Friday, 24 October 2014

சினிமா ரகசியம்-6: DTH-Disaster To Haasan.


(ஹி...ஹி நம்ம DTH- Direct To HeartU)
குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

மு.வ உரை:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

திருவள்ளுவரை சும்மாவா பொய்யா மொழிப்புலவர்னு சொன்னாங்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி திட்டமிட்டு ஒரு செயலை செய்ய வேண்டும், எப்படி சாதக,பாதகங்களை கணக்கிட வேண்டும் என்றெல்லாம் நச்சுன்னு ரெண்டே வரியில சொல்லிட்டார், உலகின் மிக சிறந்த துவித்தர் யாருன்னு என்னைக்கேட்டால் கண்ணை மூடிக்கிட்டு திருவள்ளுவர் பேரைச்சொல்வேன் :-))

ஆறு டிடிஎச் சேவைகளில் படம் வெளியிடுவதாக செய்தி வெளியானதுமே , 300 கோடி வசூல் என்றெல்லாம் கூச்சமேயில்லாமல் சில விசிலடிச்சான் குஞ்சுகள் புரளியை பரப்பின, உண்மையில் அதில் பாதியளவுக்கு தேரியிருந்தாலும் தியேட்டர்களை நம்பாமல் டிடிஎச் இல் வெளியிட்டு இருக்கமாட்டாரா என்ன? சில லட்சங்கள் அளவுக்கு தான் டிடிஎச் மூலம் வருமானம் தேரியிருக்கிறது, அந்த தொகைக்கு டிடிஎச் இல் வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்பதால் தியேட்டர்களிடம் மீண்டும் சரணாகதியாகிவிட்டார் லோக நாயகர்.

கவனத்தில் கொள்ளவும்:

மொத்தமாக பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதோடு, டிடிஎச் ரிலீஸ் பட வெளியீட்டுக்கு முன்னர் இல்லை என்பதாக செய்திகள் வெளியானதன் அடிப்படையில் எழுதப்பட்டப்பதிவு.

 திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ரிலீஸ் உண்டா என்பதை இது வரையில் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை, ஆனால் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு பின்னர் வெளியானாலும் ஆகலாம், அப்படி செய்யும் பட்சத்தில் 1000 ரூபாய் கட்டணம் என்பதற்கான மதிப்பேயில்லை,எனவே முன்பணம் கட்டியவர்கள் திரும்பக்கேட்டால் கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

டிடிஎச் வெளியீடு என தொடர் விளம்பரங்களை செய்த டிடிஎச் சேவையாளர்கள் ,வாங்கிய கட்டணத்தினை திரும்ப தருவதற்கு வாய்ப்பில்லை, அப்படி தர வேண்டும் எனில் அவர்கள் செய்த விளம்பரத்திற்கு கட்டணம் கேட்கும் வாய்ப்புண்டு. பின்னர் இலவச விளம்பரத்திற்காகவா அவர்கள் டிடிஎச் சேவையினை நடத்துகிறார்கள், எனவே டிடிஎச் இல் முன் வெளியீடு என்ற முறையினை இடியாப்ப சிக்கலாக்கிவிட்டதால், இனி தயாரிப்பாளர்கள் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடலாம் என யோசிக்கவே அஞ்சும் சூழலும், டிடிஎச்சுக்கு பணம் கட்ட ரசிகர்கள் அஞ்சும் சூழலும் உருவாகிவிட்டது எனலாம்.

(எனக்கு ஒரு காயம்னா பரவாயில்லை என் படத்துக்கு காயம்னா தான் தாங்கமுடியலை..அபிராமி ..அபிராமி)

டிடிஎச் முன்பதிவு தோல்வியடைய காரணங்கள்:

# டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் வெளியிடுவது சிறுமுதலீட்டு படங்களுக்கே ஏற்றது,மேலும் குறைவான கட்டணம் என இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் பார்ப்பார்கள்.

30 சதவீத மக்கள் ஒரு வேளை முழுசாக உணவுண்ண வழியில்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தேசத்தில் ஒரு திரைப்படத்திற்கு 1000 ரூ என விலை நிர்ணயம் செய்வதே மிகப்பெரிய மனிதாபிமானமற்ற செயல் எனலாம்.ஆனாலும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் மனசாட்சியேயில்லாமல் , ஆகா புரட்சி செய்துவிட்டார் லோக நாயகர் என கூவினாலும்,மக்கள் வழக்கம் போல மவுனப்புரட்சி செய்து புறக்கணித்துவிட்டார்கள்.

நீதி: அமிர்தமே என்றாலும் சாமானியன் வாங்கும் விலையில் விற்கப்பட்டால் மட்டுமே சந்தையில் வெற்றியடையும்.

# ஏழைகளை குறிவைத்து இத்திட்டம் செயல் படுத்தவில்லை உயர்வர்க்க மக்களை கவர எனலாம், ஆனால் உயர்வர்க்க மக்களின் விருப்பத்தேர்வு லோகநாயகரின் படங்களாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள், உயர் வர்க்க மக்களும் முன்ப்பதிவு செய்யவில்லை என்பது குறைவான முன்ப்பதிவுகளின் எண்ணிக்கை காட்டுகிறது, ஏன் எனில் அவர்கள் பார்க்க விரும்பும் தரத்தில் இப்படம் இல்லை என அவர்கள் எண்ணமாக இருக்கிறதே.

நீதி: நமக்கான டார்கெட் ஆடியன்ஸ் யார் என தீர்மானித்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டும்.

# நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் ,பாடல் வெளியீட்டுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டது எனவே டிடிஎச் வெளியீட்டுக்கும் பெருமளவில் ஆதரவு கிடைக்கும் என கணக்கு செய்திருக்கலாம்,ஆனால் ரசிகர்கள் கூட்டம் கூடிய அளவுக்கு , முன்ப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.

