ஜிம்மி ஜிப்
கடந்த 20 அண்டுகளில், உலக அளவில் திரைத் துறைக்கு உதவியாக பல உபகரணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. முக்கியமாக ஒளிப்பதிவிற்க்கும், எடிட்டிங்குக்கும் உதவியாக பல கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் போன்ற உபகரணங்களால் வேண்டிய கோணங்களில் விரைவாக படமாக்கும் வசதி அதிகரித்துள்ளது. ரெட் ஒன் போன்ற நவீன கேமராக்கள் உபயோகிக்கப் படுவதால் காட்சிகளின் தரம் அதிகரிக்கிறது. நான் லீனியர் எடிட்டிங் முறையான ஆவிட் எடிட்டிங் போன்றவற்றால் படத் தொகுப்பு எளிதாகவும், விரைவாகவும் முடிகிறது. இந்த தொழில்நுட்பங்கள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமான சில ஆண்டுகளுக்குள்ளேயேதமிழ்சினிமாவில் அறிமுகமாகிவிடுவது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி ஜிப் /அகேலா கிரேன்
முன்பெல்லாம் டாப் ஆங்கிள் ஷாட் வேண்டுமென்றால் (எ.கா. கதாநாயகி வயல் வெளியிலோ அல்லது மழையிலோ ஆடும் போது மேலிருந்து அதன் சுற்றுப்புரத்தோடு காட்டும் காட்சிகள்) கிரேனில் காமிராவை வைத்து அதில் டெக்னீஷியன் உட்கார்ந்து (ஒளிப்பதிவு இயக்குனர் கோணம் வைத்தவுடன்) படமாக்குவார்கள். இதில் குறிப்பிட்ட உயரம் மட்டும் செல்லும் வசதி இருக்கும். பல சிக்கலான கோணங்கள் கடினம்.
உதாரணம்
தசாவதாரம் பட 12ஆம் நூற்றாண்டு காட்சியில் கேமரா கோபுரத்தின் மீது ஏறி, பின் கலசம் வழியாக படிப்படியாக இறங்கி தரைக்கு வந்து பின் யானை மீது வீற்றிருக்கும் குலோத்துங்க சோழனின் முகத்தில் போய் நிற்கும்.
முகுந்தா முகுந்தா பாடல் காட்சியில் கேமரா ராமானுஜ மடத்தின் மீது ஏறி பின் முற்றம் வழியாக இறங்கி வீட்டிற்க்குள் நுழைந்து அங்கே ஆடிக்கொண்டிருக்கும் சிறுமிகளிடம் போய் நிற்க்கும்.
இந்த மாதிரியான காட்சிகளை எளிதாக எடுப்பதற்க்கு ஜிம்மி ஜிப், அகேலா கிரேன் மாதிரியான உபகரணங்கள் உதவுகின்றன. நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் இவை அமைக்கப்பட்டிருக்கும். சீ சா என சொல்லுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். சீ சாவின் ஒருமுனையில் கேமராவும், இன்னொரு முனையில் அதற்க்குரிய கன்ட்ரோலும் கவுண்டர் வெயிட்டும் இருக்கும். இந்த கன்ட்ரோலின் மூலம் கேமராவை விரும்புமாறு உபயோகிக்கலாம். காட்சிகளின் கோணம், போக்கஸ் ஆகியவை
சரியாக இருக்கிறதா என்பதை மானிட்டரில் பார்த்து சரி செய்து கொள்ளலாம்.
தற்போது ஜிராபி என்னும் கிரேனும் தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஸ்டெடி காம்
ஒருவர் ஓடும் காட்சி அல்லது, தூரத்தில் இருப்பவரை/பொருளை நோக்கி செல்லும் காட்சி போன்றவற்றை முன்னாட்களில் ட்ராலியை உபயோகப் படுத்தி எடுத்து வந்தார்கள். இம்மாதிரியான காட்சிகளில் டெக்னீஷியனின் திறமை முக்கிய பங்கு வகிக்கும். எவ்வளவு திறமையான டெக்னீஷியன் ஆனாலும் பிரேமில் ஷேக் வர வாய்ப்பு இருக்கும். ஆனால் ஸ்டெடி காமில் அதற்க்கான வாய்ப்பே இல்லை. அதனுள் உள்ள அமைப்பானது, ஒரு குறிப்பிட்ட தளத்தை ரெபெரென்ஸாக வைத்துக் கொள்ளும். கேமராவை தூக்கிக் கொண்டு வில்லன் பின்னாலோ,ஹீரோ பின்னாலோ ஓடினாலும் அதில் ஏற்படும் எந்த அதிர்வையும் தனக்குள் உள்ள மெக்கானிசம் மூலம் சமப்படுத்திக் கொள்ளும். எனவே எந்த வித குறைபாடும் இல்லாமல்
காட்சிகள் பதிவாகும். சேஸிங் காட்சிகளுக்கு இதன் தேவை மிக அதிகம்.
ரெட் ஒன்
இதைப் பற்றி கேபிள் ஷங்கர் ஏற்கனவே ஒரு அருமையான பதிவை இட்டுள்ளார். மார்கழி ராகம் திரைப்படத்தில் எட்டு ரெட் ஒன் கேமிராக்களை உபயோகித்து பி ஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த செய்தி ரெட் ஒன் யூசர் போரத்தில் இடம்பெற்று மேலை நாட்டவருக்கும் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்னா, சினேக நடிக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலும் இந்த கேமரா பயன்படுத்தப் படுகிறது. இத்திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் முன்பு தமிழ் வலைப்பதிவில் மிக ஆர்வமுடன்
இயங்கி கலக்கியவர். கமல்ஹாசனின் மர்மயோகிக்கும் இந்த கேமராவை உபயோகிக்க இருந்தார்கள்.
ஆவிட் எடிட்டிங்
89 களில் உலகில் அறிமுகமான இந்த நான் லீனியர் எடிட்டிங் தொழில் நுட்பம் 93ல் மகாநதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தது. இது ஆரம்ப காலத்தில் செலவு பிடிக்கும் விஷயமாக இருந்ததால் பலரும் தயங்கினர். குறைந்தது ஒரு எடிட் ஷூட் அமைப்பதற்க்கு 50 லட்சத்துக்கு மேல் செலவானது. படமாக்கப்பட்ட காட்சிகளை ஒரு ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்து பின் நமக்குத் தேவையான காட்சிகளை விரும்பும் வரிசையில் எளிதாக தொகுத்துக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தையும் செலவு குறைவாக எளிதாக தமிழ் சினிமாவில் மாற்றியவர்கள் பாலாஜி, உருப்படாது நாராயணன் (பிரபல வலைப்பதிவர்), சேது பட எடிட்டர்களான ரகு-பாபு ஆகியோர். ஐந்து லட்சத்திற்க்கும் குறைவான செலவிலேயே இதை சாத்தியமாக்கினார்கள்.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அதை திரைப்படத்தின் சிறப்புக்கு உபயோகப் படுத்த தேர்ந்த இயக்குனர்களாலேயே முடியும்.
தசாவதாரம் 12 ஆம் நூற்றாண்டு தொடக்க காட்சிக்கு கமல் சொன்ன விளக்கம் " சைவம், வைனவம் எனப் பிரிந்து அடித்துக் கொள்ளும் சிறுபுத்திக் காரர்கள் என காட்சிப்படுத்தவே டாப் ஆங்கிளில் மனிதர்களை எறும்பு போல காண்பித்தோம்".