள் என்றால், உதாரணத்திற்கு.. அவர்கள் எதிர் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், என்ன செய்வோம் அவர்கள் இருவரையும் நிற்கவைத்து படம் பிடிக்க வேண்டியதுதான் அல்லவா? ஆனால் அதுவே அவ்விருவரும் ஒருவரே என்றால்? அதாவது அப்பா,மகன் இரண்டு வேடங்களிலும் சிவாஜியே நடிக்கிறார் என்றால்? எப்படி ஒருவரையே இரண்டு இடங்களிலும் நிற்க வைப்பது?
இங்கேதான் இந்த 'மாஸ்க்' தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது. முதலில் அப்பா சிவாஜியை அவர் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்துவார்கள், அவருக்கு எதிர்புறம் மகன் சிவாஜி இருக்க வேண்டும் அல்லவா..அவருக்கு எங்கே போவது? அவர்தான் அப்பாவாக எதிர்புறம் நிற்கிறாரே. அப்பா சிவாஜிதானே தன் ஒப்பனையைக் கலைத்துவிட்டு மகனாக வேடமிட்டு இங்கேயும் வந்து நிற்க வேண்டும். அவர் வரும் வரை அவ்விடம் காலியாகத்தானே இருக்கும்?
அதனால் அப்பகுதியை படம் பிடிக்காமலேயே இருக்கலாம் அல்லவா? அதனால் லென்ஸில் அப்பகுதியை படம் பிடிக்கும் பாகத்தை கருப்பு அட்டையால் மறைத்து விடுவார்கள். அதாவது அப்பா சிவாஜி இடப்பக்கம் நிற்கிறார் என்றால் மகன் வலப்புறம் நிற்பார் அல்லவா? அவ்வலப்புறத்தை லென்ஸில் கருப்பு அட்டை கொண்டு மூடிவிடும் போது என்ன ஆகும்? வலப்புறம் முழுவதும் கருப்பாக இருக்கும் அல்லவா? ஆமாம் கருப்பாகத்தான் இருக்கும்.
இங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஒளிப்பதிவு அல்லது புகைப்படம் பிடித்தல் என்பது எப்படி நடக்கிறது. லென்ஸின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒளியானது படச்சுருளில்(Film) விழுவதன் மூலம் படச்சுருளில் இருக்கும் இரசாயணம் மாற்றம் அடைந்து ஒளி விழுந்தப்பகுதி படமாக பதிவாகிறது. ஒளி விழாத பகுதி எவ்வித மாற்றமுமின்றி இருக்கிறது என்ற ஆதார புகைப்பட தொழில்நுட்பத்தை நினைவுக்கு கொண்டுவாருங்கள். அதன் படி பார்க்க, அக்கருப்பு அட்டை ஒட்டப்பட்ட வலதுப்பகுதி வழியே எந்த ஒளியும் லென்ஸின் உள்ளே சென்றிருக்காது அல்லவா? ஒளி உள்ளே செல்லாதபோது அப்பகுதி படச்சுருளில் எவ்வித மாற்றமும் நிகழாது அல்லவா. இடபுறம் படம் பதியப்பட்டும், வலதுப்புறம் படம் பதிவுசெய்ய தேவையான தகுதியுடன் இருக்கும் அல்லவா?
இப்போது ஏற்கனவே அப்பா சிவாஜி பிம்பம் பதியப்பட்ட படச்சுருள் பகுதியை 'பின்நோக்கி'(Rewind) சுற்றி துவக்கத்திற்கு கொண்டு வருவார்கள். இப்போது அப்பா சிவாஜி தன் வேஷத்தை கலைத்து விட்டு மகன் சிவாஜியாக வேடமிட்டு மகன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பார். லென்ஸில் அப்பா இருந்த இடபுறத்தை இப்போது கருப்பு அட்டையால் மூடிவிட்டு வலது புறத்தை திறந்து வைப்பார்கள். அதாவது மகன் இருக்கும் பகுதி. இப்போது படம்பிடிக்கும் போது என்ன நடக்கும்?
ஏற்கனவே பிம்பம் பதிவுசெய்யப்பட்ட அப்பா பகுதி இப்போது மூடப்பட்டிருப்பதனால் அதில் எவ்வித மாற்றமும் நிகழாது. அதே படச்சுருளில் மகன் பகுதியில் பிம்பம் பதிவுசெய்யப்படும். ஒரே படச்சுருளில் அப்பா மகன் இருவரின் பிம்பமும் பதியப்படும் அல்லவா!?.
அவ்வளவுதான் இப்படிதான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ஷாட்டும் படம் பிடிக்கப்படுகிறது. மிக எளிமையான தொழில்நுட்பம். கேட்பதற்கும் புரிந்துக் கொள்வதிற்கும் சுலபம். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.