வழக்கமாக திரையரங்கில் வெளியிடும் போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ரசிகர் மன்றத்தினர், முதல் காட்சியை ரசிகர் மன்றக்காட்சியாக வெளியிட்டு ,ரசிகர்களிடம் ஒரு பிரிமியம் தொகையை வசுலீப்பார்கள் ,இவ்வாறு கிடைக்கும் லாபத்தினை வைத்தே மன்ற செயல்பாடுகளின் செலவுகளை சமாளிப்பார்கள், இத்தொகை ஓரளவுக்கு தான் உதவும், பல ரசிகர்களும் சொந்தக்காசை செலவு செய்வதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனாலும் ரசிகர் மன்றக்காட்சி நடத்துவது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு பெருமையான விஷயம், கிடைக்கும் சொற்ப லாபம் ரசிகர் மன்ற செலவுகளுக்கு கொஞ்சம் உதவியாக இருப்பதே போதும் என்றெல்லாம் ஆறுதல் பட்டுக்கொள்வார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல ,முதல் நாள் இரவே 1000 ரூ தொகையில் படம் ஒளிபரப்புவதாக சொன்னதும் ,ரசிகர் மன்றக்காட்சி என்ற தனிச்சிறப்பும்,பெருமையும் அடிபட்டு போய்விட்டது, முதல் நாள் இரவு 1000 ரூ செலவு செய்து பார்த்துவிட்டு எத்தனை ரசிகர்கள் அடுத்த நாள் ரசிகர்மன்ற காட்சிக்கும் அதிக கட்டணம் கொடுக்க முன்வருவார்கள், எனவே டிடிஎச் ஒளிப்பரப்பு வெற்றியடைந்தால் ரசிகர்கள்,ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்த லோகநாயகரின் தீவிர ரசிகர்களும் சத்தம் போடாமல் ஒதுங்கிவிட்டதால் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் முன்ப்பதிவும் வேகமெடுக்காமல் முடங்கிவிட்டது.

காலங்காலமாக  படம் ரிலீஸ் அன்று போஸ்டர் அடித்து,தோரணம் கட்டி ,கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் என செய்து, படப்பொட்டிக்கு பூசைப்போட்டு கொண்டாடிய ரசிகர்களை ,துச்சமாக நினைத்து பணத்திற்காக டிடிஎச் ஒளிபரப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை தீவிர ரசிகர்கள் ரசிக்கவில்லை,அவர்களின் மனக்குமுறலின் மவுன கீதமே டிடிஎச் முன்ப்பதிவுக்கு மூடுவிழா நடத்தியது எனலாம்.

நீதி: சுயநலத்திற்காக உடனிருப்பவர்களை புறக்கணித்தால் வெற்றியடைய முடியாது.

# தமிழகத்தில் சென்னை நீங்கலாக எல்லாப்பகுதிகளிலும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது, குறைந்த பட்சம் 12 மணி நேரம் மின் வெட்டு ,பல இடங்களில் உட்சக்கட்டமாக 16-18 மணி நேர மின்வெட்டெல்லாம் உள்ளது.

இதனால் பல இடங்களில் சிறு,குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதால் பலரும் வருமானமின்றி கஷ்ட ஜீவனமே செய்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களோ மூன்று ஷிப்ட் என்பதை குறைத்து ஒரு ஷிப்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன, கூடுதல் ஊழியர்களுக்கு வேலை "கட்", வழக்கமான ஊழியர்களுக்கு  மாதச்சம்பளமே சரியாக வருமா என தெரியாத நிலையில் பல தொழிலாளர்கள் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசமான நிலையில் உள்ளது, பருவ மழை பொய்ப்பு,காவிரியில் நீர் வரத்தில்லை, போர், கிணறு மூலம் பாசனம் செய்யலாம் என்றால் மின்சாரம் இல்லை, பலரும் கடனை வாங்கி டீசல் பம்செட் வைத்து பயிர் கருகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற பொருளாதார சிக்கலினால் இம்முறை தீபாவளியன்று கூட வழக்கமான வியாபாரமில்லை, மக்களிடமும் குதூகளம் ,கொண்டாட்டம் எல்லாம் குறைவாகவே பல இடங்களிலும் காணப்பட்டது.

இம்மாதிரியான பொருளாதார சிக்கலானக் காலக்கட்டத்தில் தீவிர ரசிகர்களும் ஆடம்பரமாக 1000 ரூக்கொடுத்து படம் பார்க்கணுமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் வீட்டில் உள்ளவர்களும் இப்போ இருக்கிற நிலைக்கு இதெல்லாம் தேவையா எனக்கேள்விக்கேட்பார்கள்,எனவே வீட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக படம் பார்க்கும் சூழல் பெரும்பாலான வீடுகளில் இல்லை. அதன் விளைவே பலரும் டிடிஎச் முன்ப்பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டார்கள் எனலாம்.

நீதி: மழை பெய்யும் நேரத்தில் உப்பு விற்கப்போகக்கூடாது!

# வழக்கமாகவே லோகநாயகரின் படங்கள் "அடல்ட் கண்டென்ட்"(முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு எனக்கொள்க) வகையறா எனவே வழக்கமாகவே  பெரும்பாலோர் குடும்பம் ,குழந்தைக்குட்டிகளை அழைத்துக்கொண்டு லோகநாயகர் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்ல யோசிப்பார்கள். இந்நிலையில் 1000 ரூ பணங்கட்டி வீட்டு வரவேற்பறையில் படம் பார்க்கும் சூழலில் பசங்களை படம் பார்க்க கூடாது என தடுக்க முடியாது,அவர்களோடு சேர்ந்து பார்க்கும் போது சில தர்மசங்கடமான காட்சிகளும், வசனங்களும் வந்தால் நெளிய வேண்டிய சூழல் வரும், மேலும் அது போன்ற சந்தர்ப்பத்தில் "கண்ணா அப்பாவுக்கு தாகமா இருக்கு ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வா" என சொல்லி சமாளிக்கலாம் எனப்பார்த்தால் இக்கால வாண்டுகள் செம சுட்டிங்க தாகமா இருந்தா நீங்களே போய் குடிங்க, இப்படித்தான் சின்னப்பசங்களை வேலை வாங்குவீங்களான்னு "டாண்ணு" திருப்பிக்கொடுக்குங்கள் :-))

எனவே வசதியான உயர் நடுத்தரக்குடும்பத்தினரும் எதுக்கு சொந்த செலவில் சூனியம் வச்சுக்கணும் என டிடிஎச் முன்ப்பதிவை தவிர்த்துவிட்டார்கள் எனலாம்.

