Friday, 24 October 2014

சினிமா ரகசியம்-6: DTH-Disaster To Haasan.


(ஹி...ஹி நம்ம DTH- Direct To HeartU)
குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

மு.வ உரை:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

திருவள்ளுவரை சும்மாவா பொய்யா மொழிப்புலவர்னு சொன்னாங்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி திட்டமிட்டு ஒரு செயலை செய்ய வேண்டும், எப்படி சாதக,பாதகங்களை கணக்கிட வேண்டும் என்றெல்லாம் நச்சுன்னு ரெண்டே வரியில சொல்லிட்டார், உலகின் மிக சிறந்த துவித்தர் யாருன்னு என்னைக்கேட்டால் கண்ணை மூடிக்கிட்டு திருவள்ளுவர் பேரைச்சொல்வேன் :-))

ஆறு டிடிஎச் சேவைகளில் படம் வெளியிடுவதாக செய்தி வெளியானதுமே , 300 கோடி வசூல் என்றெல்லாம் கூச்சமேயில்லாமல் சில விசிலடிச்சான் குஞ்சுகள் புரளியை பரப்பின, உண்மையில் அதில் பாதியளவுக்கு தேரியிருந்தாலும் தியேட்டர்களை நம்பாமல் டிடிஎச் இல் வெளியிட்டு இருக்கமாட்டாரா என்ன? சில லட்சங்கள் அளவுக்கு தான் டிடிஎச் மூலம் வருமானம் தேரியிருக்கிறது, அந்த தொகைக்கு டிடிஎச் இல் வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்பதால் தியேட்டர்களிடம் மீண்டும் சரணாகதியாகிவிட்டார் லோக நாயகர்.

கவனத்தில் கொள்ளவும்:

மொத்தமாக பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதோடு, டிடிஎச் ரிலீஸ் பட வெளியீட்டுக்கு முன்னர் இல்லை என்பதாக செய்திகள் வெளியானதன் அடிப்படையில் எழுதப்பட்டப்பதிவு.

 திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ரிலீஸ் உண்டா என்பதை இது வரையில் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை, ஆனால் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு பின்னர் வெளியானாலும் ஆகலாம், அப்படி செய்யும் பட்சத்தில் 1000 ரூபாய் கட்டணம் என்பதற்கான மதிப்பேயில்லை,எனவே முன்பணம் கட்டியவர்கள் திரும்பக்கேட்டால் கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

டிடிஎச் வெளியீடு என தொடர் விளம்பரங்களை செய்த டிடிஎச் சேவையாளர்கள் ,வாங்கிய கட்டணத்தினை திரும்ப தருவதற்கு வாய்ப்பில்லை, அப்படி தர வேண்டும் எனில் அவர்கள் செய்த விளம்பரத்திற்கு கட்டணம் கேட்கும் வாய்ப்புண்டு. பின்னர் இலவச விளம்பரத்திற்காகவா அவர்கள் டிடிஎச் சேவையினை நடத்துகிறார்கள், எனவே டிடிஎச் இல் முன் வெளியீடு என்ற முறையினை இடியாப்ப சிக்கலாக்கிவிட்டதால், இனி தயாரிப்பாளர்கள் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடலாம் என யோசிக்கவே அஞ்சும் சூழலும், டிடிஎச்சுக்கு பணம் கட்ட ரசிகர்கள் அஞ்சும் சூழலும் உருவாகிவிட்டது எனலாம்.

(எனக்கு ஒரு காயம்னா பரவாயில்லை என் படத்துக்கு காயம்னா தான் தாங்கமுடியலை..அபிராமி ..அபிராமி)

டிடிஎச் முன்பதிவு தோல்வியடைய காரணங்கள்:

# டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் வெளியிடுவது சிறுமுதலீட்டு படங்களுக்கே ஏற்றது,மேலும் குறைவான கட்டணம் என இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் பார்ப்பார்கள்.