இரண்டு கதாப்பாத்திரத்தின் இயக்கத்தையும், நிற்கும் இடத்தையும் முதலில் தெளிவாக வரையறுக்கவேண்டும். பின்பு கதை நிகழும் அரங்கை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒளியமைப்பும் மாறக்கூடாது. படச்சுருளின் துவக்கமும் முடிவும் இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் ஒன்றாக சீராக இருக்கவேண்டும். இரண்டு கதாப்பாத்திரத்தின் பேச்சும் செயலும் ஒன்றிணைந்து/ஒத்திசைந்திருக்க வேண்டும். லென்ஸில் மறைக்க பயன்படும் கருப்பு அட்டை மிகச் சரியாக இரண்டு பகுதியையும் பிரிக்க வேண்டும். இடம் மாற்றி வைக்கும் போதும் சரியாக பொருத்த வேண்டும் என நிறைய கடினமான வேலைகள் உண்டு இதில்.
இரண்டு கதாபாத்திரத்தின் உரையாடலை ஒன்றிணைக்க ஒலியைப் பயன்படுத்துவார்கள். அதாவது முதலில் படம் பிடிக்கப்படும் கதாப்பாத்திரம் பேசும் வசனங்களை ஒலி நாடாவில் பதிவு செய்திருப்பார்கள். அதை இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்கும் போது ஓட விடுவார்கள். முதல் கதாப்பாத்திரத்தின் வசனத்திற்கேற்ப இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்க வேண்டும், பேச வேண்டும். முதலில் படம் பிடிக்கப்பட்ட கதாப்பாத்திரம் அடுத்த கதாப்பாத்திரத்திறம் பேசுவதற்கான கால இடைவெளி கொடுத்திருக்கும். அதை ஒரு அளவாக கொண்டு இரண்டாம் கதாப்பாத்திரம் நடிக்கும்/பேசும். இதை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும்.
பழைய இரட்டை வேடப்படங்களில் இரண்டு கதாப்பாத்திரங்களின் இடையே ஒரு மெல்லியக் கோடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அதற்கு காரணம், கருப்பு அட்டையை மாற்றி ஒட்டுகிறார்கள் அல்லவா? அதனால் ஏற்படும் கோடுதான் அது. அதை தவிர்க்க, கோடு தெரியாமல் இருக்க பெரும்பாலும் அரங்கத்தில் எதாவது ஒரு செங்குத்தான பொருளை(தூண்) அக்கோட்டுக்கு நேராக வரும்படி கேமராக் கோணத்தை அமைத்துக் கொள்வார்கள். அக்கோடு அத்தூணில் ஒன்றி விடுவதால் நாம் அதை கவனிக்க மாட்டோம்.
'மிட்செல்'(Mitchell Camera) என்னும் கேமரா இவ்வகை 'மாஸ்க்' ஷாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. காரணம் அதில் மிகச்சரியாக படச்சுருளை 'Rewind' செய்யமுடியும். ஃபிரேம் கணக்கில் சரியாக அமைக்க முடியும் என்பதும், லென்ஸில் கருப்பு அட்டை பொருத்த போதுமான இடமிருந்ததும் ஒரு காரணம்.
ஆனால் இப்போது பயன்பாட்டிலிருக்கும் 'Green Mate / Blue Mate' தொழில்நுட்பத்தில் அப்பிரச்சனையை வேறு சில தொழில்நுட்பத்தின் உதவியோடு சரி செய்து விட முடிகிறது.
'Green Mate / Blue Mate'
முதலில் 'Green Mate / Blue Mate' என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். ஒரு நடிகனையோ பொருளையோ பச்சை அல்லது நீல வண்ண பின்புலத்தில் வைத்து படம் பிடிப்பதை இது குறிக்கிறது. இப்படி படம் பிடிப்பதன் மூலம் அந்நடிகனையோ அல்லது பொருளையோ சுலபமாக அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனியாக எடுத்து விட முடியும். கணினியில் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை மட்டும் தேர்ந்தெடுக்கும் படி செய்யமுடியும், அவ்வண்ணத்தை தேர்ந்தெடுத்து அதை தனியாக பிரித்து விட முடியும். இதனால் நடிகனும் பின்புலமும் தனிதனியாக ஆகிவிடும். இப்போது நடிகனை நாம் எந்த பின்புலத்தோடும் பொருத்திக் கொள்ள முடியும்.
எவ்வண்ணம் வேண்டுமானாலும் பயன்படுத்துலாமே? அப்போ ஏன் பச்சை/நீல வண்ணம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில் இவ்விரண்டு வண்ணங்கள் தான் நம்முடைய தோலிலோ உடம்பிலோ இல்லை என்பது தான் காரணம். இல்லை என்றால் வண்ணத்தை தேர்வு செய்து பிரித்தெடுக்கும் போது நடிகனின் உடற்பகுதியும் பிரிந்து விட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்கவே நம்முடைய உடம்பில் இல்லாத வண்ணத்தை பயன்படுத்துகிறார்கள். பச்சை அல்லது நீலம் என்பது நடிகன் உடுத்தும் உடையைப் பொருத்தது. உடையில் நீல வண்ணம் இருந்தால் பச்சை பின்புலமும்(Green Mate), பச்சை வண்ணம் இருந்தால் 'Blue Mate' பயன்படுத்தலாம்.