நீதி: நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஒரு தயாரிப்பினை சந்தைப்படுத்தலின் போது அணுக வேண்டும்,இல்லையெனில் முட்டு சந்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இன்னும் பலக்காரணங்களை பட்டியலிட முடியும், இங்கு சில முக்கியமான காரணிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

ஒரு திரைப்படத்தின் முகமதிப்பு என்பது நாயகன்,இயக்குனர், நாயகி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் சந்தை மதிப்பினை வைத்தே, மொத்த சந்தைமதிப்பினை கடந்து ஒரு திரைப்படத்தினை தயாரித்தால் அது எவ்வளவு தான் நல்லப்படமாக இருந்தாலும் லாபகரமாக விலைப்போகாது.

மேலும் இப்படத்தில் லோகநாயகரைத்தவிர மற்றவர்கள் அனைவருமே சந்தை மதிப்பேயில்லாதவர்கள் என்பது மிகப்பெரும் பின்னடைவு எனலாம்.

லோகநாயகரின் சந்தை மதிப்பினை உணராமல் அதிக பட்ஜெட்டில் தயாரித்ததே விஷ்வரூபம் திரைப்படத்தினை சந்தைப்படுத்துவதில் சிக்கலை உருவாக்கியது ,இப்படம் 50 கோடிக்குள் முடிக்கப்பட்டிருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றியும் சுமார் 10 கோடி லாபத்தில் படத்தினை விற்று இருக்க முடியும்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டவேண்டும், உலகப்படமாக எடுத்தாலும் சந்தை மதிப்பினை கணக்கிட்டு தயாரிக்க வேண்டும்.

இப்படம் இன்னொரு ஆளவந்தானாக ,ஹே ராமாக இல்லாமல் சிறப்பாக இருக்குமானால் பெரும் நட்டம் தவிர்த்து ,தப்பிக்க வாய்ப்புண்டு, அவ்வாறு இருக்கும் என நம்புவோம்,வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!
---------------------

பின்குறிப்பு:

நாம் அனைத்து வகையான திரைப்படங்களையும் பார்க்கும் ஒரு சராசரி திரைப்பட ஆர்வலன், உலகப்படம், உள்ளூர் படமென்ற பாகுபாடுகள் எதுவுமின்றி திரைப்படங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை ஆர்வமாக அவதானிக்கும் ஆர்வலன், எனவே எவ்வித விருப்பு வெறுப்புமின்றி ஒரு தொழில்நுட்ப ஆர்வலனாக  இப்பதிவினை எழுதியுள்ளேன்,எனவே எனக்கும் லோகநாயகருக்கும் வாய்க்கா ,வரப்பு தகராறு என்ற ரீதியில் யாரேனும் மனப்பிராந்திக்கொண்டிருந்தால் அடியேன் பொறுப்பல்ல :-))

நன்றி!
------------------------

தகவல் மற்றும் படங்கள் உதவி:

திருக்குறள்.காம்,தினமலர்,விக்கி,கூகிள் இணைய தளங்கள் நன்றி!

சினிமாவுக்கு எனிமா!


(நம்ம வவ்வால் ஒரு தடவை சொன்னா..100 தடவை சொன்னா மாதிரி...ஹி..ஹி!)

சமீபத்திய சென்னை பெருநகராட்சி மாமன்ற நிதிநிலை அறிக்கை சமர்ப்பின் போது, மாமன்றத்தலைவர் சைதை.துரைசாமி அவர்கள் பல திட்டங்களை அறிவித்தார் ,ஆனால் அவற்றை எல்லாம் ஊடகங்களும் சாமனியர்களும் பெரிதும் கவனிக்கவில்லை ,அதே சமயம் சென்னை மாநகரில் "அம்மா திரையரங்கம்" என மலிவு கட்டண திரையரங்குகள் அமைக்கப்படும் என ஒரு மாபெரும் புரட்சித்திட்டத்தினை அறிவித்ததையே அனைவரும் ,வாயில நொரைதள்ளும் அளவுக்கு விவாதித்து மகிழ்கிறார்கள்( நொரை தள்ளப்பதிவு எழுதிட்டு பேசுறப்பேச்சப்பாரு அவ்வ்)

இணைய வெளியிலோ, அய்யய்யோ  ச்சொல்லவே வேண்டாம் ,முகநூல்,பிளஸ், துவித்தர் ,பழம்பஞ்சாங்கமான பிலாக்கர்னு எல்லா இடத்திலும் "இணைய சமூக போராளிகள்" பிரிக்கட்டி பிரிச்சு அடிச்சுட்டு இருக்காங்க!