30 சதவீத மக்கள் ஒரு வேளை முழுசாக உணவுண்ண வழியில்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தேசத்தில் ஒரு திரைப்படத்திற்கு 1000 ரூ என விலை நிர்ணயம் செய்வதே மிகப்பெரிய மனிதாபிமானமற்ற செயல் எனலாம்.ஆனாலும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் மனசாட்சியேயில்லாமல் , ஆகா புரட்சி செய்துவிட்டார் லோக நாயகர் என கூவினாலும்,மக்கள் வழக்கம் போல மவுனப்புரட்சி செய்து புறக்கணித்துவிட்டார்கள்.

நீதி: அமிர்தமே என்றாலும் சாமானியன் வாங்கும் விலையில் விற்கப்பட்டால் மட்டுமே சந்தையில் வெற்றியடையும்.

# ஏழைகளை குறிவைத்து இத்திட்டம் செயல் படுத்தவில்லை உயர்வர்க்க மக்களை கவர எனலாம், ஆனால் உயர்வர்க்க மக்களின் விருப்பத்தேர்வு லோகநாயகரின் படங்களாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள், உயர் வர்க்க மக்களும் முன்ப்பதிவு செய்யவில்லை என்பது குறைவான முன்ப்பதிவுகளின் எண்ணிக்கை காட்டுகிறது, ஏன் எனில் அவர்கள் பார்க்க விரும்பும் தரத்தில் இப்படம் இல்லை என அவர்கள் எண்ணமாக இருக்கிறதே.

நீதி: நமக்கான டார்கெட் ஆடியன்ஸ் யார் என தீர்மானித்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டும்.

# நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் ,பாடல் வெளியீட்டுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டது எனவே டிடிஎச் வெளியீட்டுக்கும் பெருமளவில் ஆதரவு கிடைக்கும் என கணக்கு செய்திருக்கலாம்,ஆனால் ரசிகர்கள் கூட்டம் கூடிய அளவுக்கு , முன்ப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.

வழக்கமாக திரையரங்கில் வெளியிடும் போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ரசிகர் மன்றத்தினர், முதல் காட்சியை ரசிகர் மன்றக்காட்சியாக வெளியிட்டு ,ரசிகர்களிடம் ஒரு பிரிமியம் தொகையை வசுலீப்பார்கள் ,இவ்வாறு கிடைக்கும் லாபத்தினை வைத்தே மன்ற செயல்பாடுகளின் செலவுகளை சமாளிப்பார்கள், இத்தொகை ஓரளவுக்கு தான் உதவும், பல ரசிகர்களும் சொந்தக்காசை செலவு செய்வதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனாலும் ரசிகர் மன்றக்காட்சி நடத்துவது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு பெருமையான விஷயம், கிடைக்கும் சொற்ப லாபம் ரசிகர் மன்ற செலவுகளுக்கு கொஞ்சம் உதவியாக இருப்பதே போதும் என்றெல்லாம் ஆறுதல் பட்டுக்கொள்வார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல ,முதல் நாள் இரவே 1000 ரூ தொகையில் படம் ஒளிபரப்புவதாக சொன்னதும் ,ரசிகர் மன்றக்காட்சி என்ற தனிச்சிறப்பும்,பெருமையும் அடிபட்டு போய்விட்டது, முதல் நாள் இரவு 1000 ரூ செலவு செய்து பார்த்துவிட்டு எத்தனை ரசிகர்கள் அடுத்த நாள் ரசிகர்மன்ற காட்சிக்கும் அதிக கட்டணம் கொடுக்க முன்வருவார்கள், எனவே டிடிஎச் ஒளிப்பரப்பு வெற்றியடைந்தால் ரசிகர்கள்,ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்த லோகநாயகரின் தீவிர ரசிகர்களும் சத்தம் போடாமல் ஒதுங்கிவிட்டதால் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் முன்ப்பதிவும் வேகமெடுக்காமல் முடங்கிவிட்டது.

