Thursday, 21 March 2013

5Cs-கேமராக் கோணங்களின் வகைகள்:TYPES OF CAMERA ANGLES_Part_4


கேமராக்கோணத்தை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை


SUBJECT SIZE - படமாக்கும் பொருளின் அளவு
SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம்
CAMERA HEIGHT - கேமரா உயரம்.


இதில் 'SUBJECT SIZE'-ஐப் பற்றி முந்தியக்கட்டுரையில் பார்த்தோம். இந்தக்கட்டுரையில் 'SUBJECT ANGLE'-ஐப் பற்றிப் பார்ப்போம்.




எல்லாம் பொருள்கலும் முப்பரிமாணத்தன்மை கொண்டவை. ஒரு காகிதம் கூட முப்பரிமாணத்தன்மைக் கொண்டது, உயரம் அகலம் மற்றும் தடிமன் கொண்டது. உலகில் நாம் பார்ப்பவை அனைத்தும் முப்பரிமாணத்தன்மை கொண்டவை, நாம் கண்களினால் அப்படித்தான் பார்க்கிறோம். உயரம், அகலம் மற்றும் தடிமன் (height, width and depth). ஆகியவை முப்பரிமாணங்கள் எனப்படுகிறது. மனிதன், அறை, மரச்சாமான்கள், தெரு என எல்லாம் முப்பரிமாணத்தன்மைக்கொண்டவைகள். ஒரு ஒளிப்பதிவாளனின் வேலை, இருப்பரிமாண படச்சுருளில் முப்பரிமாணப் பிம்பங்களை உருவாக்குவது. ஒளியமைப்பு, கேமராக்கோணம், கேமரா மற்றும் நடிகர்களின் நகர்வு, லென்சை தேர்ந்தெடுத்தல் என பல தொழில்நுட்ப உதவிகளைக்கொண்டு அவர் முப்பரிமாணப்பிம்பத்தை உருவாக்குகிறார். 


இன்னொறுப் பக்கத்தைப்பார்க்க முடியவில்லை
'threequarter angling'
பொருளின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் போது அந்தப்பொருளின் முழு பரிமாணமும் தெரிவதில்லை. ஒரு நடிகனின் முகத்தை பக்கவாட்டில்(profile) கம்போஸ் செய்யும் போது அவன் முகத்தின் அடுத்தப்பக்கம் தெரிவதில்லை. இந்த வகை பிம்பங்களை 'flat'-ஆன பிம்பங்களாக பார்க்கப்படுகிறது. அதுவே 'threequarter angling' முறையில் கேமராக்கோணத்தை கொஞ்சம் நகர்த்தி அமைத்தால் அவன் முகத்தின் முழுதன்மையும் காணமுடியும். அதேப்போல் ஒரு கட்டிடத்தின் முப்பரிமாணத்தன்மையை அறிய கேமராக்கோணத்தை சரியாக அமைக்கவேண்டும், இல்லை எனில் அந்த கட்டிடம் வெறும் அட்டையில் செய்து வைத்திருந்ததைப்போல் இருக்கும். இதை தவிர்ப்பதற்கு கேமராக்கோணத்தை அமைக்கும் போது அந்தப்பொருளோடு சார்ந்து சரியான கோணத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்.  



கதைக்கு 'flat'-ஆன தன்மை தேவைப்பட்டால் ஒழிய, ஒரு ஒளிப்பதிவாளன் எப்போதும் கேமராக்கோணத்தை படமாக்கும் பொருளின் அல்லது இடத்தின் முப்பரிமாணத்தன்மையை வெளிப்படுத்தும் படியான கோணத்திலேயே அமைக்கவேண்டும். அதாவது 45டிகிரி கோணத்திலோ அல்லது 'three-quarter angle' முறையில் அமைக்கவேண்டும். அப்படி அமைக்கும் போது இரண்டு அல்லது மூன்று தளங்கள்(surfaces) தெரியும், மேலும் converging lines உருவாகி காட்சிக்கு 'perspective' கிடைக்கும். 