நாட்டில ஆயிரம் பிரச்சினை ஓடுது ,கூவத்துல சாக்கடை ஓடுது ,அதுல கொசு மேயுது, அதைப்பற்றிலாம் எழுத நமக்கு முடியலை ,இந்த லட்சணத்துல இதைப்பத்தி எழுதனுமானு விரக்தி வெரட்டியடிக்க ,வழக்கம் போல மாட்டு சாணத்தில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு எழுதி "நான் ரொம்ப நல்லவன்" எனக்காட்டிக்கலாமானு மனசுல ஒரு நமைச்சல்.ஏற்கனவே புள்ளிவிவர அறிக்கை போல எழுதுற "கவர்ச்சியா" எழுதனும்னு பெரியவங்களால அறிவுரைக்கப்பட்டும் இன்னுமா திருந்தாம இருக்கணும் ,அவ்வப்போது "கவர்ச்சியா" எழுதி நாமளும் பதிவேண்டானு காட்டிக்கலாமேனு , அம்மா திரையரங்க திட்டத்தினை அலசிக்காயப்போடலாமே என இப்பதிவு.

புரட்சித்தலைவினு பட்டம் போட்டுக்கிறிங்களே ,என்ன புரட்சி செய்தீர்கள்னு யாராவது கேட்டுட்டாங்களானு தெரியலை ,சமீப காலமாக அறிவிக்கப்படுவன எல்லாமே புரட்சிகரமாகவே இருக்கின்றன ,பாவம் என்னை போன்ற அப்பிராணிகளுக்கு தான் மிரட்சியில முழுப்பிதுங்குது அவ்வ்!

இனிமே எவனாச்சும் அம்மையாரைப்பார்த்து "என்ன புரட்சி பண்ணினிங்கனு" நாக்கு மேல பல்லு போட்டு சொல்லுவான் ,சொன்னான் வாயில வெத்தலைப்பாக்கு போட வச்சிட மாட்டாங்க ரெத்தத்தின் ரெத்தங்கள் அவ்வ்!

இம்மாபெரும் புரட்சிகர சோசலிச முற்போக்கு திட்டத்தினை ஆதியோடு அந்தமாக அலசி ,பொருளாதார ரீதியாக சாத்தியமா என வரலாறு,புவியியல் ,புள்ளியியல் ஆதாரங்களோடு காண்போம் வாரீர்,வாரீர்!

# அம்மா திரையரங்க திட்டம் நடைமுறையில் சாத்தியமா?

சாத்தியமே!

# பொருளாதார ரீதியாக லாபமளிக்க கூடியதா?

லாபகரமான திட்டமே!

# இதனால் சமூகத்துக்கு பலன் உண்டா?

உண்டு!

# அப்படியானால் மக்களுக்கு அவசியமான திட்டம் தானே என்றால்,

இல்லை என்பேன்!

ஏனெனில் திரைப்படத்துறையினை முட்டுக்கொடுத்து காக்கும் சூழல் இல்லை, மேலும் இதனை விட அத்தியாவசிய தேவைகள் மக்களுக்கு இருக்கின்றன ,அவற்றின் மீது கவனம் செலுத்தலாம் என்பேன்.


இப்போ பொதுவா அரசே திரைத்தொழிலில் பங்குப்பெற்று நடத்துவதன் முன்,பின் வரலாற்றினைப்பார்ப்போம்.

# அரசுக்கு திரையரங்கம் நடத்துவது தான் வேலையா ,இந்த கொடுமைய எல்லாம் அம்மையார் மட்டும் தான் செய்வாங்கனு சில,பலர் நினைக்கலாம்,ஆனால் அரசே திரையரங்குகள் மற்றும் கலையரங்குகளை நடத்துவது ஆதி காலம் தொட்டே இருக்கிறது.

பல நாடுகளிலும் அரசே படத்தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன, இதற்கு ஆரம்பப்புள்ளி திரைப்படங்களின் ஆதி மூலமான ஃபிரான்ஸ் நாடு ஆகும்.

பிரான்ஸை சேர்ந்த, Auguste and Louis Lumière சகோதரர்கள் கி.பி 1895 இல் "உணவு இடைவேளை" என்ற  முதல் சலனப்படத்தினை திரையிட்டதில் இருந்து "திரைப்பட தயாரிப்பில்" பிரான்சின் பங்கு துவங்குகிறது.

ஆரம்பத்தில் உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்கள் பிரான்சில் தான் தயாரிக்கப்பட்டன, பல தயாரிப்பு நிறுவனங்களும் துவங்கின,உலக அளவில் திரையிடப்பட்டன. லூமியர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட படங்களே இந்தியாவிலும் பார்க்கப்பட்டது,அப்படி திரையிடப்பட்ட ஒரு படத்தினை "தாதா சாகேப் பால்கே" பார்க்க நேரிட்டதால் தான் இந்திய சினிமா துறையும் உருவானது.

*(எச்சரிக்கை: பால்கே வரலாற்று பதிவு கிடப்பில் இருக்கு ,எந்நேரமும் வரலாம் அவ்வ்)

ஆனால் அமெரிக்காவும் படத்தயாரிப்பில் குதித்து பெருமளவில் தயாரிக்க ஆரம்பித்ததும் ,பிரஞ்சு படத்தயாரிப்புகளுக்கான உலக சந்தை சுருங்கியது,உள்நாட்டு சந்தையிலும் அமெரிக்க படங்கள் ஆதிக்கம் செலுத்தவே ,பிரஞ்சு தயாரிப்பாளர்கள் ,திரையரங்குகள் ஆகியன நெருக்கடியில் சிக்கின. எனவே 1911 ஆம் ஆண்டு ,பிரான்சில் 7 அயல்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கண்டிப்பாக ஒரு பிரஞ்சு படத்தினை திரையிட வேண்டும் என தியேட்டர்களுக்கு கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளது.

அப்படியும் பிரஞ்சு படத்தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் தவிக்கவே, படத்தயாரிப்பினை ஊக்குவிக்க ,அரசே கடனுதவி அளித்தது மேலும்  Georges Méliès என்பவரின் படத்தயாரிப்பு நிறுவனத்தினை பிரஞ்சு அரசே வாங்கி படத்தயாரிப்பிலும் ஈடுபடலாயிற்று.