காலங்காலமாக  படம் ரிலீஸ் அன்று போஸ்டர் அடித்து,தோரணம் கட்டி ,கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் என செய்து, படப்பொட்டிக்கு பூசைப்போட்டு கொண்டாடிய ரசிகர்களை ,துச்சமாக நினைத்து பணத்திற்காக டிடிஎச் ஒளிபரப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை தீவிர ரசிகர்கள் ரசிக்கவில்லை,அவர்களின் மனக்குமுறலின் மவுன கீதமே டிடிஎச் முன்ப்பதிவுக்கு மூடுவிழா நடத்தியது எனலாம்.

நீதி: சுயநலத்திற்காக உடனிருப்பவர்களை புறக்கணித்தால் வெற்றியடைய முடியாது.

# தமிழகத்தில் சென்னை நீங்கலாக எல்லாப்பகுதிகளிலும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது, குறைந்த பட்சம் 12 மணி நேரம் மின் வெட்டு ,பல இடங்களில் உட்சக்கட்டமாக 16-18 மணி நேர மின்வெட்டெல்லாம் உள்ளது.

இதனால் பல இடங்களில் சிறு,குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதால் பலரும் வருமானமின்றி கஷ்ட ஜீவனமே செய்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களோ மூன்று ஷிப்ட் என்பதை குறைத்து ஒரு ஷிப்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன, கூடுதல் ஊழியர்களுக்கு வேலை "கட்", வழக்கமான ஊழியர்களுக்கு  மாதச்சம்பளமே சரியாக வருமா என தெரியாத நிலையில் பல தொழிலாளர்கள் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசமான நிலையில் உள்ளது, பருவ மழை பொய்ப்பு,காவிரியில் நீர் வரத்தில்லை, போர், கிணறு மூலம் பாசனம் செய்யலாம் என்றால் மின்சாரம் இல்லை, பலரும் கடனை வாங்கி டீசல் பம்செட் வைத்து பயிர் கருகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற பொருளாதார சிக்கலினால் இம்முறை தீபாவளியன்று கூட வழக்கமான வியாபாரமில்லை, மக்களிடமும் குதூகளம் ,கொண்டாட்டம் எல்லாம் குறைவாகவே பல இடங்களிலும் காணப்பட்டது.

இம்மாதிரியான பொருளாதார சிக்கலானக் காலக்கட்டத்தில் தீவிர ரசிகர்களும் ஆடம்பரமாக 1000 ரூக்கொடுத்து படம் பார்க்கணுமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் வீட்டில் உள்ளவர்களும் இப்போ இருக்கிற நிலைக்கு இதெல்லாம் தேவையா எனக்கேள்விக்கேட்பார்கள்,எனவே வீட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக படம் பார்க்கும் சூழல் பெரும்பாலான வீடுகளில் இல்லை. அதன் விளைவே பலரும் டிடிஎச் முன்ப்பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டார்கள் எனலாம்.

நீதி: மழை பெய்யும் நேரத்தில் உப்பு விற்கப்போகக்கூடாது!

# வழக்கமாகவே லோகநாயகரின் படங்கள் "அடல்ட் கண்டென்ட்"(முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு எனக்கொள்க) வகையறா எனவே வழக்கமாகவே  பெரும்பாலோர் குடும்பம் ,குழந்தைக்குட்டிகளை அழைத்துக்கொண்டு லோகநாயகர் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்ல யோசிப்பார்கள். இந்நிலையில் 1000 ரூ பணங்கட்டி வீட்டு வரவேற்பறையில் படம் பார்க்கும் சூழலில் பசங்களை படம் பார்க்க கூடாது என தடுக்க முடியாது,அவர்களோடு சேர்ந்து பார்க்கும் போது சில தர்மசங்கடமான காட்சிகளும், வசனங்களும் வந்தால் நெளிய வேண்டிய சூழல் வரும், மேலும் அது போன்ற சந்தர்ப்பத்தில் "கண்ணா அப்பாவுக்கு தாகமா இருக்கு ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வா" என சொல்லி சமாளிக்கலாம் எனப்பார்த்தால் இக்கால வாண்டுகள் செம சுட்டிங்க தாகமா இருந்தா நீங்களே போய் குடிங்க, இப்படித்தான் சின்னப்பசங்களை வேலை வாங்குவீங்களான்னு "டாண்ணு" திருப்பிக்கொடுக்குங்கள் :-))