இந்த பச்சை/நீல பின்புலத்தை எப்படி ஏற்படுத்துகிறார்கள்?
பச்சை/நீல துணியை தேவையான அளவிற்கு பெரிதாக தைத்து அதை சதுரமான மரச் சட்டத்தில் இணைத்து பயன்படுத்துவார்கள் அல்லது ஒரு உள்ளரங்கில்(Indoor Studio) சுற்று சுவர்களை பச்சை/நீல வண்ண துணிகள் கொண்டு மறைத்து அல்லது பச்சை/நீல வண்ண பூச்சு பூசி பின்புலத்தை உருவாக்குவார்கள். இவ்வரங்கை 'Green/ Blue Mate studio' என்பார்கள்.
'Green/ Blue Mate' தொழில்நுட்பம்:
இங்கே கமல், அண்ணன் தம்பி என இரட்டைவேடத்தில் நடிக்கிறார் எனக் கொண்டால், முதலில் அண்ணன் கமலை அவர் இருக்கும் அரங்கத்தோடு (வீடு,அறை,பாலைவனம்..எதோவொன்று) படம் பிடித்து விடுவார்கள். பின்பு தம்பி கமலை 'Green/ Blue Mate'-இன் பின்னனியில் வைத்து படம்பிடித்து பின்புலத்தை நீக்கி விட்டு தம்பி கமலை மட்டும் அண்ணன் கமல் இருக்கும் அந்த ஷாட்டோடு இணைத்து விடுவார்கள்.
இங்கேயும் அதேதான். அண்ணன் கமலின் உரையாடலோடு, செயலோடு தம்பி கமலின் செயலும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அதற்கு அண்ணனின் வசனங்கள் பயன்படுகிறது. மேலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் கணினி உதவியுடன் அண்ணன் கமலின் காட்சிப்பகுதியை தம்பி நடிக்கும் போது இணையாக ஓடவிட்டு இரண்டையும் ஒன்றிணைக்கிறார்கள்.
தேவைப்பட்டால் இரண்டு கமலும் பங்குபெறும் அரங்கை தனியாக நடிகர்கள் இல்லாமல் படம்பிடித்து அதை பின்புலமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இம்முறையில் நடுவில் கோடு வரும் தொந்தரவெல்லாம் இல்லை. காட்சியை தத்துருவமாக எடுக்க முடிகிறது.
'Motion Control Camera' போன்ற அதி நவின கருவிகள் கொண்டு இன்று இயக்கத்திலிருக்கும்(Movement) நடிகர்களின் இரட்டை அல்லது பல வேடங்களை சிறப்பாக பதிவு செய்ய முடிகிறது. இரண்டு கதாப்பாத்திரத்தின் ஷாட்டுகளும் ஒரேவித இயக்கத்திலிருக்க வேண்டும். அதாவது ஒரு கதாபாத்திரத்தை படம் பிடிக்கும் போது கேமரா இயக்கத்திலிருந்தால்(Trally) இரண்டாவது கதாபாத்திரத்தின் போதும் அதேவித இயக்கத்தில் கேமரா இருக்கவேண்டும். மனிதனால் ஒரே மாதிரி இரண்டு தடவை கேமராவின் இயக்கத்தை கொண்டு வருவது மிகக் கடினம், அதுவே இந்த 'Motion Control Camera'-ஐக் கொண்டு சாத்தியமாக்க முடிகிறது.
இந்த 'Motion Control Camera' என்பது கணினியியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி. இதில் இணைக்கப்படும் கேமராவையும் சேர்த்து முழுகருவியின் இயக்கத்தையும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். அதாவது Trally, Crane, Panning, Tilting என எல்லாவித இயக்கத்தையும் கணினியில் 'Program' செய்து பயன்படுத்த முடியும். இதனால் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒரேவிதமான கேமரா இயக்கத்தை கொண்டு வர முடியும். இதைக் கொண்டு இரண்டு கதாபாத்திரங்களின் காட்சி பதிவின் போதும் ஒரேவித கேமரா இயக்கத்தைக் கொண்டு வந்து இயக்கத்திலிருக்கும் ஷாட்ஸை உருவாக்குகிறார்கள்.
மேலும் இரட்டை வேடப் படபிடிப்புகளின் போது, நடிகர்களின் சாயலில் இருக்கும் மற்றொரு நபரை (Dupe) பயன்படுத்துவது. மற்ற நடிகரின் உடம்பை பயன்படுத்தி விட்டு முகத்தை மட்டும் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது என்ற ஏமாற்று/ஒட்டு தொழில்நுட்பங்களும் பயன்பாட்டிலிருக்கிறது.
அது இரட்டை வேடமாகட்டும், பத்து வேடமாகட்டும் இதே தொழில்நுட்பம்தான். சண்டை காட்சிகள், பாடல்காட்சிகள் எல்லாமும் இப்படித்தான் எடுக்கப்படுகிறது.