இவ்விடத்தே ஜியார்ஜெஸ் மெலைஸ் பற்றி சிறிது நினைவு கூர்வோம்,இல்லையெனில் ,திரை ஆர்வலன் என நினைத்துக்கொள்வதில் பொருளேயில்லை, தேவையில்லாத கதை என நினைப்பவர்கள் ஒரு லாங்க் ஜம்ப் அடித்து அடுத்தப்பகுதிக்கு தாவவும்!

Georges Méliès என்பவர் அக்காலத்தில் மேஜிக் நிபுணராக இருந்து ,திரைப்படத்துறையில் இயக்கம்,நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளிலும் பிரான்சில் கலக்கியவர். இன்றும் பயன்ப்படுத்தப்படும் பல திரை சிறப்பு நுணுக்கங்கள் இவராலேயே உருவாக்கப்பட்டவையே. அதனாலே "திரைப்பட சிறப்புக்காட்சிகளின் தந்தை" என அழைக்கப்படுகிறார். எடிட்டிங்கில் பேரலல் கட், ஜம்ப் கட் எல்லாம் இவரால் கையாளப்பட்ட உத்திகளே!

உலகின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படமும் இவர் தான் எடுத்தாராம், ஒரு அம்மணி உடைமாற்றுவது தான் மொத்த படமே, படம் முடிச்சதும் அம்மணியையே கண்ணாலம் கட்டிக்கினார் அவ்வ்!(ஹி...ஹி இப்படி ஒரு படம் எடுத்து ...எடுத்து அடப்போங்கப்பா)

கி.பி 1900 ஆம் ஆண்டில் ,மவுனப்படக்காலத்திலேயே , இவர் ஒருவரே ஏழுத்தோற்றங்களில் ஒரே காட்சியாக தோன்றி "சப்தவதாரம்" எடுத்து சாதித்தவர். தொழில்நுட்பம் வளர்ந்தக்காலத்தில் கூட தசவதாரம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக பில்ட் அப் தான் நம்ம ஊரில் கொடுக்கிறாங்க அவ்வ்!

மேலும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கைகளால் வண்ணம் தீட்டியே கி.பி 1902 இல் வண்ணப்படங்களையும் எடுத்துள்ளார்.

சப்தவதாரம்- The One-Man Band 




வண்ணப்படம்- A Trip to the Moon 



---------------------------------------------------

பிரஞ்சு மொழியில் பல உலக சிறப்புப்பெற்ற கலைத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் ,அரசு தயாரிப்பில் தான் உருவான, பிரஞ்சு புதிய அலை சினிமா பிறப்பதற்கும்.அரசின் இம்முயற்சியே காரணமாகும்.

கி.பி 1946 முதல் the Centre national du cinéma et de l'image animée (CNC) என்ற அமைப்பின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் பிரஞ்சு அரசு ஈடுபட்டு வருகிறது,மேலும் உலக சினிமா நிதி என்ற ஒன்றினை உருவாக்கி பல்வேறு நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் உலக படங்களையும் தயாரிக்கிறது.

குறிப்பு:

உலகத்திலேயே இந்தியர்களுக்கு சினிமா மோகம் அதிகம்,அதிலும் தமிழனுக்கு வெறீயே அதிகம்னு பொதுவா பேச்சுண்டு, ஆனால் அதையெல்லாம் அசால்ட்டா பிரெஞ்சுக்காரங்க தூக்கியடிக்கிறாங்க,

உலகத்திலேயே திரையரங்க வருவாயில் மூன்றாவது இடம் பிரான்ஸ் தான் , முன்னால அமெரிக்காவும்,அடுத்து இந்தியாவும் இருக்கு.

மூன்றாவது இடம் தானேனு நினைக்கலாம் அங்கே தான் இருக்கு மேட்டர், அமெரிக்கா பெரிய நாடு, மக்கள் தொகை நம்ம அளவுக்கு இல்லைனாலும் 32 கோடி இருக்கு,மேலும் நிறைய தியேட்டர் அதோடு  உலக அளவில் மார்க்கெட் உள்ளவர்கள்.

இந்தியா பெரிய நாடு ,அதிக மக்கள் நிறைய பேர் படம் பார்க்கிறாங்க,எனவே இரண்டாம் இடம்.

ஆனால் வெறும் 5.9 (6.58 crores-2013)கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சில் 5,465 தியேட்டர்கள் இருக்கு(தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 7 கோடி ,1,150 தியேட்டர்களே உள்ளன), மேலும் ஒரு மாநகர பகுதியில் உலகிலேயே மிக அதிக தியேட்டர்கள் கொண்ட நகரம் பாரிஸ் தான்!!!

இனிமே எவனாது தமிழனுக்கு சினிமா வெறினு சொன்னால் "ப்ரெஞ்ச் ஃப்ரை" செய்துடணும் :-))


# அதே காலக்கட்டத்தில் இங்கிலாந்திலும் படத்தயாரிப்பில் நெருக்கடியான சூழல் உருவாகவே ,இங்கிலாந்து அரசும்,1925 இல் அயல்நாட்டு படங்களுக்கு கட்டுப்பாடு,உள்நாட்டு தயாரிப்புக்கு வரிச்சலுகை என வழங்கியது, இங்கிலாந்து சினிமாட்டோகிராபி சட்டம் என ஒன்றினையும் போட்டுள்ளது.

பின்னர் மீண்டும் 1949 இல் "the National Film Finance Corporation (NFFC)" என்ற அமைப்பினை உருவாக்கி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும் கட்டண வசூலில் 50% தயாரிப்பாளருக்கு கட்டாயம் பங்கு தர வேண்டும் என சட்டமும் இயற்றியது.