எனவே வசதியான உயர் நடுத்தரக்குடும்பத்தினரும் எதுக்கு சொந்த செலவில் சூனியம் வச்சுக்கணும் என டிடிஎச் முன்ப்பதிவை தவிர்த்துவிட்டார்கள் எனலாம்.

நீதி: நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஒரு தயாரிப்பினை சந்தைப்படுத்தலின் போது அணுக வேண்டும்,இல்லையெனில் முட்டு சந்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இன்னும் பலக்காரணங்களை பட்டியலிட முடியும், இங்கு சில முக்கியமான காரணிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

ஒரு திரைப்படத்தின் முகமதிப்பு என்பது நாயகன்,இயக்குனர், நாயகி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் சந்தை மதிப்பினை வைத்தே, மொத்த சந்தைமதிப்பினை கடந்து ஒரு திரைப்படத்தினை தயாரித்தால் அது எவ்வளவு தான் நல்லப்படமாக இருந்தாலும் லாபகரமாக விலைப்போகாது.

மேலும் இப்படத்தில் லோகநாயகரைத்தவிர மற்றவர்கள் அனைவருமே சந்தை மதிப்பேயில்லாதவர்கள் என்பது மிகப்பெரும் பின்னடைவு எனலாம்.

லோகநாயகரின் சந்தை மதிப்பினை உணராமல் அதிக பட்ஜெட்டில் தயாரித்ததே விஷ்வரூபம் திரைப்படத்தினை சந்தைப்படுத்துவதில் சிக்கலை உருவாக்கியது ,இப்படம் 50 கோடிக்குள் முடிக்கப்பட்டிருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றியும் சுமார் 10 கோடி லாபத்தில் படத்தினை விற்று இருக்க முடியும்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டவேண்டும், உலகப்படமாக எடுத்தாலும் சந்தை மதிப்பினை கணக்கிட்டு தயாரிக்க வேண்டும்.

இப்படம் இன்னொரு ஆளவந்தானாக ,ஹே ராமாக இல்லாமல் சிறப்பாக இருக்குமானால் பெரும் நட்டம் தவிர்த்து ,தப்பிக்க வாய்ப்புண்டு, அவ்வாறு இருக்கும் என நம்புவோம்,வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!
---------------------

பின்குறிப்பு:

நாம் அனைத்து வகையான திரைப்படங்களையும் பார்க்கும் ஒரு சராசரி திரைப்பட ஆர்வலன், உலகப்படம், உள்ளூர் படமென்ற பாகுபாடுகள் எதுவுமின்றி திரைப்படங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை ஆர்வமாக அவதானிக்கும் ஆர்வலன், எனவே எவ்வித விருப்பு வெறுப்புமின்றி ஒரு தொழில்நுட்ப ஆர்வலனாக  இப்பதிவினை எழுதியுள்ளேன்,எனவே எனக்கும் லோகநாயகருக்கும் வாய்க்கா ,வரப்பு தகராறு என்ற ரீதியில் யாரேனும் மனப்பிராந்திக்கொண்டிருந்தால் அடியேன் பொறுப்பல்ல :-))

நன்றி!
------------------------

தகவல் மற்றும் படங்கள் உதவி:

திருக்குறள்.காம்,தினமலர்,விக்கி,கூகிள் இணைய தளங்கள் நன்றி!