இந்த 'perspective' என்பது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் ஒரு கட்டிடத்தைப் நேராக நின்று பார்க்கும் போது அதன் உயரம், அகலம் தெரிகிறது, அதுவே கொஞ்சம் நகர்ந்து நின்று பார்த்தால் அதன் side view மூலம் அது எந்தனை தூரம் நீண்டு இருக்கிறது என்பதையும் பார்க்க முடியும் அல்லவா, அதைத்தான் 'perspective' என்கிறார்கள். இதை நீங்கள் உங்கள் வீடு, தெரு, மேசை, நபர் என எல்லாவற்றிலும் பொருத்திப்பார்க்கலாம். அதாவது ஒரு பொருளின் அல்லது நபரின் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களைப் பார்ப்பது. நாம் இரண்டு கண்கள் கொண்டவர்கள் என்பதினால், அந்த இரண்டு கண்களும் இடைவெளி விட்டு அமைந்திருப்பதினாலும் இயல்பாகவே நம்மால் அப்படி முப்பரிமாணத்தன்மையில் பார்க்க முடிகிறது. ஆனால் கேமராவில் ஒரு லென்ஸ் இருப்பதினாலும், படச்சுருள் என்பது இரு பரிமாணத்தன்மைக்கொண்டது என்பதினாலும் நாம் கேமராக்கோணம் அமைத்தலில் இந்த முப்பரிமாணத்தைக்கொண்டு வரவேண்டியதாக இருக்கிறது.



உயரம், அகலம்
முப்பரிமாணத்தன்மை

Perspective
ஒரு பொருளின் தன்மைகேற்ப கோணத்தை தேர்ந்தெடுக்க வேண்டியாதாக இருப்பதினால் இதை SUBJECT ANGLE - படமாக்கும் பொருளின் கோணம் என்கிறோம். 
அடுத்தக்கட்டுரையில் CAMERA HEIGHT - கேமரா உயரம் - அதாவது கேமரா வைக்கவேண்டிய உயரம் பற்றிப்பார்ப்போம்.







முந்தையக் கட்டுரையில் கேட்கப்பட்டக் கேள்விக்கான பதில்கள்:


1.EXTREME LONG SHOT-க்கும் LONG SHOT-க்குமான வித்தியாசம் என்ன?
ஒரு காட்சி நடக்கும் முழு இடத்தையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் காட்டுவதற்கு 'எக்ஸ்டிரீம் லாங் ஷாட்(ELS)' பயன்படுத்தப்படும்.


2.Follow shot/Tracking Shot-க்கும் Pan shot-க்குமான வித்தியாசம் என்ன?


Follow shot or a Tracking shot: கேமரா நடிகனின் நகர்வுக்கு ஏற்ப பக்கவாட்டில்/நேராக/பின்புறமாக நகர்ந்து படம் பிடிப்பது.


Pan Shot:பேன் ஷாட்: கேமரா நகராமல், வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ நகரும் நடிகனை படம் பிடிக்க கேமராவை பக்கவாட்டில் திருப்பி(Panning) அவனை தொடரவேண்டும், இந்த வகையான ஷாட்டை 'பேன் ஷாட்' என்கிறோம். பேன்(Pan) செய்து இடத்தையும் காட்டலாம். 


இந்தக் கட்டுரைக்கான கேள்விகள்:


1. ஏன் முப்பரிமாணத்தன்மை வெளிப்படும் விதத்தில் கேமராக்கோணம் அமைக்கவேண்டும்?
2. முப்பரிமாணத்தன்மையை கொண்டுவர பயன்படும் சில வழிமுறைகளை கூறுக? அல்லது எந்த விதங்களில் ஒரு ஒளிப்பதிவாளன் முப்பரிமாணத்தை கொண்டுவரமுடியும்?