# ஐக்கிய அரசநாடுகளின் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் திரைப்படத்துறையினை மேலும் விரிவாக்க வேண்டும் என திட்டமிட்டு, கி.பி. 1960 இல் பேருந்துகளை "நகரும் திரையரங்குகளாக"(movi bus) வடிவைமத்து ,நகரில் உலாவ விட்டது.

(மூவி பஸ் குழு)

(டிக்கெட் வாங்க(சினிமாவுக்குதேன்) காத்திருக்கும் சீமான்கள்)

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்,அப்பொழுதெல்லாம் டிஜிட்டல் புரொஜெக்ஷன், வண்ணத்தொலைக்காட்சியெல்லாம் இல்லை, வழக்கமான சினிமா புரொஜெக்டரையே பேருந்துக்குள் வைத்து இயக்கினார்கள்!

( அக்கால மூவி பஸ் உட்புறம்,அப்பவே ஒருத்தன் தூங்குறான்யா)

ஆம்னி பஸ்ஸில் டிவிடில படம் போடுறதுக்கு பெரியார் சுழியே ,இங்கிலாந்தில தான் போட்டிருக்காங்க :-))

தற்பொழுது ஐக்கிய அரசநாடுகள் அரசு இத்தகைய "சினிமா பேருந்துகளை" இயக்குவதில்லை, ஆனால் அதே பழைய சினிமா பேருந்துகளை சில திரையார்வலர்கள் விலைக்கு வாங்கி ,செப்பனிட்டு டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்,சர்ரவுண்டு சவுண்டில் இன்றும் லண்டனில் இயக்கி வருகிறார்கள்.

(தற்கால டிஜிட்டல் மூவி பஸ்)

# திரைப்படங்களுக்கு முன்னரே நாடகங்களை அரங்கேற்ற என அரசே 'நாடக அரங்கங்களையும்" கட்டியுள்ளது.

கி.பி 1879 இல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அரங்கேற்ற என " தி ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டர்" என ஒரு நாடக அரங்கினை சிலர் ஒன்று சேர்ந்து உருவாக்கினர், பின்னர் 1939  இல் ராயல் ஷேக்ஸ்பியர் தியேட்டர் என அரசின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது.

(ஷேக்ஸ்பியர் நாடக கொட்டாய்)

அக்காலக்கட்டத்தில் ,பெர்னாட் ஷா முதலான எழுத்தாளர்கள் மற்றும் நாடக ஆர்வலர்கள் ஒன்று கூடி அரசே ஒரு நாடக அரங்கினை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,அதன் பலனாக  கி.பி 1948 இல் லண்டன் கவுண்டி கவுன்சில் ,தேம்ஸ் நதிக்கரையோரம் இடம் ஒதுக்கி தந்தது. பின்னர் கி.பி 1949 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி ,நிதி ஒதுக்கி "தி ராயல் நேஷனல் தியேட்டர்" என ஒன்றினை நாடக அரங்கேற்றங்களுக்காக கட்டினார்கள்.

(நேஷனல் நாடகக்கொட்டாய்)
இந்த நாடக அரங்கம் இன்றளவும் பல மாற்றங்களுடன் இயங்கி வருகிறது , இதற்கென ஆண்டு தோறும் ஆகும் செலவில் 28% மாநியமாக இங்கிலாந்து அரசு அளிக்கிறது, மேற்கொண்டு நிதி நன்கொடைகள் மற்றும் கட்டணத்தின் மூலம் சரிக்கட்டப்படுகிறது.

நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப, அரங்கில் நடைப்பெறும் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பல்வேறு சினிமா தியேட்டர்களின் திரையில் செயற்கைக்கோள் மூலமும் ஒளிப்பரப்பப்படுகிறது.

தமிழகத்தின் நிலை:


நம் நாட்டில்  தமிழ்நாடு என மொழி வாரியாக மாநிலமாகாத அக்காலத்தில், சென்னை மாகாண ஆட்சி மன்ற செயல்பாடுகள் ,அரசினர் தோட்டம் எனப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் இருந்த "பழைய கவர்னர் மாளிகையில்" தான் கூடியது ,பின்னர் இடத்தேவை கருதி ஒரு புதியக்கட்டிடமும் கட்டப்பட்டது, இந்தியா குடியரசாக ஆன பின்னர் செயல் பட்ட தமிழக சட்ட மன்றம் அப்புதியக்கட்டிடத்தில் தான் கி.பி 1952-57 வரையில் செயல்ப்பட்டது.

மேற்கண்ட சட்டமன்ற வரலாறு எதுக்குனு குழம்பலாம், விசயமிருக்கு,இன்று அம்மா திரையங்கத்தினை நக்கலடிக்கும் கழக சொம்புகள் ஒன்றினை  வசதியாக மறந்து விட்டார்கள், சென்னையில் முதல் அரசு திரையரங்கினை  1974 இல் உருவாக்கியது வேறு யாருமல்ல சாட்சாத் மஞ்சத்துண்டு அய்யா அவர்களே :-))



ஆமாம் அப்பழைய சட்டமன்ற வளாகத்தினை  கி.பி 1974 இல் மேம்படுத்தி , 1039 நபர்கள் அமரும் வகையில் திரையரங்காகவும், மாலையில் நாடக அரங்காகவும் செயல்படும் வகையில் மாற்றி கட்டி,அதற்கு கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவாக "கலைவாணர் அரங்கம்" எனப்பெயரிட்டார்கள். எனவே சென்னையில் முன்னரே அரசால் திரையரங்கம் நடத்தப்பட்டுள்ளது  என்பது தெளிவாகும்.

லாபகரமாக இயங்கியதா என்ற கேள்விக்குள் எல்லாம் போகத்தேவையிலை ,கலைவாணர் அரங்கு 2009 வரையில் சிறப்பாகவே இயங்கியது, மாலையில் பி.சி சர்க்கார் மேஜிக் ஷோ, நாடகம் போன்றவை நடக்கும்,பகல் வேலையில் இரு காட்சிகள் மட்டும் ஆங்கிலம்,தமிழ் என ஏதேனும் திரைப்படங்களை மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள்.

நானே பல முறை பார்த்துள்ளேன்,முதல் வகுப்பு கட்டணமே 10 அல்லது 12 ரூ என இருக்கும், பெரும்பாலும் பல இடங்களில் ஓடி முடித்த திரைப்படங்கள் அல்லது உலக திரைப்பட வரிசையில் வந்த படங்களை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை  வாங்கி திரையிடும், சில சமயங்களில் "கிளாசிக்கான ஸீன்" படங்களும் காணக்கிடைக்கும் ஹி...ஹி!

(இடிப்பட்ட கலைவாணர்)

இத்தகைய பாரம்பரியமிகு கலையரங்கை 2009 இல் புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என இடித்து தள்ளியதும் ,மாண்புமிகு மஞ்சத்துண்டு அவர்களே, மேலும் புதிதாக ஒரு கலையரங்கு கட்டி கலைவாணர் பெயரே வைப்பேன் என வாக்குறுதியளித்தார் , அவசரமாக அரைகுறையாக தலைமைச்செயலகத்தினை கட்டி திறந்தாரே ஒழிய "கலையரங்கை கட்ட மறந்துவிட்டார்" அவ்வ்!

சென்னையில் மட்டுமல்ல திருச்சியில் கூட மாநகராட்சியின் சார்பில் "கலையரங்கம்" என்ற தியேட்டர் கட்டப்பட்டு ,இன்றளவும் இயங்கி வருகிறது,தற்சமயம் நீண்டக்கால குத்தகைக்கு விடப்பட்டு ,டிடிஎஸ், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில் "கதிர் வேலன் காதலை" மக்களுக்கு காட்டி மகிழ்வித்து வருகிறது!



இது போன்று நெய்வேலி நகரியத்தில் ,  மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ,பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் "அமராவதி" என்ற திரையரங்கம் நடத்தப்பட்டது, தற்சமயம் செயல்பாட்டில் இல்லை.

எனவே அரசு எந்திரங்களின் சார்பாக திரையரங்குகள் கட்டி நிர்வாகிப்பது ஒன்றும் வழக்கில் இல்லாத செயல் அல்ல.

கம்யூனிச நாடுகளில் எல்லாம் வழக்கமாகவே திரைப்படத்தயாரிப்பு,விநியோகம், திரையிடல் என அனைத்தையும் அரசே செய்யும்(முன்னாள் சோவியத் யூனியன்) ,அவர்களை உதாரணம் காட்டக்கூடாது என்றே ஜனநாயக நாடுகளை சொல்லியுள்ளேன்.

#  இந்திய அளவில் ,திரைப்படங்களின் வளர்ச்சிக்காக தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (NFDC formerly Film Finance Corporation)என ஒன்று நிறுவப்பட்டு , பல படங்களை அரசின் நிதியில் தயாரிக்கப்படுகின்றன.



ஜி.வி.அய்யரின் மகாபாரதம்(முதல் சமஸ்கிருத மொழிப்படம்) , மேலும் சலீம் லாங்டே பீ மாத் ரோ ,மீரா நாயரின் மிர்ச்சி மசலா,சலாம் பாம்பே,மம்முட்டி நடித்த "பாபா சாகெப் அம்பேத்கார்" ,டிரெயின் டு பாகிஸ்தான், ஷபனா அஸ்மி நடித்த தாராவிபோன்ற விருது வென்றப்படங்கள் எல்லாம் NFDC ஆல் தயாரிக்கப்பட்டவையே.



தமிழிலும் பல படங்கள் NFDC நிதியில் தயாரிக்கப்பட்டுள்ளன, பாலு மகேந்திராவின்(காலம் சென்ற) வீடு,சந்தியாராகம் , மகேந்திரனின் "சாசனம்", ஹரிஹரனின் "ஏழாவது மனிதன்" கே.எஸ்.சேதுமாதவன்(கேரளா)இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடித்த "மறுபக்கம்"போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் புதுமுக இயக்குனர்கள், பிரபல இயக்குனர்கள் என அனைவருக்கும் NFDC நிதியளித்து உதவியது ,சமீபகாலமாக புதுமுக இயக்குனர்களுக்கு படம் தயாரிக்க நிதியளிப்பதில்லை( தற்காலிகமாக அனைத்து படத்தயாரிப்பினையும் நிறுத்தியுள்ளார்கள்). தற்சமயம் இணையத்தில் கட்டண சேவையாக படங்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.

அரசின் நிதியில் திரைப்படங்கள் தயாரிக்கலாம் எனில் திரையரங்குகளும் கட்டலாம் தானே!

# பொருளாதார சாத்தியம்.


திரையரங்குகளை அரசே நடத்தினால் அவற்றிற்கு நல்ல திரைப்படங்கள் கிடைப்பது கடினம் மேலும்  பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் விநியோக விலை அதிகம் அவற்றினை வாங்கி மலிவாக திரையிட்டால் நட்டம் வரும் என்கிறார்கள்.

ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது ,இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படுகின்றது, இதனை சரி கட்டும் விதமாக , வரிவிலக்கு பெற்ற படங்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிகளை "திரைப்பட *பிரதி" தயாரிப்பு செலவின் விலைக்கு மட்டுமே அரசிற்கு விற்க வேண்டும் என சட்டம் போடலாம்.

* பிரதி தயாரிப்பு செலவு தற்போது டிஜிட்டல் DCP க்கு சுமார் 50 ஆயிரங்கள் மட்டுமே

இப்படி செய்வது அரசே ,அதிகார துஷ்பிரயோகம் செய்யும் செயல் என நினைக்கலாம், அப்படியல்ல வழக்கமாக தேசிய விருது வென்ற படங்களின் ஒரு பிரதியை,படப்பிரதியிட ஆகும் செலவுக்கே தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்திற்கு கொடுக்க வேண்டும் என விதி இருக்கு.

அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்வார்கள், தூர்தர்ஷனிலும் ஒளிப்பரப்பிக்கொள்வார்கள். விருது கிடைக்குது எனில் படப்பிரதி விலைக்கு விற்கும் தயாரிப்பாளர்கள் ,வரி விலக்கு கிடைக்க,படப்பிரதியின் விலைக்கு கொடுக்க கூடாதா?

இது நம்ம நாட்டில மட்டும் இல்லை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு படம் அனுப்பினாலும் இப்படி ஒரு பிரதியை கொடுக்கணும், அவர்கள் அவற்றை எல்லாம் ஆஸ்கார் பெஸ்ட் மூவி கலெக்‌ஷன்" என டிவிடி போட்டு விற்றுக்கொள்வார்கள் அவ்வ்!

மேலும், ஆஸ்கார் நாமினேஷன் செய்யும் போது தயாரிப்பாளர் சுமார் 200 டிவிடி பிரிண்டுகளும் இலவசமாக அளிக்கனும், அதெல்லாம் ஜூரிகள் பார்க்கவாம்!

பல கோடி ரூபாய்கள்  மதிப்பில் கேளிக்கை வரிச்சலுகை கொடுக்கும் அரசுக்கு பதில் கைமாறாக இதனைக்கருதி தயாரிப்பாளர்கள் செய்யலாம்,செய்வார்கள்! அம்மையார் உத்தரவு இட்டால் மீற முடியுமா,இல்லை மீறித்தான் படமெடுக்க முடியுமா!!!

# மேலும் பல எண்ணற்ற சிறு,குறு முதலீட்டு திரைப்படங்களுக்கு அரங்கம் கிடைப்பதேயில்லை எனவே அவர்களுக்கும் பெரும்பயனாக இருக்கும்.

# தற்பொழுதெல்லாம் குறும்படம் தயாரிப்பவர்களும் ,மெனக்கெட்டு பிரிவியூ தியேட்டர்களை அதிக வாடகைக்கு பிடித்து திரையிட்டு காட்டுகிறார்கள், அவர்களுக்கு மலிவான கட்டணத்தில் திரையிட அனுமதியளிக்கலாம். இது திரைக்கலையினை வளர்க்க உதவும்.

# சென்னையில் மட்டும் சில திரையரங்குகள் அமைப்பதை விட தமிழகம் முழுவதுமே மாவட்டம் தோறும் சில அரங்குகள் அமைத்து விட்டு ,சென்னையில் ஒரு மத்திய திரைப்பட ஒளிப்பரப்பு சேவை வழங்கியை நிறுவி அனைத்து அரங்குகளிலும் ,செயற்கை கோள் மூலம் திரையிட செய்யலாம்,எனவே ஒன்றிரண்டு டிஜிட்டல் பிரிண்ட் கிடைத்தாலே பல அரங்குகளில் திரையிட்டு ,குறைவான செலவில் அதிக வருவாய் திரட்ட முடியும்.

# ஒவ்வொரு திரையரங்க வளாகத்திலும் ,கடைகள்,உணவங்கள் அமைக்க இடம் ஒதுக்கி வாடகைக்கு விடலாம்,எனவே நிரந்தர வருவாய் நிச்சயம்.

இவ்வாறு பல்வேறு வருவாய் வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்ப்படுத்தினால் அரசின் திரையரங்க திட்டத்தின் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும், இயக்குதல் ,பராமரிப்பு செலவீனங்களை சமாளிக்கவும் இயலும்,நட்டம் தவிர்க்கப்படும்.

மலிவுக்கட்டண திரையரங்குகள் உருவானால் ,தற்போதுள்ள திரையரங்குகள் அடிக்கும் கட்டண கொள்ளைக்கு சாவு மணியாக அமையும், மொக்கைப்படத்துக்கெல்லாம் 100 ரூக்கு மேல் அழும் மக்களுக்கு பெரிதும் உதவும்.

சேவை மற்றும் தொழில் துறை ஆகியவற்றை எல்லாம் அரசே நடத்துவது என்பது பொதுவுடமை சித்தாந்தம் ஆகும் .அம்மா குடிநீர்,உணவகம், அம்மா திரையரங்கம் என பல பொதுவுடைமை வணிக நிறுவனங்கள் அரசால் துவக்கப்படுவதை பார்த்தால் வருங்காலத்தில் , தமிழ்நாடு சோசலிச அரசாக மாறினாலும் ஆச்சர்யமில்லை, எல்லாம் செவப்புத்துண்டு கட்சிக்காரங்களோட வச்சிருக்க கூட்டணி சவகாச தோஷமோ என்னவோ!!!

ஒரு உற்சாக குறிப்பு:

பதிவை கவர்ச்சிகரமாக எழுதனும்னு நினைச்சாலும் ,அப்படி ஒரு அசாம்பாவிதம் நம்ம எழுத்துல நடக்கவேயில்லையேனு ஒரே ஃபீலிங்ஸ், எனவே, ஹி...ஹி இன்னொரு படம் போட்டுக்கிறேன் !

(என்னப்பார்வை உந்தன் பார்வை...ஹி..ஹி)

-------------------------
பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

# http://en.wikipedia.org/wiki/Royal_National_Theatre

#http://en.wikipedia.org/wiki/Shakespeare_Memorial_Theatre

#http://www.nationaltheatre.org.uk/support-us/why-support-the-national-theatre/national-theatre-live-digital-innovation

# http://www.cnc.fr/web/en/missions

#  http://www.nfdcindia.com/

# http://stats.uis.unesco.org/unesco/TableViewer/tableView.aspx

மற்றும் விக்கி,யூ டியூப், கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------------